அதிமுக மாசெக்கள் கூட்டம்: சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் இல்லை- ஏன்?

politics

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 9) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாசெக்கள் கூட்டம் நடக்கும் நாளான நேற்று கூட அரியலூர் முன்னாள் மாசெவும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளவழகன், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நரசிம்மன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலாவின் தொடர் ஆடியோ அரங்கேற்றம், ஒற்றைத் தலைமை போன்ற பரபரப்புகள் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நேற்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அமைதியாக நடந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பொதுவான அறிவுரையாக வழங்கிய எடப்பாடி, “மாவட்டச் செயலாளர்கள் இனி தங்கள் மாவட்டங்களில் கட்சியினரின் வீட்டு நல்லது கெட்டதுகளில் தொடர்ந்து கலந்துகொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்” என்று பேசியிருக்கிறார். ஓ.பன்னீரும் கட்சி நலன் பற்றியே பேசியிருக்கிறார்.

கூட்டத்தில் அதிமுகவின் பொன் விழாவை விமர்சையாகக் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற உத்தரவிடப்பட்ட சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நேற்றைய அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கேட்டதற்கு, “ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பேர் சசிகலாவிடம் பேசி வருகிறார்கள். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் இருந்தே இதுவரை 20க்கும் மேற்பட்டோர் சசிகலாவிடம் பேசிவிட்டார்கள். அவர்கள் அனைவரையும் அவரால் கட்சியை விட்டு இன்னும் நீக்கமுடியவில்லை.

இந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதி முதல் சேலம் புறநகர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்ற மாவட்டங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்டார். ஆனால் இன்னும் பல மாவட்ட அமைப்புகளில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக மாசெக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி தரப்பில் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லா மாவட்டங்களிலும் இன்னும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் மாசெக்கள் கூட்டத்தில் அதைக் கொண்டுவந்தால், சேலம் மாவட்டத்தில் இத்தனை பேர் சசிகலாவுடன் பேசியிருக்கிறார்களே… அதிமுக நிர்வாகிகள் திமுகவுக்குப் போயிருக்கிறார்களே போன்ற கேள்விகளை எழுப்பவும் சிலர் தயாராக இருந்தார்கள். அதனால் அதைத் தவிர்த்துவிட்டார் எடப்பாடி. மாவட்ட அமைப்புகளில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்ட சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் மாசெக்கள் கூட்டத்தில் முன் வைக்கப்படவில்லை. இதுவே சசிகலாவுக்கு ஒரு சமிக்ஞைதான்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *