மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வரைக் கேட்கும் ராமதாஸ்

அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வரைக் கேட்கும் ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று மீண்டும், மீண்டும் கூறி வரும் கர்நாடக அரசு, அதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து இந்த வார இறுதியில் சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று இது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடமும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

நேற்று (ஜூலை 8) ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

“பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாட்டு அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதன்மை வழக்குகள் எதுவும் இல்லை; ஒரே ஒரு இடைச்செருகல் மனு மட்டும் தான் நிலுவையில் உள்ளது என்றும், அதை உடைத்தும், மத்திய அரசிடம் உரிய அனுமதிகளைப் பெற்று அணை கண்டிப்பாக கட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தமிழ்நாட்டிடம் உறுதியளித்த பிறகும் கூட அணையை கட்டியே தீருவோம் என்று அம்மாநில அரசு கூறுவதும், அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதும் இரு மாநில உறவை சீர்குலைத்து விடும். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அத்துமீறலை கர்நாடகம் கைவிட வேண்டும்.

கர்நாடக அரசின் இந்தப் போக்கு இரு மாநில உறவுகளுக்கு எதிரானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விஷயத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டதுடன் நமது கடமை முடிந்துவிட்டதாக நினைத்து தமிழக அரசு ஒதுங்கிவிடக் கூடாது. மேகதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்த அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருந்தாலும் கூட, அதை மட்டுமே நம்பிக் கொண்டு மேகதாட்டு அணை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து விடக் கூடாது” என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், இந்த விவகாரத்தில் மோடி அரசையும் கடுமையாக குறை கூறியுள்ளார்.

“மேகதாட்டு அணை விவகாரத்தில் கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாக இருந்த பலரும் இதே போன்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தான் கடந்த 2018 ஆம் ஆண்டில் மேகதாட்டு அணைத் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இப்போதும் கூட ‘விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததாலேயே மேகதாட்டு அணையை கர்நாடகம் கட்டிவிட முடியாது’ என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்துள்ள மத்திய அமைச்சர், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாகவோ, அந்த அனுமதியின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எந்த ஆவணமும் செல்லாது என்றோ கூறவில்லை. இத்தகைய சூழலில் அரசியல் காரணங்களுக்காக மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தின் பக்கம் மத்திய அரசு சாயாது என்பதற்கு உத்தரவாதமில்லை.

மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி புதுப்புது உத்திகளை வகுத்து வரும் நிலையில், தமிழக அரசும் கர்நாடகத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும். மேகதாட்டு சிக்கலில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே அணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நிரூபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேகதாட்டு அணை குறித்த வழக்கை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்ட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 9 ஜூலை 2021