மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

முதல்வர் பதவியை பொறுப்பாக கருதி பயணம் தொடரும் : முதல்வர்!

முதல்வர் பதவியை பொறுப்பாக கருதி பயணம் தொடரும் : முதல்வர்!

திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி பிறந்த வீட்டில், முதல்வர் ஸ்டாலின் ’முதல்வர் பதவியைப் பதவியாகக் கருதாமல், பொறுப்பு என்று கருதி என் பயணம் தொடரும்’ என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதன் முறையாக நேற்று குடும்பத்துடன் திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். நேற்று மாலையே மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று (ஜூலை 7) காலை சன்னதி தெருவில் அவர் தங்கியிருந்த இல்லத்திலிருந்து நடை பயணமாக தெற்கு வீதி வரை நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தை நிறுத்தி ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு, ரூ.12 கோடி ரூபாய் மதிப்பில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தாய் சேய் நலப்பிரிவு மையத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல கட்டிடத்தை ஆய்வு செய்த முதல்வர், முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காட்டூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் விமலா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இதையடுத்து, நாகை மாவட்டம் திருக்குவளைக்கு தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசலில் எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.ரமா ஆகியோர் திருமண மண்டபத்தின் முன்பாக மணக்கோலத்தில் நின்றதை கவனித்த முதல்வர், அந்த இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, திருக்குவளையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு சென்ற முதல்வர் அங்குள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கருணாநிதி பிறந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில், முதல்வர், ”தலைவர் கருணாநிதியின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளோடு ஓயாது பணியாற்றி, உழைப்பால் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நான் எடுத்துக்கொள்ளும் உறுதி, தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார், பதவி என்பது பொறுப்பு, பொறுப்போடு மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று. அதை மனதில் ஏற்று முதல்வர் பதவியைப் பதவியாகக் கருதாமல், பொறுப்பு என்று கருதி என் பயணம் தொடரும். அதைத்தான் அவர் பிறந்த வீட்டில் உறுதி எடுத்துக் கொள்கிறேன்” என்று எழுதிக் கையொப்பமிட்டார்.

பின்னர் நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.

திருக்குவளையில் இருந்து திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு, அவரை காண வந்த மக்களிடம் பொறுமையாக மனுக்களை பெற்றார்.

தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர், புதுச்சேரி மார்க்கமாக சென்னை திரும்புகிறார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 7 ஜூலை 2021