மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

திமுக ஆட்சி : தொண்டர் உயிர் காணிக்கை!

திமுக ஆட்சி :  தொண்டர் உயிர் காணிக்கை!

கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் கைப்பற்றிய தற்கொலை கடிதத்தில் செந்தில் பாலாஜி அமைச்சரானால் தன் உயிரைக் காணிக்கையாக்குவதாகக் கடவுளிடம் வேண்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் லாலா பேட்டையைச் சேர்ந்தவர் சு.உலகநாதன்(60). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தீவிர திமுக அபிமானி. ஆனி அமாவாசை நாளான நேற்று (ஜூலை 9) மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயில் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து கோயில் வளாகத்துக்குச் சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது உலகநாதன் எழுதி வைத்திருந்த இரண்டு பக்க கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில், மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கு வணக்கம். நான் தேர்தல் அறிவித்த உடன் ஆட்சி மாற்றம் வரவேண்டும். தமிழக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். கரூர் தொகுதியின் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டுமென மண்மங்கலம் காளி அம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்தேன்.

அறுதி பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றதைப் பார்த்து, எங்கள் அன்பு அண்ணியார் துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

முதல்வர் பதவி ஏற்ற போது கொரோனா பரவல் 36 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. இது குறைந்து எல்லோரும் நலம் அடைந்த பிறகு என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என காலதாமதம் செய்து விட்டேன்.

எனவே என் சுயநினைவுடன் இறப்பை தேடுகிறேன். என் இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக நல்ல முறையில் பணி பரிந்து வருகிறார். அவரை கரூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்து அமைச்சர் அவர்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள் இது மட்டும் தான் என் இறுதி ஆசை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உலகநாதனின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதைத் தொடர்ந்து பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் காணிக்கையாகத் தனது நாக்கை அறுத்துக் கொண்டார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், இந்த செய்தியை அறிந்து நடுக்கமுற்றேன். தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

திமுகவைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திமுகவின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திடக் கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 10 ஜூலை 2021