மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

பணி நேரத்தில் இருக்கையில் இல்லாவிடில் கடும் நடவடிக்கை: எச்சரிக்கும் அமைச்சர்!

பணி நேரத்தில் இருக்கையில் இல்லாவிடில் கடும் நடவடிக்கை: எச்சரிக்கும் அமைச்சர்!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணி நேரத்தில் இருக்கையில் இல்லாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் சிசிடிவிகளின் கட்டுப்பாடு அறை உள்ளது. அங்கு நேற்று (ஜூலை 7) திடீரென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, சைதாப்பேட்டை சார் பதிவாளர் இருக்கை காலியாக இருந்ததுடன், அங்கு மக்கள் அவருக்காக கூட்டமாகக் காத்திருந்துள்ளனர். உடனடியாக அமைச்சர் மூர்த்தி சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு சென்று சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன் எங்கே என அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். பின்பு அங்கேயுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன் காலையில் பணிக்கு வந்து சில நிமிடங்களிலேயே வெளியில் கிளம்பியது தெரியவந்துள்ளது. மக்கள் கூட்டமாகக் காத்திருக்கும் நேரத்தில் இருக்கையில் இல்லாமல் வெளியே சென்ற சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “அனைத்து துறைகளிலும் மக்கள் எளிதில் சேவைகளை பெறும் வகையில் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்றுதான் பத்திரப்பதிவுத்துறையிலும் நான், துறை செயலாளர், தலைவர் என அனைவரும் சேர்ந்து சைதாபேட்டையில் உள்ள அலுவலகங்களில் ஆய்வு செய்தோம். இங்கு நேற்றைய தினம் 64 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் களப்பணிக்காக 4 பத்திரங்கள் தவிர 59 பத்திரங்கள் பதிவு செய்தவுடனே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. ஆவணம் பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் கட்டட களப்பணி மேற்கொண்டு ஆவணம் திரும்ப வழங்க வேண்டும். ஒரு வாரத்திற்கு மேல் காலதாமதம் ஏற்படக் கூடாது என் அறிவுறுத்தியுள்ளோம். அதிகாரிகள் உரிய நேரத்தில் அலுவலகத்தில் வந்து மக்களுக்குத் தேவையானதை செய்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளவே ஆய்வு செய்தோம்.

முறைகேடாக பத்திரப்பதிவு செய்பவர்கள் குறித்து தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில் நான்கைந்து அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் நிர்வாக வசதிக்காக மாநில, மண்டல வாரியாக அதிகாரிகளை மாற்றம் செய்து கொண்டிருக்கிறோம். அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாகக் கட்டணம் வாங்கக் கூடாது என 575 பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.

கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 100க்கு மேலான புகார்கள் வருகின்றன. புகார்களின் உண்மைதன்மை அறிந்து உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

கொரோனா காலகட்டமான ஏப்ரலில் மட்டும் 2,30,792 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளன. போலி பத்திரப்பதிவுகளைத் தடுக்க வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். பதிவுத்துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். பத்திரப்பதிவு செய்ய இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 8 ஜூலை 2021