மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

சிதம்பரத்தை தலைநகராக்கி தனி மாநிலம்: அழகிரி

சிதம்பரத்தை தலைநகராக்கி  தனி மாநிலம்: அழகிரி

தமிழ்நாட்டில் இருந்து கொங்குநாடு பிரிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள் சமூக தளங்களில் தீவிரமாக போய்க் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து இன்றும் (ஜூலை 11) அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன்: (அமமுக பொதுச் செயலாளர்)

தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.

எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.

எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.

கனிமொழி( திமுக)

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அதுபற்றி யாரும் கவலைப்பட முடியாது. யூனியன் கவர்ன்மென்ட் என்றால் நிச்சயமாக ஒன்றிய அரசுதான். அரசியலமைப்பு சட்டத்திலேயே அப்படித்தான் இருக்கிறது. அதனால் அதில் ஒன்றும் தவறில்லை. அது நாட்டுக்கு எதிரானதுமில்லை.

கே.எஸ். அழகிரி( தமிழக காங்கிரஸ் தலைவர்)

கொங்குநாடு என்று ஒரு நாடு அமையாது. அது ஒரு கற்பனை. அப்படி அமைந்தால் அது கொங்குநாட்டுடனா முடிந்துவிடும்? அதை வைத்து மேலும் ஏகப்பட்ட நாடுகள் தமிழ்நாட்டில் வரும். நமக்கு அழகான தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு இருக்கிறது. அதுவே நமக்கு போதுமானது.

கோவையை ஒரு தலைநகரமாக ஆக்க வேண்டும், திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது திருச்சியை தலைநகரமாக்க வேண்டும் என்று கூட சொன்னார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை இருக்கிற போது, மற்ற தலைநகரங்கள் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் அதெல்லாம் பெரும் பொருட்செலவு மிக்க திட்டங்கள். அதைவிட முக்கியமான செலவுகள் தமிழ்நாட்டுக்கு இருக்கின்றன. அதை கல்விக்காக, தொழில் மேம்பாட்டுக்காக செலவு செய்யலாம். பொருட் செலவு அதிகம் செய்யும் அளவுக்கு தமிழக அரசின் நிதி நிலைமை இல்லை.

சிதம்பரத்தைத் தலைநகராக வைத்து தனி மாநிலம் வேண்டுமென்று எனக்குக் கூடத்தான் ஓர் ஆசை இருக்கிறது. அப்படி சொல்லலாமா? இதெல்லாம் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். முக்கியமான விவகாரங்களில் இருந்து மக்களைத் திருப்புவதற்காக சொல்லப்படும் காரியம் இது.

தமிழகத்தைப் பிரிப்பது ஒரு காலத்திலும் இயலாத காரியம். சிலர் அரசியல் காரணங்களுக்காக இதை சொன்னாலும் மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகம் பரந்துபட்ட தமிழகமாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும். பாரதியஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் இது. இதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறியிருக்கிறார் கே.எஸ். அழகிரி.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 11 ஜூலை 2021