மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

பள்ளி ஆசிரியர் முதல் பாட நூல் கழகம் வரை: லியோனிக்கு எதிர்ப்பும் ஆதரவும்!

பள்ளி ஆசிரியர் முதல் பாட நூல் கழகம் வரை:  லியோனிக்கு எதிர்ப்பும் ஆதரவும்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக முன்னாள் ஆசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து நேற்று (ஜூலை 7) தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து சிறுபான்மை ஆணையத்துக்கு பீட்டர் அல்போன்ஸும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு பொன் குமாருக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் அந்த நியமனங்களை விட திண்டுக்கல் ஐ.லியோனியை பாடல் நூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டது சமூக தளங்களில் அதிக அளவு விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

திண்டுக்கல் லியோனி அடிப்படையில் பள்ளி ஆசிரியாக பணியைத் தொடங்கி பள்ளி ஆசிரியராக இருந்தபோதே பட்டிமன்றங்களில் பேசத் தொடங்கினார். கம்பன் கழகம் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் அமைப்புகளின் பட்டிமன்றங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம், பட்டிமன்றங்களை பாமரர்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ் சினிமாவில் சமுதாய நலம் பாடுபவை பட்டுக்கோட்டை பாடல்களா? கண்ணதாசன் பாடல்களா? என்பன போன்ற தலைப்புகளை எடுத்துக் கொண்டு உரையோடு பாடல்களையும் பட்டிமன்றத்தில் கொண்டு வந்தவர் லியோனி.

ஒரு கட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கத்தின் அப்போதைய கலை இலக்கிய இரவுகளில் லியோனியின் உரை வீச்சு தமிழகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இடது சாரி அமைப்பான தமுஎசவின் மேடைகளில் அடித்தட்டு மக்களின் வலியை அவர்களே ரசிக்கும் அளவுக்கும், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை முடிவில் நெஞ்சைச் சுடும் அளவுக்கும் தன் பேச்சின் மூலம் தமிழ்நாடு முழுதும் சென்று சேர்த்தவர் லியோனி. திண்டுக்கல் லியோனியின் நகைச்சுவை பேச்சுகள் ஒலிக்காத பஸ் நிலையங்களே கிடையாது என்ற நிலையில் ஒரு காலகட்டம் இருந்தது. தனியாக பேருந்துக்கு நிற்கிறவர் பஸ் நிலையத்தில் லியோனி பேச்சு ஒலிபெருக்கியில் ஓடினால், சிரிப்பை அடக்க முடியாமல் தானே விழுந்து விழுந்து தனியாக சிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் அளவுக்கு லியோனியின் நகைச்சுவை பேச்சு இருக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க உள்நாட்டு, வெளிநாட்டுப் பட்டிமன்றங்கள் என புகழ்பெற்ற நிலையில் லியோனியின் பேச்சுத் திறமையை தனக்குப் பயன்படுத்த நினைத்த திமுக அரசு 2010 ஆம் ஆண்டு லியோனிக்கு கலைமாமணி விருது வழங்கியது. அதையடுத்து மெல்ல மெல்ல திமுக சார்பாளராக மாறிய லியோனி பின் திமுகவில் இணைந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பரப்புரை செய்தார். அது முதற்கொண்டு திமுகவின் பல்வேறு கூட்டங்கள், மாநாடுகளில் எதிர்கட்சியினரை நக்கல் நையாண்டி செய்யும் வித்தையில் வல்லவரானார் லியோனி. 2019 இல் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் பின்ணியில்தான் லியோனி பாட நூல் கல்வியியல் கழக தலைவராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்து அதிமுகவினரும், பாஜகவினரும், பாமகவினரும் சமூக தளங்களில் வாள் வீசி வருகிறார்கள்.

குறிப்பாக பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, “ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்!”என்று தனது கருத்து தெரிவித்து லியோனி நியமனத்துக்கான எதிர்ப்பை கூர் தீட்டியிருக்கிறார்.

மற்ற பிரச்சினைகளில் திமுக சார்பான நிலைப்பாடு எடுக்கும் சிலர் கூட லியோனியின் நியமனத்தைக் குறைகூறியிருக்கிறார்கள். அதற்கு பலரும் மறுமொழிகளும் விளக்கமும் தெரிவித்து வருகிறார்கள்.

புவனா கோபாலன் என்ற ஆசிரியர், “மாநில அளவில் பல மாற்றங்களை புதிய அரசு செய்து வருகிறது.அனைவராலும் வரவேற்கத்தக்க மாற்றங்களாக , துறைசார் நியமனங்களாகவே அவை உள்ளன. அதே எதிர்பார்ப்பு கல்வித்துறைக்கும் உண்டு.பொருளாதாரத்துறை அளவிற்கு கவனம் செலுத்த வேண்டிய அமைச்சகம் கல்வி அமைச்சகம். இன்னும் கூற வேண்டுமானால் மிக அதிக அக்கறையுடனும்,கவனத்துடனும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஏன் அந்த பொறுப்புக்கு லியோனி அவர்களை விட மேலான தகுதி உடைய எவருமே கட்சியில் இல்லையா? நாங்கள் எங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் சார்ந்து சிந்திக்கிறோம்,எனவே எங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளில் தொடர் ஈடுபாடு உடைய,கல்விப்பிரச்சனைகளை பற்றி பேசும்,சிந்திக்கும்,அதன் சிக்கல்களுக்கு தீர்வு காண விழையும் நபர்களே கல்வித்துறை சார்ந்த பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.அதை எங்கள் எதிர்பார்ப்பாகவும் முன்வைக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பதில் தரும் வகையில் பத்திரிகையாளர் குங்குமம் சுந்தர்ராஜன், “பள்ளி ஆசிரியராக இருந்த அரங்கநாயகம் கல்வி அமைச்சரானது போல... பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர், பேச்சு திறமையால் உலக நாடுகளை சுற்றி மகிழ்வித்த லியோனி பாட புத்தகங்களை வழங்கும் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாகி இருப்பது இதுவே முதல் முறை, சாதனை”என்று பதிவிட்டுள்ளார்.

லியோனியுடன் பல்வேறு பட்டிமன்றங்களில் பேசியுள்ள பேச்சாளரும் பத்திரிகையாளருமான மதுக்கூர் ராமலிங்கம், “நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனியோடு நெடுங்காலம், நெடுந்தூரம் பயணித்திருக்கிறேன். தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக தளங்களில் இப்படி விவாதங்கள் நடந்துகொண்டிருக்க இன்று (ஜூலை 8) தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் லியோனி. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியபோது, “அன்புமணி ராமதாஸுக்கு நான் பதில் சொல்லவேண்டும் என்றால் முன்னாள் முதல்வரை அவர் டயர் நக்கி என்று அவர் சொன்னதை விட நான் பெண்களை தரக் குறைவாக ஏதும் சொல்லிவிடவில்லை. பாட நூல் கழகத்தின் தலைவர் என்ற வகையில் இனி வரும் பாடநூல்களில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அச்சடிக்க இருக்கிறோம்”என்றும் தெரிவித்துள்ளார் லியோனி.

-ஆரா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 8 ஜூலை 2021