மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

என்னோடு விவாதிக்க தயாரா?: சூர்யாவுக்கு ஆதரவாக சீமான்

என்னோடு  விவாதிக்க தயாரா?: சூர்யாவுக்கு ஆதரவாக சீமான்

சூர்யாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு நடிகர் சூர்யா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். அதுபோன்று தற்போது ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சூர்யா விவாதத்துக்கு தயாரா என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக இன்று (ஜூலை 8) அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், ”இந்திய அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யாவை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், “கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை சூர்யா வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும்.

அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென ஜனநாயக விரோதங்களை அரங்கேற்றி வரும் பாஜக, சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.

சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டுவருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக்கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா? எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும். சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தரும்” என கூறியுள்ளார் சீமான்.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 8 ஜூலை 2021