மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

அரசின் அறிவிப்பும் தனியார் பள்ளிகளின் கட்டண வசூலும்: நடப்பது என்ன?

அரசின் அறிவிப்பும் தனியார் பள்ளிகளின் கட்டண வசூலும்: நடப்பது என்ன?

கொரோனாவால் உலகமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். நேரடி வகுப்புகள் இன்றி ஆன்லைனிலேயே பாடங்களைக் கற்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி முறையே தலைகீழாக மாறியுள்ளது.

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், நர்சரி என ஏறத்தாழ 10,000 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மத்தியில் பள்ளி கட்டண விவகாரம் என்பது பூதாகரமாகியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், முழு கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கறார் காட்டின. இதைத்தொடர்ந்துதான் தனியார் பள்ளிகள் 75 சதவிகிதக் கட்டணம்தான் வசூலிக்க வேண்டும். அதையும் இரண்டு தவணையாகப் பிரித்து வசூலிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவையும் மீறி பல தனியார் பள்ளிகள், முழு கட்டணத்தையும் வசூலிப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நோட் புக் ஃபீஸ், மெயின்ட்டனன்ஸ், மின் கட்டணம், ஆசிரியர்களுக்கு ஊதியம் என்ற போர்வையில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறுகின்றனர்.

சேலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கூறுகையில், “ஒன்றரை வருடமாகப் பிள்ளைகள் வீட்டிலேயேதான் இருக்கிறார்கள். ஆனால் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லி பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன. அதுவும் குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து அதற்குள் கட்டணம் செலுத்துங்கள் என்கின்றனர். ஆசிரியர்களை வைத்து கட்டணத்தை வசூலிக்கும் முயற்சியை எடுக்கின்றனர். அரசு 75 சதவிகிதம்தான் வசூலிக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், ஆன்லைன் சிறப்பு வகுப்புக் கட்டணம், பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றாலும் அதற்கும் கட்டணம் என அதிகளவு வசூலிக்கின்றனர். கட்டவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கிவிடுவோம், அடுத்த ஆண்டுக்கு உங்கள் பிள்ளைகள் அனுப்பப்பட மாட்டார்கள், டீசி கொடுக்க மாட்டோம் என எச்சரிக்கின்றனர்” என்கிறார்கள்.

பெற்றோர்கள் இதுபோன்று குற்றம்சாட்டும் நிலையில், மாணவர்கள் சேர்க்கை, மதிப்பெண் சான்று உள்ளிட்டவை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது 8ஆம் வகுப்பு வரை மாற்றுச்சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் பெற்றோர்கள், கடந்த ஆண்டு கட்டணத்தைச் செலுத்த முடியாமல், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஆனால், அரசுப் பள்ளிகளில் அல்லாமல் தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கோ, அல்லது 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கோ மாற்றுச் சான்று கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே டீசி கேட்கும் பெற்றோர்களிடம், கல்விக் கட்டணத்தைச் செலுத்தினால்தான் டீசி கொடுக்கப்படும் எனத் தனியார்ப் பள்ளிகள் நெருக்கடி கொடுக்கின்றன. இந்த நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு ‘14417’ என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று அறிவித்தார்.

தற்போது இந்த எண்ணுக்குத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருப்பதாக, புகார்களை தொலைபேசி மூலம் பெறும் அலுவலர்கள் கூறுகின்றனர்.

தனியார் கல்விக் கட்டணம் விவகாரம் தொடர்பாக நாம் திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி, அருள் செல்வனிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், “பள்ளியிலிருந்து டீசி பெறவேண்டுமானால் நீதிமன்றம் சொன்ன 75 சதவிகித கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே வாங்க முடியும். ஆனால், இந்த 75 சதவிகிதக் கட்டணத்தைக்கூட செலுத்தாமல், டீசி கேட்டால் எப்படி வழங்க முடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பிலிருந்து எங்களுக்கு நாளொன்றுக்கு 20, 30 புகார்கள் வருகின்றன.

ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களாக இருந்தால் மனிதாபிமான அடிப்படையில், ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்து உதவி செய்யலாம். அனைவருக்கும் எப்படி உதவி செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, “அரசின் இந்த அறிவிப்பால் ‘கப்பல் நீரில் மூழ்குவது’ போல தனியார் பள்ளிகள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 17 மாதங்களாக, சரியாகக் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. இந்த 17 மாதங்களில் 6 மாதங்களுக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடிந்தது. அதுவும் பாதி சம்பளம்தான். அதன் பிறகு பாதி தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஓராண்டாக ஊதியம் வழங்காததால் மீண்டும் இந்த ஆசிரியர்கள் அதே பள்ளிக்கு பணிக்கு வருவார்களா என்பதும் கேள்விக்குறிதான்.

இதுமட்டுமின்றி எங்களது பள்ளிகளில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கே தெரிவதில்லை. டீசி இல்லாமலேயே 8ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சேரலாம் என்ற அரசின் அறிவிப்புதான் இதற்கு காரணம். EMIS என்ற கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு மூலம், பள்ளி கல்வித்துறையிடம் இருக்கும் தனியார் பள்ளிகளின் மாணவர்களின் ஐடி நம்பரை எடுத்து டீசி இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால், டீசி வாங்காமல் எத்தனை மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர் என எங்களுக்கே தெரியவில்லை.

அதுபோன்று கொரோனா நேரத்தில் நாங்கள் பள்ளிகளைத் திறக்காவிட்டாலும், கமர்சியல் பில் என்பதால், மின்கட்டணம் அதிகளவு வருகிறது. வருமானமே இல்லாமல் மின்கட்டணத்தைச் செலுத்துகிறோம். அதுமட்டுமின்றி, புதுப்பிக்காத பள்ளிகளை எல்லாம் மூட வேண்டும் என்றும் அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பள்ளியின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமானால், பில்டிங் லைசன்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வேண்டும். இந்த கொரோனா காலத்தில் தாசில்தார்கள் எல்லாம் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள அவர்களுக்கு நேரம் கிடையாது. எனவே தாசில்தார்களின் சான்றிதழ்கள் இல்லாமல் பள்ளிகளின் உரிமத்தைப் புதுப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக பள்ளிகளை மூடினால், தனியார் பள்ளிகளின் நிலைமை என்னவாகும். இதுமட்டுமின்றி, கல்வி உரிமை சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தையும் அரசு இரண்டு ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை. இதுபோன்று காரணங்களால் தனியார் பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்கின்றனர்.

- வணங்காமுடி பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 5 ஜூலை 2021