மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

விவசாயத்துக்குத் தனி பட்ஜெட்: அமைச்சர் கே.என்.நேரு

விவசாயத்துக்குத் தனி பட்ஜெட்: அமைச்சர் கே.என்.நேரு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

மேகதாது அணையைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது, தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கட்டியுள்ள அணையை இடிப்பதற்குப் பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

முதலில், ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவாயிலுக்கு விவசாயிகள் சென்று விடாமல் தடுப்பதற்காக அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

இதையடுத்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 85 விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

அதேபோன்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

இதனிடையே விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் பகுதி வரை அனுமதிக்கப்படாததால் போலீசாரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பிரதான நுழைவாயிலை போலீசார் அடைத்ததால், அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் வாகனங்கள் வரிசையாக நின்றன.

இந்த சூழலில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர், விவசாயிகள் போராட்டம் நடத்திய பகுதிக்கு வந்தனர்.

அப்போது விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, விவசாயிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும்.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதுபோன்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திமுக அரசு விவசாயிகளுடன் இருக்கும். தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்காக புதிய பாசனத் திட்டங்களை முதல்வர் அறிவிக்கவுள்ளார். குறிப்பாக, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படவுள்ளது” என்று கூறினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 6 ஜூலை 2021