மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

வெள்ளை அறிக்கை தர தயார்: அமைச்சர் சுப்பிரமணியன்

வெள்ளை அறிக்கை தர தயார்: அமைச்சர் சுப்பிரமணியன்

தடுப்பூசி குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இணைந்து இன்று(ஜூலை 6) தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், “கரும்பூஞ்சையால் 3300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக மருத்துவமனைகளில் 7000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

தமிழ்நாட்டில் முதல்வரின் முன்னெடுப்பினால் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 21ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் தயாராகும் ஒட்டுமொத்தத் தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தொலைபேசி , கடிதம் மற்றும் நேரடியாகவும் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் நேரடியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

தொடர்ந்து, நாளை மறுநாள் என்னையும், துறை செயலாளரையும், டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, 9ஆம் தேதி அவரைச் சந்தித்து, கூடுதல் தடுப்பூசிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்தும் விளக்கவுள்ளோம்.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு 1,57,76,550 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று முன்தினமும் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். எவ்வளவு தடுப்பூசிகள் வந்தன, எத்தனை பேருக்கு செலுத்தப்பட்டது. எவ்வளவு மிச்சமானது எனப் பல கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுள்ளார். நாங்களும் அவருக்குத் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

இதுவரை, 1,57,76,550 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று இரவு வரை 1,58,78,600 செலுத்தியிருக்கிறோம். கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் வரை 3.5 -4 லட்சம் வரை தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது.

ஆனால், திமுக அரசின் நிர்வாகத் திறமையால் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி வீணாவதை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்றுகிறோம். ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டே செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.

தடுப்பூசி குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடலாம் என்ற அறிவிப்பு வெளியான 10 மணி நேரத்தில் தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கர்ப்பிணிகளுக்கு முதன்முதலில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏ.கே.ராஜன் குழுவின் கால அவகாசம் 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 13ஆம் தேதி வழக்கு விசாரணையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 6 ஜூலை 2021