மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

நா.மணி

வயது 84. நடுக்கு வாதத்தால் நடுங்கும் கை, கால், வாய். தண்ணீர் கூட, கையில் பிடித்து ஒழுங்காக குடிக்க முடியாது. காது மந்தம். அதற்கும் சிகிச்சைகள். தொடர் மருத்துவம். இதனையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாது, கடையனுக்கும் கடைநிலையில் உள்ள,பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக வாழ்ந்து வந்தவர் அருட் தந்தை ஸ்டான் சாமி. கடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியை செய்து வந்தார், அருட் தந்தை ஸ்டான் சாமி. தான் பிறந்த தமிழ் மண்ணை விட்டு விலகி, ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களுக்காக வாழ்ந்து வாழ்ந்தார் அவர்.

2018ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனாவில் நடந்த ஒரு கலவரத்தை முன் வைத்து, அம்பேத்கரின் மகள் வழிப் பேத்தியின் கணவரும், உலகறிந்த அம்பேத்கரிய- மார்க்சிய அறிஞருமான ஆனந்த் தெல்தும்டே, ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற கவிஞர் வரவரராவ், டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹானி பாபு, இளம் ஆய்வாளர், மிகச் சிறந்த செயல்பாட்டாளர் மகேஷ் ரவுட், பேராசிரியர் சோமா சென், வழக்கறிஞர். சுதா பரத்வாஜ், ரமேஷ் கெய்சர், ஜோய்தி ஜெக்தாப், அருண் ஃபெரேரா, ரோமா வில்ஷன், கௌதம் நவ்லங்கா, கோன்சல்வே உள்ளிட்ட இடதுசாரி அறிவுஜீவிகள் 16 பேரை, இந்திய தண்டனை சட்டம், மிகக் கொடிய 'உபா' சட்டப் பிரிவுகள் மற்றும் தேசத்துரோக வழக்குகள் புனையப்படு, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இன்றுவரை சிறைக் கொட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு எவ்வாறு சோடிக்கப்பட்டுள்ளது என்று சான்றுகளை கூறும் கட்டுரை, தி வயர் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இவர்களோடு இணைத்து, முதுமையும் நோயும் தின்று கொண்டிருந்த அருட் தந்தை ஸ்டான் சாமி அவர்களும் மேற்படி குற்றப் பத்திரிகையில் இணைத்து கைது செய்யப்பட்டார். 1937 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, திருச்சிராப்பள்ளியில் பிறந்த ஸ்டான் சாமி அவர்கள், பாதிரியார் வாழ்வை தேர்வு செய்து, ஜெஷுட் பிரிவு பாதிரியாராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது அறவாழ்வை சமூகத்திற்கு அர்பணித்து கொண்டது போலவே, தான் கற்ற கல்வியையும் சமூகவியலாகவே தேர்வு செய்து படித்தார். தனது முதுகலை பட்டப் படிப்பை பிலிப்பைன்ஸ் நாட்டில் முடித்த அவர், இந்தியா திரும்பும் போதே தனது வாழ்வு பழங்குடி மக்களின் வாழ்வுக்காக என்று கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, கைது செய்யப்பட்ட அருட் தந்தை ஸ்டான் சாமி, மும்பையில் உள்ள திலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், நடுங்கும் கரங்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. பெரும் பகுதி தண்ணீர் சிந்தி விடுகிறது என்பதற்காக, நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு குவளை கேட்டார். அது மறுக்கப்பட்டது. அவரது வழக்கறிஞர் இதற்காக நீதி மன்றத்தில் மனுச் செய்தார். நீரை உறிஞ்சிக் குடிக்கும் குவளைப் பற்றி கருத்து சொல்லவே சிறைத் துறை நிர்வாகம் 20 நாட்கள் எடுத்துக் கொண்டது. பின்னர் ஒரு உறுஞ்சு குவளையும், குளிரைத் தாங்கும் உடைகளையும் தர 50 நாட்கள் எடுத்துக் கொண்டது. நடக்க முடியாமல் அடிக்கடி சிறையில் கீழே விழுந்தார். அப்போதும் கூட கருணை காட்டவில்லை, இந்திய அரசும், நீதித் துறையும். அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி சிறைக்கு வந்த நாள் தொடங்கி,அவரது வழக்கறிஞர் மிகர் தேசாய் தொடர்ந்து முதுமை மற்றும் மருத்துவ பிணையில் வெளி வர மனுச் செய்தார். எல்லாம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக, உபா சட்டப் பிரிவுகள் எப்படி இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று கோடிட்டு காட்டி, பிணைய மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாகவே நம் அருட் தந்தை ஸ்டான் சாமி கொல்லப்பட்டு விட்டார்.

ஆம் அப்படித்தான் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது நிறுவனக் கொலை. இயற்கை மரணம் அல்ல.

மனிதாபிமானம் அற்ற அரசால் நிகழ்ந்த மரணம் என்றே பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

கொரானா பெருந் தொற்றும் அருட் தந்தை ஸ்டான் சாமியை தாக்கியது. அந்த நிலையிலும் மருத்துவ பிணை கிடைக்கவில்லை. இறுதியாக, மே மாதம் 21 ஆம் தேதி மருத்துவ பிணை கேட்கிறார் ஸ்டான் சாமி. நீதிமன்றத்திற்கே அழைத்துச் செல்ல முடியாத நிலையில் படுத்த படுக்கையில் கிடக்கிறார். அதற்கும் கூட கால் விலங்கு. காணொளி மூலம் நீதிபதியிடம் கேட்கிறார். " எனக்கு மருத்துவ சிகிச்சை வேண்டாம். என் மக்களிடம், ராஞ்சியில் கொண்டு விட்டு விடுங்கள்" என்கிறார். அருட் தந்தை ஸ்டான் சாமிக்கு தெரிந்து விட்டது. "தான் இனி பிழைக்க மாட்டோம்" என்று திடமான முடிவுக்கு வந்துவிடுகிறார். "நான் எந்த மக்களுக்காக, என் வாழ் நாளை வாழ்ந்து முடித்தேனோ, அவர்களிடமே சென்று செத்துப் போய் விடுகிறேன்" என்று சொல்லாமல் சொல்கிறார் அருட் தந்தை. அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை நீதி மன்றத்தில். இதனால் அருட் தந்தை ஸ்டான் சாமியின் மரணம் ஒரு நீதிமன்ற மரணம் எனப்படுகிறது. நீதித் துறை வரலாற்றில், 2021 ஆம் ஆண்டு, ஜுலை 6 ஆம் தேதி கறுப்பு நாள் என்று குறிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

சிறைத் துறையின் அலட்சியம். நீதித் துறையின் பாராமுகம். தேசிய விசாரணை ஆணையத்தின் திட்டமிட்டு தீங்கு இழைக்கும் குணம், பிரிட்டிஷ் ஆட்சியை விஞ்சும் கொடிய உபா சட்டம் மற்றும் ஜோடிக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகள் என எல்லாம் சேர்ந்து , நம் அருட் தந்தை ஸ்டான் சாமியை கொன்று விட்டது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் கூற்று எவ்வளவு இயல்பாக பொருந்துகிறது பாருங்கள்.

அருட் தந்தை ஸ்டான் சாமி செய்த குற்றம் என்ன? குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காவல் துறை இயக்குநராக இருந்தவரும் மும்பை பெருநகர காவல் கண்காணிப்பாளராகவும் ஓய்வு பெற்றவர் சொல்கிறார், "ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், நில உரிமைக்காக போராடினார். அரசு, தான் போட்ட சட்டங்கள் வழியாக, அங்குள்ள மக்களைக் காக்க, அரசியல் சாசனம் காக்க, அவர் போராடினார். உடல் நிலை கெட்டுப் போன பிறகும் கூட போராடிக் கொண்டே இருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள சிறைக் கைதிகளுக்காவும் கடைசி வரை போராடினார். வனத்தை ஒரு பெரும் கொள்ளை காடாக பார்த்தவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதற்கு ஒரு வழியை தேர்வு செய்தனர். கொடிய சட்டங்களை பயன்படுத்தி கொன்றழித்து விட்டார்கள்.

"எங்கு யார் அதிகம் கஷ்டப்படுகிறார்களோ? அவர்களுக்காக பணி செய்து கிடப்பேன்" என்று பழங்குடி மக்களோடு வந்து சேர்ந்தார். சேவை செய்து, அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்த, நம் மண்ணின் அருட் தந்தை ஸ்டான் சாமிக்கு, போராட்ட களத்தில், நீதித் துறையின் உதவியோடு மரணம் பரிசாக கொடுக்கப்பட்டு விட்டது.

என்ன செய்யப் போகிறோம் நாம் இப்போது?

கட்டுரையாளர்: பேராசிரியர். ஒருங்கிணைப்பாளர். கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 7 ஜூலை 2021