மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

தொழிலாளர்களை பழிவாங்கியது அதிமுக ஆட்சியே: அமைச்சர் ராஜகண்ணப்பன்

தொழிலாளர்களை பழிவாங்கியது அதிமுக ஆட்சியே: அமைச்சர் ராஜகண்ணப்பன்

தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியது அதிமுக ஆட்சியே என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் திமுக அரசு பார்ப்பதாக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வழித்தட பணியாணை மறுக்கப்படுவதாகவும், அவர்களைவிட பணியில் இளையவராக உள்ளவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்படுவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(ஜூலை 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, போக்குவரத்து பணி நடைபெறாதபோதும், கடும் நிதி நெருக்கடியிலும் மாத ஊதியத்தை எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியதை தொழிலாளர் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.

கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 01.01.2020 முதல் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்துப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும், பல்வேறு பணப் பலன்களாக ரூ.497.32 கோடி வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாகப் பணியாற்றி வருகின்றனர். உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவச் சான்றுகளின் பேரில் இலகுப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை.

தொழிலாளர்களை, தொழிலாளர்களாகப் பாவிக்காத அரசு அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி.

20% தீபாவளி போனஸ் கடந்த 1996-2001 கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வழங்கியதை மறுத்து, வெறும் 10% மட்டுமே வழங்கி துன்புறுத்தியது.

பணி ஓய்வுப் பெற்று பல்லாண்டுகளாகியும், அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்துப் பணப் பலன்களும் உடனடியாக வழங்கப்படாமல், அவர்களுக்குச் சொந்தமான பணத்தைப் பல்வேறு வகைகளில் சூறையாடியது.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்குச் சேர வேண்டிய பணப் பலன்கள் உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது, வாரிசுகளுக்கு வேலை வழங்காதது அதிமுக ஆட்சியில்தான்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல், அதைத் தவிர்ப்பதற்காக உதிரிச் சங்கங்களை எல்லாம் ஊக்கப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நசுக்கி, பணி மாற்றம் செய்து அலையவிட்டது மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்டது அதிமுக ஆட்சி.

கடந்த 10 ஆண்டுகளில் திமுக தொழிற்சங்க உறுப்பினர்களையே அவர்கள் அனுமதியின்றி அதிமுக தொழிற்சங்க உறுப்பினர்களாக்கி, மாதச் சந்தா மற்றும் நன்கொடைகளைக் கட்டாய அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியில் மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதலுக்கு ஒரு தொகை, பணிப் பதவி உயர்வுகளுக்கு ஒரு தொகை, அனைத்துப் பணிமனைகளிலும் ரூட் போஸ்டிங்குக்கு ஒரு தொகை, ஓ.டி.யில் (OD) உலா வர ஒரு தொகை, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவர்களுடையப் பணத்தை, திருமணம், வீடு கட்ட என்ற கோரிக்கைகளுக்குக் கடன் தொகை பெற ஒரு தொகை, என எல்லாவற்றுக்கும் கல்லா கட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி.

தரமில்லாத உதிரி பாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங்கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமைய உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இரண்டு மாதமே ஆன நல்லாட்சியில் குறைகள் கூற எவ்வித அருகதையும், தகுதியும், ஒபிஎஸ்ஸுக்கு இல்லை.

தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியது அதிமுக ஆட்சியே. அதற்கான சாட்சி மேற்கண்ட ஆதாரங்களே. மாறாக, என்றென்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி. ஆகவே, ஓபிஎஸ் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

தமிழ்நாடு முதல்வராகவும், துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த ஓபிஎஸ், கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் தொமுச உறுப்பினர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதி கொடுத்ததை கொடுத்து நீலி கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 8 ஜூலை 2021