மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

அப்படி என்ன பேசிவிட்டார் சூர்யா?

அப்படி என்ன பேசிவிட்டார் சூர்யா?

ஸ்ரீராம் சர்மா

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசிய நடிகர் சூர்யா மேல் சட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று அறிவித்து மேஜை நகர்த்தியிருக்கிறது தமிழ்நாட்டு இளைய பாஜக. அடேங்கப்பா!

அதுபோக, ஒன்றிய அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்து ஆர்ப்பரிக்கும் சில யூடியூபர்களும் வரிந்து கட்டி வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுசரி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நீங்கள் நியாயம் பேச வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதை முழுமையாகப் பேசுங்கள் என்கிறேன்.

வசதிக்கு ஆடும் வண்டாகப் பூக்களைக் கசக்கப் பார்ப்பது நியாயமில்லை என்கிறேன்.

சரி, அப்படி என்னதான் சொல்கிறது அந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021?

பார்ப்போம்!

அதில், ஒரு ஷரத்து இந்த நாட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை எந்த நிலையிலும் மறுதலித்து முடக்கும் வலிமை அரசாங்கத்துக்கு உண்டு என்கிறது.

அதாவது, எந்த ஒரு படைப்பும் ஒன்றிய அரசின் பாராமீட்டருக்குள் (Parameter) வந்தாக வேண்டும் என்பதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம்.

ஐயன்மாரே, அதன் அளவுகோல்தான் என்ன? அதை நிர்ணயித்துக் கண்காணிக்கப் போகிறவர்கள் யார்? அவர்களுக்கும் கலைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அல்லது, அடைசலான மூக்குக் கண்ணாடி வழியே அக்கவுன்ட்ஸ் நோட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் தட்டை மனத்தார் வசம் சிக்கிச் சீரழியுமா என்னும் அச்சக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் எங்களுக்கு வலு இருக்கிறது. நினைத்த சட்டத்தைக் கொண்டு வருவோம் என்றால் கலைஞர்கள் அதை எதிர்க்காமல் என்ன செய்வார்கள்?

சென்ஸார் போர்டில் வந்தமரும் கலை மனமில்லாத சர்ஜன்களோடு மாரடித்தது போதாதா? அப்போதாவது மேல் முறையீட்டுக் குழு என்று ஒன்று இருக்குமே.... இப்போது, அந்த வாய்ப்பும் பறிபோனால் எங்கு போய் மாரடிப்பது என்றுதான் கேட்கிறார் சூர்யா. புரிகிறதா?

கவனியுங்கள்!

சங்க காலம் தொட்டு ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் ஒரு குணம் இருந்ததைக் காண்கிறோம். அந்தந்தக் காலத்தில் அது சம்பந்தப்பட்ட துறைகள் மட்டுமே தலைதூக்கியதையும் படித்திருக்கிறோம். சில அரசாங்கங்கள் பேலன்ஸ்டாக அமைந்ததும் உண்டு.

இன்றைய ஒன்றிய அரசாங்கத்தின் குணம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருப்பதால் வரும் அச்சம் இது.

பைனரிப் பேச்சுகள் அறிவியலுக்கு உதவும். அழகியலுக்கு உதவாது!

சிறுவயதுச் சோகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

அன்றந்தப் பள்ளிப் பருவத்தில் கலைப்பித்துப் பிடித்த எனது நண்பர்கள் தினகர், சாம், ரேஹான், சத்யா எல்லோரும் ஒன்றிணைந்து ‘சன் ஷைன் யூத் கிளப்’ என்ற ஒரு குழுவைத் துவக்கி ஆல் இண்டியா ரேடியோவில் 15 நிமிட நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தோம்.

அன்றைய சிறுவர்களின் கலை தாகத்துக்கு வாய்த்த ஒரே போக்கிடம் அரசாங்க ஸ்டூடியோக்கள்தான். அங்கே, ‘இளையபாரதம்’ செக்‌ஷனை ஒரு பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன பாடலை ரிகார்டு செய்யப் போகிறோம் என்பதை முன் கூட்டியே அவரிடம் எழுதிக் கொடுத்துவிட வேண்டும் என கண்டிஷன் போடுவார். அரசாங்கம் பரிந்துரைத்த ஒரு பட்டியலை எப்போதும் கைவசம் வைத்திருப்பார்.

‘நிலா’ என்று எழுதினால் ஓகே என்பார். ‘நிலாப் பெண்ணே’ என்றால் உடனே அடித்துவிடுவார். கேட்டால், நாட்டின் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறோம் என்று அழிச்சாட்டியம் செய்வார்.

பதினாறு வயதில் நிலாவைப் பெண்ணாகப் பாடாமல், பெற்ற தாயே என்றா பாட முடியும்? எதிர்த்துக் கேட்டால், ‘சாரி, ஸ்டூடியோஸ் எல்லாம் ஆல்ரெடி புக் ஆயிடுச்சு. அடுத்த மாசம் வெச்சுக்குவோம்…’ என்றபடி எழுந்து போய்க் கொண்டே இருப்பார்.

‘சான்ஸும் போய், 140 ரூபாய் செக்கும் போச்சா…’ எனப் புலம்பியபடியே ஆல் இண்டியா ரேடியோ கேன்டீனில் எச்சைத் துப்பிவிட்டு வருவோம்.

அந்தப் பெண் அதிகாரியைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அரசாங்கத்திடம் கலை சிக்கினால் இதுதான் கதி என்பதை அந்த சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டோம்.

அந்தக் கண்றாவியை ஊதிப் பெரிதாக்கி நிற்பதுதான் இன்றைய சட்டம்!

நாட்டில் எடுக்கப்படும் அத்தனை படங்களும் உத்தமம் இல்லைதான். சமூகத்தைச் சீரழிக்கும் படங்கள் வருவதை மறுக்க முடியாதுதான். அதைத் தடுக்கும் கடமை இந்த அரசாங்கத்துக்கு உண்டுதான்.

ஆனால், அதன் அளவுகோல்களில் இந்த நாட்டின் கலைஞர்களுக்கு ஆட்சேபனை உண்டு என்றால், பரிவோடு அழைத்துக் கலந்து பேசி படைப்பாளிகளுக்கு நம்பிக்கை அளித்தாக வேண்டும் அல்லவா?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால் அது நியாயமாகுமா?

அதுபோக, இந்தச் சட்டத்தின் மூலமாகக் கலைஞர்களின் படைப்பு உரிமையைப் பாதுகாக்கப் போகிறோம் என்று மார் தட்டுகிறார்கள்.

திகட்டத் திகட்ட சிரிப்புத்தான் வருகிறது.

இவர்களுக்கு ஐபிஆர்எஸ் என்று ஒன்று இருப்பது தெரியுமா? அதில் படைப்பாளர்களின் உரிமை பறிக்கப்படுவதைக் குறித்து இவர்கள் அறிவார்களா? சினிமா கலைஞர்களை மட்டுமே டார்கெட் செய்வதை விட்டுவிட்டு, நாட்டின் மற்ற மற்ற கலைஞர்களின் நல்வாழ்வு குறித்தும் சிந்திப்பார்களா?

லட்சக்கணக்கான ஏழைக் கலைஞர்களுக்குச் சென்று சேர வேண்டிய உரிமைத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் ஸ்வாகா செய்யப்படும் அராஜகத்தை அறிவார்களா? அதில் இருக்கும் அடிப்படை சுரண்டலை எடுத்துச் சொன்னால் இவர்கள் காது கொடுத்துக் கேட்பார்களா?

அவ்வளவு ஏன்? கலைஞர்களின் உரிமையைப் பாதுகாக்கப் போகிறோம் எனத் தம்பட்டம் அடிப்பவர்கள், சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு காப்பிரைட் செய்யப்பட்ட திருவள்ளுவர் திருவுருவத்தின் மீது காவி அடித்து, காட்சிக்கு வைப்பது அப்பட்டமான சட்ட மீறல் – உரிமை மீறல் என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த கட்டம் பேசினால் நலம்!

நடிகர் சூர்யா மேல் நடவடிக்கை எடுப்போம் எனத் தோள் தட்டுவதற்கு முன் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறேன். அவ்வளவுதான்!

ஆர்.கே. செல்வமணி என்னுமோர் அற்புதமான படைப்பாளி. தொண்ணூறுகளின் தென்னகத் திரையை அடுத்த கட்டம் நகர்த்திய அட்டகாசமானதோர் கலைஞன். அந்தக் கலைப்படைப்பாளனை அன்று டெல்லி வீதிகளில் நடையாக நடக்க வைத்த காட்சிகளை இன்னமும் மறக்க முடியவில்லை!

ஏதோ கடவுள் புண்ணியத்தில் 15 ஆண்டுக் காலம் போராடி நிமிர்ந்து நின்று கொண்டார். இல்லையென்றால் அவரையும் இன்று 20 கிலோ அரிசிக்கு வரிசையில் நிற்க வைத்திருக்கும் அன்று நிகழ்த்தப்பட்ட அராஜகம்.

படைப்பாளிகளைக் கொண்டாடுவதுதான் நாகரிகம். அவர்களது சுதந்திரத்தின் மீது கைவைப்பது சமூகத்தின் ஆன்மாவின் மேல் கறை அடிப்பதற்குச் சமம்.

கலைப் படைப்பினால் இந்த நாட்டுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பீர்களாயின், அந்தக் கலையின் மேன்மைக்கு இந்த அரசாங்கம் இதுகாறும் எடுத்த முயற்சிகள் என்ன என்ற கேள்வியும் கூடவே எழும் அல்லவா? பதில் உண்டா?

திரைத்துறை முன்வைக்கும் நியாயமான வேண்டுகோள்களை இதுகாறும் பரிவோடு பார்த்ததுண்டா? பார்க்கும் எண்ணமுண்டா?

ஆம், கலைகளில் ஆகப் பெரிதாக திரைக்கலை இருக்கிறது. அதற்கென்று சமூகப் பொறுப்புண்டு என்பதை மறுக்கவே முடியாது.

ஆனால், அந்தப் பொறுப்பைக் குறித்து தன்மையோடு எடுத்துச் சொல்லி, அதற்கு முன்னுதாரணமாகவும் நின்று வழி நடத்த வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை அல்லவா ? சட்டம் போடும் வல்லமை உண்டு என்பதால் வல்லாட்டம் ஆடிவிடலாமா ?

சூர்யா, நம் மண்ணுக்கு வாய்த்த உன்னதமான நடிகன். அந்தத் தமிழ் நடிகனை அண்டை மாநிலங்கள் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்க, அந்த நல்ல கலைஞனைக் கொண்டாட மனமில்லை என்றாலும் அவமானப்படுத்தி விடாதீர்கள்.

அவரை சந்திக்கு இழுப்பது எளிது. ஆனால், சந்திக்கு வந்து நின்று நான் கேட்ட அத்தனை கேள்விகளையும் அவரும் கேட்பார். அதிகமும் கேட்பார். அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இல்லை என்பதை உணருங்கள்.

படைப்பாளன் என்னும் முறையில் பணிவோடு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

ஒரு நியாயத்தைப் பேசினால் தயவுசெய்து அதை முழுமையாகப் பேசுங்கள்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 6 ஜூலை 2021