மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

பேருந்துகளில் திருக்குறள் உரை: கலைஞர் பெயர் எங்கே?

பேருந்துகளில் திருக்குறள் உரை: கலைஞர் பெயர் எங்கே?

தமிழகம் முழுதும் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்குத் தளர்வுகளில் பேருந்துகள் இயக்கம் இன்று (ஜூலை 5) தொடங்குகிறது.

இதை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,

“தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 1,400 பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும். தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “அ.தி.மு.க ஆட்சியின்போது அரசு பேருந்துகளில் அகற்றப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்துப் பேருந்துகளிலும் எழுதும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இன்னும் பத்து நாட்களுக்குள் முடிவடையும்” என தெரிவித்ததோடு அதன் மாதிரிக்காக ஒரு திருக்குறள் பலகையைக் காட்டினார்.

அதில், ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்ற குறட்பாவை எழுதி அதன் உரையாக, ’இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறளுக்கு மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் எழுதிய உரை. ஆனால் உரையாசிரியர் என்ற வகையில் கலைஞரின் பெயர் இடம்பெறவில்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முந்தைய அரசில் இடம்பெற்ற சில வழக்கங்களைத் தவிர்த்து வருகிறார். கொரோனா நிவாரணப் பைகளில் தமிழக அரசின் சின்னம்தான் இடம்பெற்றதே தவிர முதல்வர் ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. அதுபோல திருக்குறளிலும் திருவள்ளுவர் படம் இடம்பெற்று, திருக்குறளின் உரையும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் உரையை எழுதிய கலைஞரின் பெயரை பயன்படுத்தியிருக்கலாமே, ஏன் கலைஞரின் பெயரைக் கூட மறைக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவினரிடத்திலும், பொதுவான அபிமானிகளிடத்திலும் எழுந்துள்ளது. சமூக தளங்களிலும் இது தொடர்பாக கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியிலேயே கலைஞர் பெயர் எழுத போராட வேண்டுமா என்றும் குரல்கள் எழுகின்றன.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

திங்கள் 5 ஜூலை 2021