மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

திராவிடத் தமிழ் மரபும், தோனியும் !

திராவிடத் தமிழ் மரபும், தோனியும் !

விவேக் கணநாதன்

தோனியின் மீதான தமிழ்நாட்டின் நேசம் நாளுக்கு நாள் தேய்மானமே இல்லாத வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கிறது. ஒரு துறையிலிருந்து ஒருவீரர் ஓய்வுபெற்றவுடன், காலப்பழமையில் நடக்கும் இயல்பான மறதியோட்டம் தோனியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் நடக்கவில்லை.

இந்திய அளவிலேயும் இதுதான் நிலைமை. என்றாலும், தமிழ்நாட்டோடு தோனிக்கு நிகழும் இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை, தமிழ்நாட்டின் சமூக அரசியல் கதையாடலோடு இணைத்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.பி.எல் தொடர் உயிர்ப்போடு இருப்பதும், தோனி அதில் தொடர்வதும் தோனியுடனான தமிழ்நாட்டுப் பிணைப்பை உணர்வுப்பூர்வ நிலையிலேயே வைத்திருக்க வினையூக்குகிறது என்றாலும், அது மட்டுமே காரணமாக இங்கில்லை.

ஏனென்றால், தோனி குறித்த தமிழ்நாட்டு நினைவுகளில் அநேகமானவை, ஐ.பி.எல் தொடர்களில் இருந்து பகிரப்படுபவை அல்ல. மாறாக, தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்தும், தோனியின் தனிமனித ஆளுமை வெளிப்பாட்டிலிருந்தும், தோனியின் பொது சாதனைகளிலிருந்தும் தான் அதிகமான நினைவுகள் தோனி குறித்த தமிழ்நாட்டு உரையாடல்களில் பகிரப்படுகின்றன.

தோனி குறித்த சமூக வலைதள பதிவுகள், ஆயிரக்கணக்கில் உருவாக்கப்படும் இணைய காணொலிகள், பிம்பக்கட்டமைப்புகள் இவை அனைத்திலும் ஐ.பி.எல் தோனியைவிட, சர்வதேச தோனியே அதிகமாக இருக்கிறார். சாதாரணமாக காணக்கிடைக்கும் பதிவுகளிலும், காணொலிகளிலும் சர்வதேச பங்களிப்புகள் சார்ந்த நினைவுக்குறிப்புகளும், காட்சிப்பதிவுகளுமே அதிகமாக இருக்கின்றன.

காட்சி கலாச்சாரம் என்கிற, காணொளி பிம்பங்கள், காட்சி பிம்பங்கள் வழியாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆளுமையாகவே தோனி இருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சித்தொகுப்புகள், காட்சித்துணுக்குகள் அவருக்காக உருவாக்கப்படுகின்றன.

ஆனால், இத்தகைய காட்சிக்கலாச்சாரத்தால் போற்றப்படும் 'நாயக பிம்பமாக' மட்டுமே அவர் இல்லை. அதைத்தாண்டி தலைமைத்துவ அடையாளம் தோனிக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. சம காலத்தில் தோனிக்கு காட்சிக்கலாச்சாரத்தால் கொண்டாடப்படும் எந்தவொரு ஆளுமைக்கும் தமிழ்நாட்டில் இத்தகைய 'தலைமைத்துவம்' சார்ந்த வலிமையான அடையாளம் இல்லை.

இந்த மதிப்பீட்டிலிருந்து, கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக தாக்கத்தை நிகழ்த்திய தனிமனித ஆளுமைகளில் ஒருவராக, மதிப்பிட வேண்டியவராக தோனி இருக்கிறார்.

ஏனெனில், தோனி மீதான தமிழ்நாட்டின் ஆதரவுத்தளம் ரசிக மனப்பான்மையோடு அணுகும் நாயக வழிபாடாக மட்டுமே இல்லை. அதற்கு அப்பால், தலைமைத்துவம் - ஆளுமைத்திறன் - மேலாண்மை - வழிகாட்டல் - முன்னுதாரணம் போன்ற மிக நெருக்கமான ஒரு ஆளுமையாக தோனி இங்கே நேசிக்கப்படுகிறார்.

கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் மிக அதிகமாக நேசிக்கப்பட்ட - தாக்கத்தை நிகழ்த்திய மனிதர்களின் பட்டியலில், இத்தகைய தலைமைத்துவம் சார்ந்த அடையாளத்தோடு கொண்டாடப்பட்டவர்கள் வெகுகுறைவே.

'அயலவர்களை' நட்சத்திர பீடத்தில் வைத்துக்கொண்டாடும் இயல்பு தமிழ்நாட்டுக்கு உண்டு என்றாலும், தலைமை மதிப்பீடு சார்ந்த கணக்கீடுகளில் கறாரான அணுகுமுறை அவர்கள் மீது கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் மிகச்சிறந்த உதாரணம்.

கறுப்பு நிறம் உட்பட திராவிட அரசியல் கதையாடல் உருவாக்கிய பண்புகளுக்கு இயைவான தோற்றம் மற்றும் பண்புகளைக் கொண்டிருந்த ரஜினிகாந்த்,

அவர் கொண்டாடப்பட்ட மரபுக்கு எதிரான சமூகக்கருத்துக்களை கொண்டிருந்ததால் தலைமைத்துவம் சார்ந்த மதிப்பீட்டில் வீழ்த்தப்பட்டார். 'தலைவா' என கொண்டாடப்படும் ரஜினிகாந்த், தலைமைத்துவம் சார்ந்த தமிழ்நாட்டின் பொதுமதிப்பீட்டில் வீழ்ச்சி அடைந்த முரண், தலைமைத்துவம் சார்ந்த தமிழ்நாட்டின் தனித்துவமான விருப்பங்களைக் காட்டுகிறது.

'தலைமை' குறித்த தமிழ்நாட்டின் நம்பிக்கைகள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட வித்யாசமானது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்

ஜி.ஆர், ஸ்டாலின் என இன்றுவரையிலான தமிழ்நாட்டின் பிரதான ஆளுமைகள் பலரும் நிதான அரசியல் அணுகுமுறை என்பதையே தங்களது வழக்கமாக முன்வைத்திருக்கிறார்கள். இந்த மரபில், விலக்குதலுக்குள்ளாகும் ஒரு நபர் ஜெயலலிதா மட்டுமே.

மிக அதிரடியான அரசியல் வழக்கத்தை கட்சி - ஆட்சி என இரண்டு எல்லைகளிலும் கடைபிடித்தவர் அவர். ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிகளில் இத்தகைய அதிரடிப்போக்குக்கு மிக முக்கிய இடம் இருந்தது. பார்ப்பனரல்லாத அரசியலை மையப்படுத்தி தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் பிரதானமான வாக்கரசியல் கட்சி ஒன்றின் தலைமையை பிடித்த பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட 'சிறப்பு அனுமதி' என இத்தகைய அதிரடி பிம்பத்தை நாம் வரையறுக்கலாம்.

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் அனைவருமே தங்களுடைய பின்னணியாக முன்வைத்தது, சாமானிய பாமரப் பின்னணியே. மிக அடித்தளத்திலிருந்து மேலே வந்த தலைவர்களாக மட்டுமே அவர்கள் பார்க்கப்பட்டார்கள் - முன்வைக்கப்பட்டார்கள் - தங்களை முன்வைத்தார்கள் - இயங்கினார்கள்.

ஆனால், ஜெயலலிதா அப்படி அல்ல. அவர் தன்னை ராஜ வம்ச தொடர்புள்ள பெண்ணாக, உயர்குலத்தவராக தன்னை முன்வைத்தார். காமராஜர் முதல் ஸ்டாலின் வரை, மற்ற தலைவர்களுக்கு கடின உழைப்பு என்பது அடிப்படைத்தகுதியாக கருதப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவுக்கு கடின உழைப்பு சிறப்புத்தகுதியாக பார்க்கப்பட்டது இதனால்தான்.

தன்னை முன்வைக்கும் பின்னணியில் இருந்த முரண்பாடே, ஜெயலலிதா அதிரடி அரசியல் செய்ய வசதியான பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்தது.

ஆனால், பாமரப்பின்னணியில் இருந்து மேலே எழுந்துவரும் தலைமைகள், நிதானமான, கரிசனமிக்க, அழுத்தம் நிறைந்த ஆளுமைகளாகவே விரும்பப்பட்டனர். எழுச்சிமிக்க ஒரு போராட்ட பயணத்தை நிகழ்த்தி மேலே உயரும் ஆளுமைகள், உயரத்தை அடைந்தபிறகு நிதானத்தையும், அடக்கத்தையும் கையொழுக வேண்டும் என்கிற மரபு, தமிழகத்தின் சமூக அரசியல் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தோனி தமிழ்நாட்டில் மிக அதிகமாகக் கொண்டாடப்படுவதன் பின்னணியில், இந்த மரபின் தொடர்ச்சி இருக்கிறது. அந்தத்தொடர்ச்சியே தோனியைக் கொண்டாடும் வழக்கத்தில் ஓர் மறைமுகமான அரசியல் உணர்ச்சியை தமிழ்நாட்டில் வளர்த்தெடுத்துள்ளது.

இரண்டுவிதமான ஆளுமைப்பண்புகளை தோனி தன் கிரிக்கெட் வாழ்வில் கொண்டிருந்தார். ஒன்று, ஆக்ரோஷமான மட்டைவீச்சை கடைபிடிக்கும், அதிரடி ஆட்டக்காரன் என்ற அணிவீரன். மற்றொன்று, அதற்கு நேர் எதிரான, எந்த அதிரடியாலும் சலனமுறாத நிதானமான அணித்தலைவன்.

இந்த முரண்பாடான ஆளுமையை இணைக்கும் லாவகமான பண்புகளே தோனியை, தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயங்கியல் உருவாக்கிய கதையாடலோடு மிக அதிகமாக இயைச்செய்துள்ளது. பாமரப்பின்னணியில் இருந்தே அதிரடியாக மேலே உயர்ந்து, நிதானமாக இயங்கும் தலைமைத்துவத்திற்கான விருப்பத்தை பூர்த்தி செய்பவராக தோனி இருக்கிறார்.

இந்த இடத்திலேயே, தமிழ்நாட்டில் கோலோச்சும் மைய அரசியல்வாதமான திராவிடத் தமிழ் மரபு உருவாக்கிய கதையாடலின் விளைவுகள், எப்படி தோனி என்கிற ஆளுமையை தமிழகத்தில் மிக அதிகமான நேசத்துக்கு ஆளாக்கியுள்ளது என்ற ஆய்வுப்படுத்தல் முக்கியமானதாகிறது.

இந்தியாவின் மற்றபகுதிகளில் தோனியின் வெற்றி, எல்லோராலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான சாதனை வெற்றிக்கதையாக மட்டுமே முன்வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் தோனியின் வெற்றி, சாதி அதிகாரம் மண்டிக்கிடக்கும் ஓர் துறையில் உச்சபட்ச சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய, பார்ப்பனரல்லாத சமூக வெற்றியாளராக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டார்.

இன்றைக்கு தோனி மீதான அபரிதமிதமான நேசமும் இந்த பின்னணியில் இருந்தே நீட்டிக்கப்படுகிறது. குறிப்பாக, 2017க்குப் பிறகு, தோனி தன் கிரிக்கெட் வாழ்வின் இறுதிபயணத்தை தொடங்கிய பிறகு, இந்த சமூக அளவிலான ஒன்றுதலும், கொண்டாட்டமும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன.

பார்ப்பனிய அரசியலுக்கு எதிரான பொது வெறுப்பு மீண்டும் மையவிவாதமாகவும், காத்திரமான அரசியலாகவும் முன்னெடுக்கப்படும் காலத்தில் தோனியைக் கொண்டாடுதல் அதிகரிக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டு புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 7 ஜூலை 2021