மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

மேயர் ரேஸில் மகேந்திரன்: கொங்கு திமுகவில் குழப்பம்!

மேயர் ரேஸில் மகேந்திரன்: கொங்கு திமுகவில் குழப்பம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்து அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் நேற்று (ஜூலை 8) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர், “நான் திமுகவின் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். என்னோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 78 நிர்வாகிகளும் சேர்ந்திருக்கிறார்கள். மேலும் திமுகவில் இணையும் 11 ஆயிரத்து 188 பேரின் விவரங்கள் அடங்கிய தொகுப்பையும் தலைவரிடம் ஒப்ப‌டைத்துள்ளேன். இது கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால் கோவையில் விழாவாக நடத்தியிருப்போம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு மதிப்பு கொடுத்து அதை பிறகு நடத்துவோம்.

என்னுடைய அரசியல் பயணம் இரண்டரை வருடம்தான். நான் நம்பிக்கையாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன். ஆனால் அங்கே தலைமையின் செயல்பாடு சரியாக இல்லை. இந்த இரண்டு மாதத்தில் திமுக அரசின் செயல்பாடு மக்களுக்காக இருப்பதால், நான் திமுகவுக்கு வந்துள்ளேன். எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கோணும் என்பது தலைவருக்கு தெரியாமலா இருக்கும்” என்று கூறினார்.

இணைப்பு விழாவில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்,

"நான் தேர்தல் அறிவித்தபோதே இவருக்காக ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கொஞ்சம் லேட் ஆக வந்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் அவர்கள் ஒரு படத்தில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்பார். அதுபோல லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கும் மகேந்திரன் உள்ளிட்ட சகோதரர்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கு என்ன ஒரு கவலை என்றால், தேர்தலுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கோவையில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும். கொங்குமண்டலத்திலும் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்க முடியும்.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வெற்றிபெற்றிருந்தாலும் கோவை, சேலம் உள்ளிட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மாவட்டங்களில் நாம் வெற்றிபெற முடியாததை எண்ணி நான் வருத்தப்படுகிறேன். மகேந்திரன் அப்போதே வந்து சேர்ந்திருந்தால் அந்தக் கவலையும் இப்போது இல்லாமல் போயிருக்கும்"என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் போட்டியிட்டார். 2016 தேர்தலில் கோவை மாவட்டத்திலேயே திமுக வென்ற ஒரே தொகுதி சிங்காநல்லூர் தொகுதி. 2016 தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவின் நா. கார்த்திக் 75,459 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை முத்துவை விட 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார் அப்போது.

எனவே மீண்டும் நம்பிக்கையோடு 2021 இலும் அவரையே களமிறக்கியது திமுக. 2021 சட்டமன்றத் தேர்தலில் நா. கார்த்திக் சிங்காநல்லூர் தொகுதியில் 70,390 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் 81,244 ஓட்டுகளை பெற்று 10,854 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,

இதே தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் 36ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திக்கின் செயல்பாடுகளில் விமர்சனங்கள் பல இருந்தாலும் கமல்ஹாசனுக்காக மகேந்திரனுக்கு விழுந்த வாக்குகளும் திமுக தோல்வி அடைய ஒரு முக்கிய காரணம் என்று திமுகவினரே வெளிப்படையாகக் கூறினார்கள். ஆளுங்கட்சியின் அதிருப்தி வாக்குகளில் கணிசமானவை மக்கள் நீதி மய்யத்துக்கு சென்றதால்தான் திமுக கோவை மாவட்டத்திலே ஜெயித்த ஒரு தொகுதியும் கையை விட்டுப் போய்விட்டது என்றும் திமுக நிர்வாகிகள் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவின் தோல்விக்குக் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன் 11 ஆயிரம் தொண்டர்களின் ஆதாரங்களோடு நேற்று திமுகவில் சேர்ந்திருக்கிறார்.

இந்த இணைப்பு விழா நடக்கும் நேரம் மகேந்திரனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கோவையில் திட்டங்களை ஆய்வு செய்தல் பார்வையிடுதல் என்று பிசியாக இருந்தார். அவர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல கோவை திமுக நிர்வாகிகள் யாரும் மகேந்திரன் இணைப்பு விழா மேடையில் இல்லை.

மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பதவி அளிக்கப்படுமா என்று கோவை வட்டாரத்தில் விசாரித்தோம்.

"மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் துணைத் தலைவராக இருந்திருக்கும் மகேந்திரன் தொழிலதிபராகவும் இருக்கிறார். 11 ஆயிரம் பேரையும் 'திரட்டி' வந்திருக்கிறார். எனவே அவருக்கு முக்கியப் பதவி அளிக்கப்படலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

கோவையில் திமுகவை தோற்கடித்த காரணிகளில் ஒருவரான‌ மகேந்திரனை வைத்துக் கொண்டே அவர் முன்பே வந்திருந்தால் திமுக இன்னும் வலுவாகியிருக்கும் என்று ஸ்டாலின் பேசியிருப்பது கோவையில் உழைத்த திமுகவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தோடு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இரண்டரை வருடங்கள்தான் ஆகின்றன. அவரைப் பாராட்டலாம், ஆனால் அதற்காக அவர் வந்திருந்தால் கொங்கு திமுக வெற்றி சாத்தியப்பட்டிருக்கும் என்று ஸ்டாலினே சொல்வது கொங்கு திமுக தொண்டர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது போல உள்ளது.

இப்போதே மகேந்திரன் கோவை மாநகராட்சி மேயர் பதவியை கேட்பதாக தகவல் இங்கே பரவிக் கிடக்கிறது. அதனால் கோவை மேயரை குறிவைத்திருக்கும் திமுக பிரமுகர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்கள். ஸ்டாலின் அவரைப் புகழ்ந்திருக்கும் வார்த்தைகளைக் கேட்டால் கட்சிப் பதவியும் அளிப்பார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. மகேந்திரன் செட்டியார் சமூதாயத்தைச் சேர்ந்தவர். பண பலம் மிக்கவர். இந்த பின்னணியில் அவர் கொங்கு திமுகவில் முன்னிறுத்தப்படுவது இப்போது திமுகவுக்குள் விவாதமாகியிருக்கிறது" என்கிறார்கள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வெள்ளி 9 ஜூலை 2021