மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

துரோகம் என அன்றே சொல்லிவிட்டார் கமல்: மநீம துணைத் தலைவர்!

துரோகம் என அன்றே சொல்லிவிட்டார் கமல்: மநீம துணைத் தலைவர்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (ஜூலை 10) போராட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த போராட்டத்தில், மகேந்திரன், பத்ம பிரியா குறித்துப் பேசிய கட்சியின் துணைத் தலைவர், ‘துரோகம் என்று அன்றே கமல் சொல்லிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறினர். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகினார். அவரைத்தொடர்ந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் பத்ம பிரியா ஆகியோர் விலகினர்.

அவர்கள் நேற்று முன்தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது, திமுகவில் இணையும் 11,188 பேரின் விவரங்கள் அடங்கிய தொகுப்பையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் மகேந்திரன்.

இதனிடையே மக்கள் நீதி மய்யத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிய போது, கமல் கூடாரம் கலைகிறது என்றெல்லாம் பேசப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக மகேந்திரன் ஒரு துரோகி என்றும் என் உயிர் உள்ள வரை அரசியலில் இருப்பேன் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மகேந்திரன், பத்ம பிரியா என எத்தனை பேர் கட்சியை விட்டுப் போனாலும், கமல் கூடாரம் கலையவில்லை என்று நிரூபிக்கும் வகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியது மநீம.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மௌரியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஏணி வடிவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மௌரியா, “பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தி போராட்டக் களத்தில் இறங்கி இருக்கிறோம்.

உருமாறிய மக்கள் நீதி மய்யம், மக்கள் இயக்கமாகப் போராட்டத்தில் இறங்கி இருக்கிறது. வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அரசுகளால் ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். விலையைக் குறைக்கும் வரை எங்களது போராட்டம். இது முதல் போராட்டம் என்பதால் கமல் கலந்துகொள்ள வில்லை. அதோடு கொரோனா காலம் இது. இந்த சூழலில் கமல் பொது இடத்துக்கு வந்தால் மக்கள் கூட்டம் அதிகமாகி விடும் என்பதாலும் போராட்டத்துக்கு வரவில்லை. நாங்களும் சமூக இடைவெளிவிட்டுத்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.

அப்போது அவரிடம் மகேந்திரன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “துரோகம் என்று அன்றே கமல் சொல்லிவிட்டார். யார் என்றே அடையாளம் தெரியாமல் இருந்தவர்கள், அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கிப் பிற கட்சியில் இணைந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ” என்று கூறினார்.

தொடர்ந்து, கேஸ் சிலிண்டர் உயர்வைக் கண்டித்து செங்கல் அடுப்பில் சமைப்பது போல் பெண்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பூனை விலைக்குக் கச்சா எண்ணெய்யை வாங்கி, வரி மேல் வரி போட்டு யானை விலைக்கு விற்பனை செய்வதாக ஒன்றிய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மதுரையில் சிலிண்டரை பாடையில் வைத்து எடுத்துச் சென்று மக்கள் நீதி மய்யத்தினர் போராட்டம் நடத்தினர்.

தென்காசி போஸ்ட் ஆஃபீஸ் எதிரிலும் மநீமவின் ஏணி போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் பழனி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும், உதகை ஏடிசி வளாகம் முன்பும், பொள்ளாட்சி துணை ஆட்சியர் அலுவலகம் முன்பும், திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகிலும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியிலும் மக்கள் நீதி மய்யத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், தர்மபுரி என மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தி, ஒன்றிய, மாநில அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏணிப் போராட்டம் நடத்தப்பட்டது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 10 ஜூலை 2021