மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

மோடி அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாட்டுக்கு வாய்ப்புண்டா?

மோடி அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாட்டுக்கு வாய்ப்புண்டா?

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்தார். அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவைக்குப் பின்னர் இந்த இரு வருடங்களில் விரிவாக்கம் ஏதும் நடைபெறவில்லை. இடையில் அகாலி தள் அமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகியபோதும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி ஒன்றிய அமைச்சரவையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பிரதிநிதிகள் அதிகப்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியது. அதற்கேற்றாற்போல் பிரதமர் மோடி கடந்த சில நாட்களாகவே பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சரும் முக்கிய தலைவருமான அமித் ஷா, மற்றும் பலருடன் முக்கிய தொடர் ஆலோசனைகளை நடத்தி வந்தார். இந்தப் பின்னணியில் இன்று (ஜூலை 7) மாலை ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி அரசாங்கத்தில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். அதன் பலம் 81 வரை அதாவது மக்களவையில் மொத்த உறுப்பினர்களில் 15% ஆக இருக்கலாம்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வாரி வழங்க மோடி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்துக்குப் பின் சுமார் 25 அமைச்சர்கள் ஓபிசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இந்திய வரலாற்றில் இப்படி ஓபிசி ஓரியன்ட்டடு அமைச்சரவை இதுவாகத்தான் இருக்குமென்றும் நேற்று முதல் கணிப்புகள் உலாவருகின்றன. அதாவது உயர்சாதி அரசாங்கம் என்ற பெயரைத் துடைக்கும் வகையில் ஓபிசி அரசாங்கத்தை அமைக்க மோடி திட்டமிட்டுள்ளார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில், நாட்டின் தலித் மற்றும் பழங்குடி சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, அரசாங்கத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

சாதி பிரநிதித்துவத்தைப் போல, அமைச்சரவை விரிவாக்கம் நாட்டின் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​நாட்டில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் மத்திய அரசில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதற்கிடையில் நேற்று எட்டு மாநில ஆளுநர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கர்நாடகா ஆளுநராக ஒன்றிய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹரியானாவுக்கு பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரத்துக்கு ஹரிபாபு கம்பாம்பட்டி, இமாச்சல பிரதேசத்துக்கு ராஜேந்திரன் விஸ்வநாத், மத்திய பிரதேசத்துக்கு மங்குபாய் சஹான்பாய் படேல், கோவாவுக்கு ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுராவுக்கு சத்யதேவ் நாராயணன், ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரமேஷ் பயஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இங்கே பேசுபொருளாகியுள்ளது.

தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் முருகன் இன்னமும் டெல்லியில்தான் இருக்கிறார். தமிழக பாஜக முக்கியஸ்தர்கள் சிலரும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது மகன் பி. ரவீந்திரநாத்தை ஒன்றிய அமைச்சராக்குவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு தொடர்ந்து செக் வைத்து வருவதாகவும் அதிமுகவில் சொல்கிறார்கள். மேலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தனக்கு மோடி அமைச்சரவையில் இடம் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதை தமிழக பாஜக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

மின்னம்பலத்தில் ஜூன் 27 ஆம் தேதியன்று தமிழகத்தில் இருந்து ஒன்றிய அமைச்சரவை ரேஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் ஓ.பி.ரவீந்திரநாத், அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் ஒன்றிய அமைச்சர்கள் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மோடியின் இரண்டாவது ஆட்சியில் முதல் அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு வாய்ப்பிருக்குமா என்பதற்கு விரைவில் விடை தெரியும்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 7 ஜூலை 2021