மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது : அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது :  அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக அனைத்து கட்சிகளும் உறுதி அளித்துள்ளன.

தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.

அதுமட்டுமில்லாமல், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பேசினார். அதுபோன்று, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கடந்த 6ஆம் தேதி, டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது பிரச்சினை குறித்து பேசி, ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிடுவது மாதிரி தெரியவில்லை.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

கொரோனாவை தொடர்ந்து மேகதாது பிரச்சினைக்காக அனைத்து கட்சி கூட்டம் இரண்டாவது முறையாக கூடியது.

இன்று(ஜூலை 12) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, விசிக சார்பில் திருமாவளவன் ரவிக்குமார், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், துரைசாமி, இடது சாரிகள் கட்சி முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி, கொமதேக ஈஸ்வரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”மேகதாது அணை பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த வேண்டும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கட்டுமானப் பணியை தொடங்கிய கர்நாடக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

”மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும்” என்று பாஜக வி.பி.துரைசாமி, கூறியிருக்கிறார்.

“அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிபிஎம் ஆதரவு தரும். மேகதாது விவகாரத்தில் முதல்வர் தலைமையில் குழுஅமைக்க வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

இதையடுத்து, மேகதாது அணை திட்டம் தொடர்பாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகையில் மாநிலங்களின், முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று வழங்குவது ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 12 ஜூலை 2021