மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

சிறுபான்மை ஆணையம்: தமிழ் சமணர்களுக்கு இடமில்லை-ஜெயின்களுக்கு இரு இடம்!

சிறுபான்மை ஆணையம்:  தமிழ் சமணர்களுக்கு இடமில்லை-ஜெயின்களுக்கு இரு இடம்!

சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸை நியமித்து தமிழக முதல்வர் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் அந்த ஆணையத்துக்கான உறுப்பினர்கள் விவரத்தை முதல்வர் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ளார்.

அதன்படி திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தானை சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும், தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மஞ்ஜித் சிங் நய்யர், பைரோலால் ஜெயின், எல். டான்பாஸ்கோ, எம்.இருதயம், பிக்கு மௌரியா புத்தா ஆகியோர் நியமிக்கப்படுள்ளனர்.

சிறுபான்மை ஆணையத்தை சீர்திருத்துவாரா பீட்டர் அல்போன்ஸ்? என்ற தலைப்பில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “தமிழ்நாட்டில் இருக்க கூடிய தமிழ் சமணர்களும் சிறுபான்மையினர் பிரிவில் தான் வருகிறோம், ஆணையத்தில் உறுப்பினராக தமிழ் சமணர் ஒருவர் தற்சமயம் பொறுப்பில் இருக்கிறார், வடமாநிலத்து ஜெயின் சமூகத்தை சார்ந்தவரும் தமிழ்நாட்டில் அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார், இதுநாள் வரை அந்த ஆணையத்தால் என்னென்ன நன்மைகள் யார் யார் பயன்பெற்றார்கள் என்று தெரியாது, இனியாவது அந்த ஆணையத்தால் சிறுபான்மையினர் பிரிவில் வரும் தமிழ் சமணர்களுக்கு சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக சரியானவர்களுக்கு சென்று சேர்ந்திட வழிவகை செய்ய வேண்டும்

அதுபோல் ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு வடமாநில ஜெயின் சமூகத்தவர்களுக்கு கொடுப்பதை விட காலம் காலமாய் தமிழ் மண்ணிலேயே வாழும் தமிழ் சமணர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கைகளும் தமிழ் சமணர்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்டிருக்கிறது”என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ் சமணர்கள் புறக்கணிக்கப்பட்டு வட இந்திய சமணர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழ் சமணரான மயிலை நாதன், “தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கு உறுப்பினர்கள் அறிவிக்கபட்டிருக்கிறார்கள், அதில் தமிழ் சமணர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் ஒர் உறுப்பினராவது தமிழ் சமணர் இருந்தார். ஆனால் இம்முறை தமிழ் சமணரின் வாய்ப்பு பறிக்கப்பட்டு, வடமாநில ஜெயின் சமூகத்தை சார்ந்த இருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை துறைமுகம் பகுதியில் மே 26 ஆம் தேதியன்று, வட இந்திய மக்களின் சங்கமான மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ இயக்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை எம்பி தயாநிதிமாறனும், அமைச்சர் சேகர்பாபுவும் தொடங்கி வைத்தனர். அதில் பேசிய அமைச்சர் சேகர்பாபு,

“நான் இங்கே நாற்பது வருடங்களாக இருக்கிறேன். உங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல வட இந்திய நண்பர்கள் நல்ல நிலையை அடைந்திருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதில், பொருளாதார ரீதியாக உயர்த்தியதில் திராவிடக் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு.

2014 இல் துறைமுகத்தில் அருமை அண்ணன் தயாநிதிமாறனுக்காக நான் தேர்தல் பணியாற்றினேன். அப்போதும் உங்கள் வாக்குகள் பெரும்பாலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல 2016 சட்டமன்றத் தேர்தலில் நானே நின்றேன்... எனக்கும் உங்கள் வாக்குகள் சரியாக கிடைக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை என்று 2016 சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்களுக்காக நாங்கள் முழுமையாக பணியாற்றியிருக்கின்றோம். பல இடங்களில் உங்கள் வீடுகள் கட்டப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்காக பணியாற்றியிருக்கிறோம். அதேபோல 2019 ல் அண்ணன் தயாநிதிமாறன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நீங்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் (பேப்பர்களை பார்க்கிறார்) எங்களுக்கு சொல்லும்படியான வாக்குகள் கிடைக்கவில்லை. பரவாயில்லை அப்போதும் உங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் நானும் இணைந்து தொடர்ந்து பாடுபடுகிறோம்.

இதையெல்லாம் கூறியே 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டேன். ஆனால் இப்போது நடந்த தேர்தலிலும் நீங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் விழவில்லை. நீங்கள் அதிகமாக இருக்கும் வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு 50 வாக்குகள்தான் விழுந்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கத்துக்கு (பாஜக) 300-350 வரையிலான வாக்குகள் விழுந்திருக்கின்றன.

உங்களுக்குதான் வாக்களித்தோம் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. பரவாயில்லை. நீங்கள் எங்களை எவ்வளவு புறக்கணித்தாலும் திமுகவாகிய நாங்கள் உங்களைப் புறக்கணிக்க மாட்டோம். உங்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்”என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் சேகர்பாபு.

இதைக் குறிப்பிட்டுள்ள மயிலை நாதன், “நீங்கள் எங்களை மொத்தமாய் புறக்கணித்தாலும் நீங்களே வியந்து போகும் வண்ணம் உங்களுக்கான எங்கள் பணி இருக்கும்’ என்று வட இந்தியர்களைப் பார்த்து பேசினார் சேகர்பாபு. அதன் பொருள் இப்போது புரிகிறது, தமிழ் சமணராய் எங்கள் வாழ்த்துகளை சிறுபான்மை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 6 ஜூலை 2021