மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

கட்சியினருக்கு அரசுப் பதவிகள்: களமாடும் திருமாவளவன்

கட்சியினருக்கு அரசுப் பதவிகள்: களமாடும் திருமாவளவன்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுகவோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியபோது விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறு தொகுதிகள் என்று திமுக முடிவு செய்தது. விடுதலை சிறுத்தைகள் அதிகமாகக் கேட்டும் அந்த முயற்சி பலனளிக்காமல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி, விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் என்று முடிவு செய்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அன்று திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்துவிட்டு இறுகிய முகத்தோடு வெளியே வந்த திருமாவளவன்.

“தொகுதிப் பேச்சுவார்த்தை நடத்தியதில் 6 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் உயர் நிலை குழுவில் தலைமை நிர்வாகக் குழுவில் அதிருப்தி தெரிவித்து, உடன்பாடு செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழகத்தின் சூழலில் கருத்தில் கொண்டு மதச் சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது, அப்படி சிதறுவதற்கு நாங்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆறு தொகுதிகளிலும் தனி சின்னத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம்”என்று அறிவித்தார்.

தேர்தல் நேரத்தில் இந்த வருத்தம் இருந்தாலும் ஆறு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் நின்று 13 நாட்களில் அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றனர் சிறுத்தைகள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஜூலை 8ஆம் தேதி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழகத்தில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பட்டியல் இனத்தவருக்கு துணைவேந்தர் பதவிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,

“கடந்தவாரம் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் இது தொடர்பாக மனு வழங்கியிருக்கிறோம். இப்போது ஆளுநரை சந்தித்திருக்கிறோம். தற்போது அண்ணா, அழகப்பா பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க இருக்கிறார்கள். இந்தப் பதவி இடங்களுக்கு பட்டியல் சமூகத்தினரும் விண்ணப்பித்துள்ளனர். அதை கணக்கில் கொண்டு இப்பல்கலைக் கழகங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். ஆளுநர் இதுகுறித்து என்னிடம் விளக்கினார். இந்தப் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்றும், தமிழக அரசு இதுபோன்ற விஷயங்களில் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தால் அதை ஏற்று இசைவளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

ஆளுநரும், முதல்வரும் இனி நியமிக்கப்பட இருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு பட்டியலினத்தவரையும் இடம்பெறச் செய்ய ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமல்ல, கடந்த சில நாட்களாகவே அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கடலூர் மாவட்ட அமைச்சர் கணேசன் உள்ளிட்டோரை தொடர்ந்து சந்தித்து வருகிறார் திருமாவளவன். அமைச்சர் வேலுதான் தேர்தலுக்கு முன்பு திமுகவின் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தவர். அந்த வகையில் ஆளுநரை சந்திப்பதற்கும் முன் வேலுவை சந்தித்த திருமாவளவன், “திமுக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு அரசின் வாரியம் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள பதவிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சட்டமன்ற சீட்டுகளைத்தான் கெடுபிடி காட்டி குறைத்துவிட்டீர்கள். இதையாவது செய்யுங்கள். கட்சியினர் இதை எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். வேலுவும், “முதல்வரிடம் இது தொடர்பாக பேசுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தை வட்டாரங்களில் விசாரித்தபோது, “முதல்வரையும் ஆளுநரையும் துணை வேந்தர் தொடர்பான நியமனங்களுக்காக சந்தித்த திருமாவளவன், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் நியமனப் பதவிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு உரிய பங்கைப் பெறுவதில் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில்தான் தொடர்ந்து அமைச்சர்களை சந்திப்பதில் கவனம் செலுத்துகிறார். திமுக எந்த அளவுக்கு இதில் சிறுத்தைகள் கோரிக்கைக்கு மதிப்பளிக்கிறது என்பதைப் பொறுத்து சிறுத்தைகளின் தொடர் அரசியல் செயல்பாடுகள் இருக்கும்” என்கிறார்கள்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 11 ஜூலை 2021