மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

மணல்: விரைவில் முடிவெடுக்கும் முதல்வர்!

மணல்: விரைவில் முடிவெடுக்கும் முதல்வர்!

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களில் இருந்து கோரிக்கைகள் சென்றுள்ளன.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “தமிழ்நாடு முழுதும் ஒரு நாளைக்கு கட்டுமான பணிகளுக்காக 9ஆயிரம் லோடு வரை மணல்தேவை இருக்கிறது. ஆனால், அவ்வளவு மணல் இப்போது கிடைப்பதில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் இயங்கிய ஒரு சில குவாரிகளில் ஆன்லைன் விற்பனை மூலம் மணல் விற்பனை நடைபெற்றது. ஆனால், ஒரு லாரிக்கு ஆண்டுக்கு 3 லோடு மட்டுமே மணல் கிடைத்து வருகிறது. ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அரசு மணல் குவாரிகளை முறைப்படுத்தி நேரடியாக லாரிகளுக்கு மணல் தரும் முறையை செய்ய வேண்டும். தற்போது மழை அதிகம் பெய்துள்ளதால் அனைத்து ஆறுகளிலும் மணல் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி புதிய மணல் குவாரிகளை இயக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனமும் கோரிக்கை வைத்துள்ளது. இதன் தலைவர் செல்வ. ராசாமணி, “2017 ஜூன் மாதத்துக்கு முன் அரசு மணல் குவாரிகள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வந்தன. ஆனால் அதன் பிறகு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் மணல் வழங்கப்பட்டது. 2017 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நான்கு மணல் குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதனால் மணல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மணல் கடத்தல் அதிகமாகிவிட்டது. வெளி மாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்தில் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள், மணல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே தமிழக முதல்வர் அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த கோரிக்கைகளின் எதிரொலியாக அரசு மணல் குவாரிகளை முறைப்படுத்தித் திறப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் பொதுப்பணித்துறைக்கான ஆலோசனைக் கூட்டத்தை வரும் வாரத்தில் நடத்த இருக்கிறார். அந்த ஆலோசனையில் மணல் குவாரிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்கிறார்கள்.

இந்த நிலையில் மணல் கான்ட்ராக்ட் யாருக்கு கொடுக்கப்படும் என்பது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும், மணல் வட்டாரத்திலும் சூடுபிடித்துள்ளன.

“மணல் குவாரிகளுக்கான கான்ட்ராக்ட புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்படும் என்றும் ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் மணல் கான்ட்ராக்ட் எடுத்திருந்த கரூர் கேசிபழனிசாமிக்கு கொடுக்கப்படலாம் என்றும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு விவாதங்கள் நடக்கின்றன.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 10 ஜூலை 2021