மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

சிறப்புக் கட்டுரை: மகளிர் வரி!

சிறப்புக் கட்டுரை: மகளிர் வரி!

முனைவர் சகுப்பன்

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தகவல் தொடர்புகொள்வதற்கு எல்லையே இல்லை என்ற தற்போதைய நாம் வாழும் இந்த நவீன சூழலில்கூட மகளிர் வரி எனும் பொருளாதாரச் சுரண்டலானது நமக்குத் தெரியாமலேயே பெண்களுக்கு எதிராக இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மகளிர் வரி என்றால் என்னவென்றே தெரியாமலேயே நாமெல்லொரும் வாழ்ந்துவருகிறோம். இந்த நிலையில் மகளிர் வரி என்றால் என்னவென நம் மனதில் ஒரு கேள்வி எழும். நிற்க .

பொதுமக்கள் தினசரி பயன்படுத்திடும் பொருட்களுள் பெண்கள் பயன்படுத்திக் கொள்கின்ற பொருட்களுக்கு மட்டும் செலுத்துகின்ற கூடுதல் செலவே மகளிர் வரியாகும்

பொதுவாக எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதற்கான நோக்கமானது ஒன்றிரண்டு பொருட்களைத் தவிர, இது ஆண்களுக்கு ஆனது என்றோ அல்லது இது பெண்களுக்கு ஆனது என்றோ வேறுபாடு எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆயினும் அக்குறிப்பிட்ட பொருளை விற்பனை செய்திடும்போது மட்டும் ஆண்களுக்கு விற்பனை செய்திடும்போது ஒரு விலையிலும் பெண்களுக்கு விற்பனை செய்திடும்போது மட்டும் வேறொரு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விலை வித்தியாசமாக விற்பனை செய்திடும்போது கூடுதலாக வசூலிக்கப்படுகின்ற தொகைதான் மகளிர் வரியாகும்

இந்த மகளிர் வரியானது பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாலின அடிப்படையிலான ஒரு விலை பாகுபாடு ஆகும். ஏனெனில் பொதுவாக நாம் பயன்படுத்துகின்ற அனைத்து பொருட்களும் அந்தப் பொருளின் தரம், அதை சிப்பமாகக் கட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அப்பொருட்களுக்கான விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. ஆயினும் நடைமுறையில் ஒரே மாதிரியான அல்லது ஒத்தவகையிலான பொருட்கள், சேவைகள் ஆகியவற்றில் பெண்கள் மட்டும் ஆண்களைவிட அதிகமாக (கூடுதலாக) செலவிட வேண்டியுள்ளது.

இந்த வரியானது இந்தியாவில் மட்டுமன்று, கிட்டத்தட்ட முதலாளித்துவ பொருளாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்ற அனைத்து (எல்லா) நாடுகளிலும் தற்போது நடைமுறையில் உள்ளது .இந்த நாடுகளில் பெண்கள் அன்றாடம் பயன்படுத்திடும் பொருட்களுக்கு மட்டும் ஆண்கள் பயன்படுத்திடும் பொருட்களைவிட அதிகமாக (கூடுதலாக) செலவிட வேண்டிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதாவது மகளிர் வரி என்பது தனியார் நிறுவனங்களானவை. தங்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குவதற்காக அந்த நிறுவனங்களால் கண்டறியப்பட்ட ஒரு புதிய வழிமுறையாகும் .இவ்வாறு ஏன் வேறுபடுகின்றது என அவர்களிடம் வினவினால்... உடன் அவர்கள் (பெண்கள் தினசரி பயன்படுத்திடும் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களும் அப்பொருட்களை சந்தைப்படுத்துகின்ற நிறுவனங்களும்) அப்பொருட்களின் தயாரிப்பு நிலை வேறுபடுவதும் கட்டுகின்ற செலவுகள் அதிகமாவதுமே அப்பொருட்களின் விலை உயர்வாக இருப்பதற்கான காரணமாகும் என்ற தங்களுடைய தரப்பு நியாயத்தைக் கூறுகின்றனர். ஆயினும் அவர்கள் கூறும் செலவுகள் பெண்கள் அன்றாடம் பயன்படுத்திடும் பொருட்களைக் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், இலக்கு பார்வையாளர்களை (பெண்களை) அடையவும், அளவுக்கு அதிகமாக அழகான சிப்பங்களாகக் கட்டுகின்றனர் , மேலும் அப்பொருட்களுக்கான கட்டுகளின் வண்ணத்தையும் பெண்களைக் கவருகின்றவாறு மாற்றி அமைக்கின்றனர் இவ்வாறான நடவடிக்கைகளே அப்பொருட்களின் செலவு அதிகரிக்க வழிவகுக்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும்.

பொதுவாக தங்களை அழகுப்படுத்துவதற்காகவும், தங்களின் தோற்றத்தை உயர்த்தி காண்பிப்பதற்காகவும் பெண்கள் அனைவரும் எப்போதும் மனதளவில் அதிக தொகையைச் செலவிட தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு அவ்வாறான பொருட்களின் உற்பத்தி தரம் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்த அனுமானத்தைத் தங்களின் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவே பாலின அடிப்படையிலான விலை பாகுபாடு உருவாவதற்கான ஒரே காரணமாகும். பெரிய வணிகச் சின்னங்களும் (Brands) நிறுவனங்களும் தங்களுடைய பொருட்களைப் பெண்களின் பாதுகாப்பின்மையின் அடிப்படையில் சந்தைப்படுத்துகின்றன, அவை பல ஆண்டுகளாக ஆணாதிக்க, முறையிலான ஒடுக்குமுறையின் விளைவாகும்.

இதைவிட மோசமான செய்தி என்னவென்றால், தற்போதைய நம்முடைய சமூகத்தின் எந்தப் பிரிவு மக்களுக்கும் இதுகுறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இது வரையில் ஏற்படவில்லை என்பதேயாகும். ஒரு கணக்கெடுப்பின்படி, பெரியவர்களில் 67% ஆனவர்களுக்கு இந்த மகளிர் வரி என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில் உள்ளனர். இந்தப் பாலின அடிப்படையிலான விலை நிர்ணயமானது முதன்முதலில் 12-14% சசேவ (GST)க்கு எதிரான இயக்கம் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தது, இது சசேவ (GST) ஆனது முதலில் சுகாதார சிறு துணிகளுக்கும் (Napkins) , பின்னர் பிற சுகாதார தயாரிப்புகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இது #genderprice, #axthepinktax போன்ற ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் பரவலான போராட்டத்துக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் 90 எண்ணிக்கையிலான வணிகச் சின்னங்களின் (Brands) 800 வகையிலான தயாரிப்புகளை ஒப்பீடு செய்த ஓர் ஆய்வில், பெண் குழந்தைகளுக்கான (சிறுமிகளுக்கான) விளையாட்டுப்பொருட்கள் , ஆண் குழந்தைகளுக்கான (சிறுவர்களின்) விளையாட்டுப் பொருட்களை விட 7% அதிக விலை கொண்டவை எனத் தெரியவந்துள்ளது, இதேபோன்ற குழந்தைகளுக்கான ஆடைகளிலும் பெண் குழந்தைகளுக்கான (சிறுமிகளுக்கான) ஆடைகள், ஆண் குழந்தைகளுக்கான (சிறுவர்களின்) ஆடைகளைவிட 4% அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வயது வந்தோருக்கான ஆடைகளின் பெண்களுக்கான ஆடைகள் ஆண்களுக்கான ஆடைகளைவிட 8% அதிகமாகவும், தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் பெண்களுக்கு 13% அதிகமாகவும், பெண்களின் சுகாதார பராமரிப்புப் பொருட்களில் 8% அதிகமாகவும் வசூலிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

பெரும்பாலான பெண்கள் தங்களுடைய அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு தாங்கள் அதிக (கூடுதல்) விலை கொடுப்பதை அறியாமலேயே உள்ளனர். அதனால் நம்முடைய முதல் கவனம் இந்த மகளிர் வரி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டுசெல்வதோடு மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினை குறித்து அனைத்து மகளிரும் கவனத்தில் கொண்டார்களா என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திடுவதேயாகும். இந்தத் தகவல் குறித்து பெண்கள் அனைவரும் நன்கு அறிந்துகொண்டு அதனடிப்படையில், இந்த பாகுபாட்டுக்கு எதிராக தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டால், அந்நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்திடும் ஒரே விதமான பொருட்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான (ஒரே மாதிரியான) விலையை அறிமுகப்படுத்திடுமாறு அந்நிறுவனங்களை நிர்பந்திக்க முடியும்.

அதுமட்டுமல்லாது, ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியும் இடங்களில் இருவரும் ஒரே மாதிரியான பணியைச் செய்தாலும் பெண்களுக்கு மட்டும் ஆண்களைவிட குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்ற நிலை தற்போதுகூட உள்ளது. அவ்வாறு குறைவாக சம்பளம் வழங்குவதும் மறைமுகமாக மகளிர் வரி வசூலிப்பதாகப் பொருள் கொள்ளலாம். இந்தச் சூழலில் ஏராளமான அளவிலான பெண்களும் இந்த விழிப்புணர்வு இல்லாமல் மறைமுகமாக மகளிர் வரி செலுத்துகிறார்கள் என்ற முடிவுக்கே வர முடியும். முடிவாக...

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

என்ற குறளின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகளிரின் தேவையை ஆணுக்கு சமமாகப் பெண்ணுக்கும் நிறைவு செய்வதே சிறந்த பண்பாகும் எனப் புரட்சி செய்தவர் திருவள்ளுவர் ஆவார் .

எனவே, ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் மகளிர் (பெண்கள்) தினத்தினை கொண்டாடுவதோடு நம்முடைய கடமைமுடிந்தது என்றில்லாமல் நாம் வாழும் இந்தச் சமூகத்தை எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் உருவாக்குகின்ற முயற்சிகளில் மேலும் முன்னேற இந்தப் பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திட உறுதி கொள்வோம்.

கட்டுரையாளர்

முனைவர் சகுப்பன். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் நிர்வாக கணக்கியல் முறை (Management Accounting Practice in Tamil Nadu Co-operative Sugar Mills) பற்றிய முனைவர் பட்ட ஆய்வைப் பகுதி நேரமாக செய்து முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1996 முதல் 2018 வரை பல்வேறு சர்க்கரை ஆலைகளில் கணக்கராகவும் நிறுமச் செயலராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது www.vikupficwa.wordpress.com என்ற இணையதள முகவரியில் எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்களைத் தினமும் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வருகிறார். தொடர்புக்கு: [email protected]

.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

புதன் 7 ஜூலை 2021