மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

சமூக வலைதளங்களில் அவதூறு: காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில் அவதூறு: காவல்துறை எச்சரிக்கை!

ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் அவதூறாகப் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்பி வருவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறி, தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் சுய விளம்பரத்துக்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளைப் பதிவிட்டு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்துக்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு மே மாதம் முதல் தற்போது வரையிலும் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில், எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில், முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 6 ஜூலை 2021