மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

மேகதாது அணையை ஏற்றுக்கொள்ளவே முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மேகதாது அணையை ஏற்றுக்கொள்ளவே முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது அணையைக் கட்டுவதற்குத் தீவிரம் காட்டி வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நேற்று தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், மேகதாது அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள், இந்த அணையைக் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. இவ்விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும், அதிகாரிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், “67 டிஎம்சி கொள்ளளவு உள்ள அணைக் கட்டும் திட்டத்தையும், பவானி ஆற்றில் நீர் மின் திட்டங்களைத் தமிழகம் செயல்படுத்துவதையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“கபினி அணைக்குக் கீழ் உள்ள, கபினி வடிநிலப்பகுதி, கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழ் உள்ள காவிரி வடிநிலப்பகுதி, சிம்சா, அர்க்காவதி மற்றும் சுவர்ணவதி வடிநிலப்பகுதி ஆகியவற்றிலிருந்து தமிழகம் நோக்கி வரும் தடையற்ற நீரோட்டத்தைத் தடுத்து திசை திருப்பும் வகையில் மேகதாது அணை திட்டம் உள்ளது.

எனவே இந்தத் திட்டம் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதிக்காது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த அணை பெங்களூருவிலிருந்து நெடுந்தொலைவில் கட்டப்படுவதால் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக இந்தத் திட்டம் செயல்படுத்துவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது.

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கான கட்டமைப்பு ஏற்கனவே உள்ள நிலையில் 4.75 டிஎம்சி நீர் எடுக்க 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே தமிழ்நாட்டுக்கான நீர் அளவை குறைக்கும் மேகதாது திட்டத்தைக் கைவிட வேண்டுமெனக் கர்நாடக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இரு மாநிலத்துக்கும் இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்” என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் கொள்ளளவு 115 டிஎம்சி ஆகும். ஏற்கனவே கர்நாடகா அங்கு உள்ள நீர்நிலைகளை இணைத்து 40 டிஎம்சி வரை தண்ணீரைக் கணக்கில் காட்டாமல் சேமித்து வைக்கிறது. மேகதாது அணையில் 70 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்றால் ஒரே நேரத்தில் 225 டிஎம்சி தண்ணீரைச் சேமித்து வைக்க இயலும். இப்போதே உபரி நீரை மட்டும் தான் தமிழகத்துக்குக் கர்நாடகம் அனுப்புகிறது. அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட தமிழகத்திற்கு வராது.

கடந்த காலங்களில் வீசப்பட்ட அதே வழியைத்தான் இப்போது எடியூரப்பா வீசியிருக்கிறார். 1970களில் காவிரி நீர் பகிர்வு தொடர்பாக சட்ட பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே காவிரியின் குறுக்கே 4 அணைகளைக் கர்நாடகம் கட்டியது. எனவே மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

-பிரியா*

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 4 ஜூலை 2021