மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

கொங்குநாடு: பின்வாங்கிய பாஜக

கொங்குநாடு: பின்வாங்கிய பாஜக

கொங்குநாடு சர்ச்சையில் பாஜக திடீர் விளக்கம் அளித்து பின் வாங்கியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்து அண்மையில் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றார் எல். முருகன். அவரைப் பற்றி ஒன்றிய அரசு வெளியிட்ட குறிப்பில், ‘எல். முருகன், கொங்குநாடு,தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய அரசியலமைப்பு ரீதியாக கொங்குநாடு என்ற வார்த்தைப் பயன்பாடு இல்லையென்றபோதிலும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பற்றிய குறிப்பில் இடம்பெற்றிருந்த இந்த கொங்குநாடு என்ற வார்த்தை தமிழகத்தில் பெரும் விவாதமாகியது.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டில் இருந்து கொங்குநாட்டை பிரிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது, அதன் சங்கேதம்தான் இந்த குறிப்பில் இடம்பெற்ற கொங்குநாடு என்ற வார்த்தை என்று அரசியல் களம் பற்றி எரிந்தது.

அதிமுகவில் கொங்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட இதுபற்றி கருத்து கூறாத நிலையில் பாஜகவின் பல நிர்வாகிகள் கொங்குநாட்டை பிரித்தால் என்ன தவறு என்றெல்லாம் சமூக தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரங்கமாக பேசினார்கள். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயண திருப்பதி போன்றோர் கொங்குநாட்டை ஆதரித்தே பேசினார்கள்.

ஆனால் அதிமுக இதில் மௌனம் காத்தது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கொங்குநாடு என்ற முழக்கத்தை கடுமையாக கண்டித்தன. இது சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு, உளறல் என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். ஒன்றிய அரசை ஆளும் பாஜக தமிழகத்தை பிரித்தாள முயற்சிக்கிறது. அது நடக்காது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இவ்வாறு இதற்கு எதிர்ப்பு வலுவான நிலையில், தமிழக புதிய பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. பாஜகவினர் பலரும் கொங்குநாட்டை ஆதரித்துப் பேசிய நிலையில், இன்று (ஜூலை 12) பாஜகவின் தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் ஒரு முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“கொங்குநாடு குறித்தும் தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல. இதுகுறித்து தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமான முறையில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை.

எனவே நம்முடைய தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக பாஜக கூட்டங்களில், பத்திரிகைப் பேட்டிகளில் , சமூக வலைதளங்களில் யாரும் இது பற்றி கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொங்கு நாடு என்பது வரலாற்று ரீதியாக அன்றைய சிறு குறு நில மன்னர்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அழைப்பது உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கொங்குநாடு உருவாக வேண்டும் என்பது பாஜக கருத்து அல்ல.

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்பது தான் பாஜகவின் லட்சியம் . நம்முடைய நல்லெண்ணங்களை சிந்தனைகளை கருத்துகளை யாரும் திரித்து வெளியிட்டு , சமூகவலைத்தளங்களின் செயல்படும் தமிழின விரோத சக்திகள் மக்களை குழப்புவதற்கு இடம் தரவேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களாக டெல்லியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பிய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஊடகப் பிரிவுத் தலைவர் பிரசாத்.

நேற்று (ஜூலை 11) திருப்பூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், “கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தல்ல. ஊடகங்களில் வெளிவருவது பாஜகவின் கருத்தாக முடியாது. உயர்மட்டக் குழுவே இதுபற்றி முடிவெடுக்கும்” என்று கூறினார்.

இதன் மூலம் கொங்குநாடு சர்ச்சையில் பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததால், பாஜக பின் வாங்கியிருக்கிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 12 ஜூலை 2021