மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

மேகதாது அணை - மத்திய அமைச்சர் சொன்னது என்ன?: துரைமுருகன்

மேகதாது அணை - மத்திய அமைச்சர் சொன்னது என்ன?: துரைமுருகன்

தமிழகத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தென்பெண்ணை துணை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டியது, மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வருவது என கர்நாடக அரசு தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிற்பகல், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செகாவத்தை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன்.

அப்போது பேசிய அவர், “மத்திய அமைச்சருடன் நடந்த சந்திப்பு சுகமாக இருந்தது. அவர் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகினார். அதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் நமது பிரச்சினையை மிகத் தெளிவாக அவர் ஏற்கனவே புரிந்து வைத்துள்ளார். ஆச்சரியமாக இருந்தது.

இந்த சந்திப்பின் போது முதலில், உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்குக் காவிரியிலிருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 40, 50 டிஎம்சி தண்ணீரில் 8 டிஎம்சி கூட கிடைக்கவில்லை. எனவே தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரை விடச் சொல்லுங்கள் என்று கேட்டேன். இதற்குக் கர்நாடக அரசிடம் உடனடியாக பேசுவதாகக் கூறினார்.

இரண்டாவதாக மேகதாது பிரச்சினை குறித்துப் பேசினோம். காவிரியில் எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் அண்டை மாநிலமான தமிழகத்திடம் கேட்டுதான் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்களிடம் எதுவும் கேட்காமல் நேரடியாக உங்களிடம் வந்து டிபிஆர் அறிக்கையை அளித்துச் செயல்படுத்துகின்றனர். இந்த திட்டத்துக்கு விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று உள்ளார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல என்று எங்களது வாதத்தை வைத்தோம்.

அதற்கு அவர் திட்ட அறிக்கையை அளிப்பதன் மூலம் அணையைக் கட்டி விட முடியாது. தமிழகத்திடம் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க மாட்டோம். இருதரப்பிடமும் கலந்து பேசிதான் முடிவெடுப்போம் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து மார்க்கண்டேய நதியில் அணை கட்டியது தொடர்பாகப் பேசினோம். மேகதாது அணை கட்டுவதற்காக கூட டிபிஆர் அனுமதிக்கு உங்களிடம் வந்தார்கள். ஆனால் மார்க்கண்டேய அணையைக் கட்ட தமிழகத்திடமும் அனுமதி கேட்கவில்லை, உங்களிடமும் டிபிஆர் அனுமதி கேட்கவில்லை. தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே, இதற்கு என்ன பொருள். 2017 ஆம் ஆண்டு இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது. அந்த தீர்ப்பாயத்தை அமைக்க உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டோம். இதற்கு அவர் உடனடியாக தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று கூறினார்.

அதுபோன்று நீண்டகாலமாகப் போராடி பெற்ற காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினோம். இதற்கும், நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்துக்கு 1974-ல் டிபிஆர் தயார் செய்தார்கள், இதுவரை அந்த டிபிஆர் இருக்கிறதா? இல்லையா என்று கூட தெரியவில்லை. நீங்கள் இணைக்கிறீர்களோ, இல்லையோ எங்கள் மாநிலத்துக்குள் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் அதற்கு நீங்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 6 ஜூலை 2021