மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

கைதைத் தவிர்க்க திமுகவில் சேர்ந்தாரா தோப்பு வெங்கடாசலம்?

கைதைத் தவிர்க்க திமுகவில் சேர்ந்தாரா தோப்பு வெங்கடாசலம்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு பலர் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பாக சீட் கேட்டு கிடைக்காமல், சுயேச்சையாக போட்டியிட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று (ஜூலை 11) திமுகவில் இணைந்திருக்கிறார்.

ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பேசுகையில், “நாங்கள் நிதியைத் தேடி வரவில்லை உதயநிதியைத் தேடி வந்திருக்கிறோம். மாண்புமிகு தளபதி அவர்களே தமிழகத்திலே மாபெரும் சக்தியாய் திமுக இருந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை என்ற உங்கள் ஏக்கத்தைப் போக்கும் அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இனி 100 சதவிகித வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிப்போம். இப்போது 905 அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் இன்றைக்கு கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மணியோசைதான்....எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால் 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைத்துக் காட்டுகிறேன்”என்று பேசினார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சேவை இயக்க நிர்வாகி நந்தகுமார் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜசேகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“2017 முதல் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க கலெக்டரிடம் புகார்கள் கொடுத்தார் நந்தகுமார். அதில் அப்போது அதிமுகவில் இருந்த தோப்பு வெங்கடாசலம் சம்பந்தப்பட்டிருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் சென்று மணல் கொள்ளை பற்றி சிபிஐ விசாரணை கேட்டார் நந்தகுமார். இதன் பேரில் 2-7-19 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வழக்கை விசாரித்து, ’இது சிபிஐ விசாரணைக்கு உகந்த வழக்குதான். ஆனால் இதை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்’என்று உத்தரவிட்டார்.

அதன்படி 2020 மார்ச் 3 ஆம் தேதி தோப்பு வெங்கடாசலத்துக்கு நெருக்கமான சேனாபதி, சின்னக்கண்ணு, சுப்பிரமணியம், பால்கி மணி இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. ஆனால் நீதிபதி தன் தீர்ப்பிலேயே தோப்பு வெங்காடசலம் பெயரைக் குறிப்பிட்டும் அவர் மீது வழக்குப் பதியவில்லை.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்று குற்றம் சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மணல் கொள்ளை குறித்த இந்த வழக்கில் சிபிசிஐடியின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். அப்படி துரிதப்படுத்தினால் தோப்பு வெங்கடாசலமும் கைது செய்யப்பட வேண்டிய நிலை வரும். இன்றும் என் கட்சிக்காரர் நந்தகுமார் போலீஸ் பாதுகாப்போடு இருக்கிறார். அவரது பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்வர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார் வழக்கறிஞர் ராஜசேகர்.

ஆனால் இன்று (ஜூலை 11) காலையில் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் சால்வை போட்டு வரவேற்க திமுகவில் சேர்ந்துவிட்டார் தோப்பு வெங்கடாசலம்.

தோப்பு திமுகவில் சேரப் போகிறார் என்று தெரிந்துகொண்டு இதைச் சொல்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்க, “அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நாங்கள் வழக்கு பற்றி மட்டும்தான் பேசுகிறோம்” என்றார் நந்தகுமாரின் வழக்கறிஞர்.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 11 ஜூலை 2021