மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

மோடி அமைச்சரவையில் முருகன்- புதுச்சேரியில் இருந்து எம்பி ஆகிறார்!

மோடி அமைச்சரவையில் முருகன்- புதுச்சேரியில் இருந்து  எம்பி ஆகிறார்!

தமிழக பாஜக தலைவராக இருக்கும் டாக்டர் எல். முருகன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக இடம் பெற்றிருக்கிறார்.

மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று( ஜூலை 7) விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதியாக தற்போதைய பாஜக தலைவர் முருகன் இணை அமைச்சராகி உள்ளார். அவருக்கு தகவல் தொடர்பு ஒளிபரப்புத் துறை, மீன்வளத் துறை, பால் வளம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய இணை அமைச்சராகியுள்ள முருகனுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படி முருகனுக்கு வெளியிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்தாலும், தமிழக பாஜக கட்சிக்குள் முருகன் எப்படி ஒன்றிய அமைச்சரானார் என்று பலரும் புழுக்கத்திலும் ஆற்றாமையிலும் இருக்கிறார்கள் என்கிறது கமலாலய வட்டாரம்.

சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மீது பாலியல் புகார்களை சுமத்தி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. தீவிர பாஜக ஆதரவு இதழான அந்த ஏட்டில் இந்த செய்தி வெளியானதும் தமிழக பாஜகவுக்குள் பதற்றம் ஏற்பட்டது. அப்படி ஏதும் இல்லை என்று தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கே. டி. ராகவன் ஆகியோர் மறுத்தனர்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழக பாஜகவின் சீனியர்கள் டெல்லி மேலிடத்தில் முருகனை எப்படியாவது மாற்ற வேண்டுமென்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழக பாஜக தலைவர் முருகன் சீனியர்களை மதிக்கவில்லை, சட்டமன்றத் தேர்தலில் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யாமல் தன் தொகுதிக்கு அதிக நாட்களை ஒதுக்கிக் கொண்டார், பிற முக்கிய பிரமுகர்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டார் என்பன போன்ற பல புகார்கள் முருகன் மீது டெல்லிக்கு சென்றன.

தனக்கு எதிராகக் கட்சிக்குள் பெரிய புயல் ஒன்று வீசி வருவதை உணர்ந்த பாஜக தலைவர் முருகன் அதை சமாளிப்பதற்காக தமிழக பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தேவையான விளக்கங்களை அளித்தார். மேலும் அண்மையில் நடைபெற்ற தமிழக பாஜக செயற்குழு கூட்டத்தில் தான் தமிழக பாஜக தலைவர் ஆனதிலிருந்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது வரை விரிவாகப் பேசினார்.

தன்னை மையமாக வைத்து எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க தமிழக பாஜக செயற்குழுவை முருகன் பயன்படுத்தியிருக்கிறார் என்று தமிழக பாஜக பிரமுகர்கள் பலர் டெல்லிக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால் முருகன் தனக்குள்ள முழுமையான ஆர்எஸ்எஸ் பின்னணி, டெல்லியில் தேசியப் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த அனுபவத்தின் அடிப்படையிலான டெல்லி தொடர்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி... “20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் பாஜகவின் குரலை ஒலிக்க வைத்திருக்கிறேன். தமிழக பாஜகவின் பிற முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்பு இருந்திருந்தால் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருப்பேன்” என்றும் முருகன் ஆர்.எஸ்.எஸ்.மூலம் டெல்லியில் உரியவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். கூறிய இன்னொரு தகவல்தான் டெல்லியில் முருகன் பற்றிய பிம்பத்தை மாற்றியது.

“தமிழகத்தில் திராவிட கட்சிகளை எதிர்கொள்வதற்கு தலித் லாபியை கையில் எடுப்பது என்ற உத்தியின் அடிப்படையில்தான் முருகனை தமிழக பாஜக தலைவர் ஆக்கினோம். ஆனால் தமிழக பாஜகவில் இருக்கும் சில பிரமுகர்கள் முருகன் பட்டியலினத்தவர் என்பதாலேயே அவரை மதிக்க மறுக்கிறார்கள்” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். முருகன் பற்றி டெல்லிக்கு அனுப்பிய தகவல்.

இதையொட்டிதான் முருகனை தமிழகத்தின் சார்பில் ஒன்றிய அமைச்சர் ஆக்குவது என்ற முடிவையும் ஆர்எஸ்எஸ் முன்மொழிந்து பாஜகவுக்கு தெரிவித்தது. கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு தலித் தலைவர்களையும் அமைப்புகளையும் பாஜகவில் இணைத்தவர் முருகன். அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் தமிழகத்தில் பாஜகவின் தலித் செல்வாக்கை இன்னும் உயர்த்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் தான் முருகன் இன்று ஒன்றிய இணை அமைச்சராக உயர்ந்துள்ளார்.

தற்போதைக்கு முருகன் மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இல்லை. இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவர் மேற்கண்ட இரு அவைகளில் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். அந்த வகையில் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எதிர்பார்த்தால் அதிமுகவிடம் அனுசரிக்க வேண்டிய தேவை ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் இருந்து முருகனை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்குவதற்கான திட்டம் டெல்லியிடம் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தற்போது இருக்கும் கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிகிறது. இந்த இடத்துக்கு புதுச்சேரி பாஜக என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முருகனை தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே அவர் ஒன்றிய அமைச்சராக இருக்கிறார் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தில்.

-வணங்காமுடி வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 8 ஜூலை 2021