மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

மேகதாது அணை: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திக்க நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

காவிரியில் மேகதாது அணை கட்டக் கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்தபோது, “ மேகதாதில் எங்கள் எல்லைக்குள்தான் கட்டுமானத்தை தொடங்கி இருக்கிறோம். தமிழகத்தின் பகுதிக்குச் செல்லும் நீரை நாங்கள் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தால், சட்டப்படி அதை எதிர்கொள்வோம்” என்று கூறினார்.

இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு மாநிலமானது தனது திட்டங்களுக்கு மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது. ஆகவே, கர்நாடக முதலமைச்சர், தமிழக முதலமைச்சரிடம் அனுமதி கோருவது அரசியல் விருப்பமின்மை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சூழலில், மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திப்பதற்காக தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமானத்தில் இன்று(ஜூலை 5) டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மதியம் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திக்க இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாகவும் விவாதிக்க உள்ளோம்” என்று கூறினார்.

இந்த சந்திப்பில், தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியது குறித்தும், நடுவர் மன்றம் அமைக்கவும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 5 ஜூலை 2021