மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

பழனியப்பனுக்கு என்ன பதவி: ஸ்டாலின் கொடுத்த குறிப்பு!

பழனியப்பனுக்கு என்ன பதவி: ஸ்டாலின் கொடுத்த  குறிப்பு!

திமுகவில் இணைந்த அமமுக துணைப் பொதுச் செயலாளருக்கு உயர் கல்வித்துறையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரனின் வலது கரமாகவும் சசிகலாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்துவந்த அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் தனது குடும்பத்தினர் மற்றும் சம்பந்தி குடும்பத்தினருடன் சென்று நேற்று ஜூலை 3ஆம் தேதி, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து திமுக உறுப்பினர் கார்டைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே பழனியப்பனுக்கு அதிமுக மற்றும் திமுகவினர் வலை வீசி வந்தனர். ஆனால், பழனியப்பன் சிக்காமல் தப்பி வந்தார். தன்னை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாரையெல்லாம் தூது அனுப்பி கூப்பிட்டார் என்பதை அப்போது பழனியப்பனே வெளிப்படையாகப் பேசினார்.

இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரியில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட திமுக வெற்றி பெறவில்லை. மாறாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, திமுகவிலிருந்து விலகி நின்ற முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை இழுக்க திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுங்க வர்றேன் என்று முல்லை நிபந்தனை விதித்தார். ஆனால், இந்த நிபந்தனையை ஸ்டாலின் ஏற்க மறுத்தார். அதனால் முல்லை வேந்தன் அதிமுகவுக்குப் போய்விட்டார். அதையடுத்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு அப்போதே ஸ்கெட்ச் போட்டார் நேரு. அதேநேரம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி போன்றவர்கள் பழனியப்பனிடம் பேசிவந்தார்கள். ஆனால், பழனியப்பன் அசையாமல் இருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்குள்ள பழைய பழக்கத்தில் பழனியப்பன் வீட்டுக்கு நேரடியாகச் சென்றார். குடும்பத்தாரிடம் பேசி மனதைக் கரைத்து திமுகவில் இணைக்க சம்மதிக்க வைத்தார். அதன்பின் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் தேதியும் நேரமும் வாங்கினார்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட திமுகவினர் பழனியப்பனைச் சந்தித்து பேசிவந்தார்கள். இந்தத் தகவல்களைத் தெரிந்த தினகரன் அலட்டிக் கொள்ளவில்லை. பழனியப்பனிடமும் அவர் பேசவில்லை. பழனியப்பனுக்கு நெருக்கமானவர்களிடம் தனது உதவியாளர் ஜனாவைப் பேசச் சொல்லியுள்ளார். அவரும் வழக்கமாகப் பேசுவதுபோல், ’கொஞ்ச நாள் அமைதியாக இருங்க. எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்’ என பேசியுள்ளார். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

பழனியப்பன் தனது குடும்பத்தினர் மற்றும் சம்பந்தி குடும்பத்தினருடன் நேற்று சென்னை சென்றார். அறிவாலயம் செல்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வருவதாக சொன்ன நேரத்தைவிட சுமார் ஒரு மணி நேரம் கடந்து விட்டது. அதன் பிறகு ஸ்டாலின் வந்தவுடன், பழனியப்பன் தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார். ‘காலையில் ஹாஸ்பிட்டல் போயிட்டுவந்து ரெஸ்ட் எடுத்துட்டேன். அதான் லேட்டாகிவிட்டது’ என்று செந்தில் பாலாஜியிடம் கூறிய ஸ்டாலின், திமுகவுக்கு வந்திருக்கும் பழனியப்பனை வரவேற்றார். அவரிடம், ‘உங்களை எப்பவோ எதிர்பார்த்தேன். லேட்டாக வந்திருக்கீங்க. மகிழ்ச்சி. உயர் கல்வித்துறையின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகக் கொண்டுவர வேண்டும். அதற்காக உங்கள் பங்களிப்புகள் தேவை. உங்கள் விருப்பப்படி நல்லதே நடக்கும். பாலாஜியிடம் சொல்லியிருக்கேன். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுகவை நீங்க வெற்றி பெற வைக்கணும்’ என்ற பொறுப்பையும் கொடுத்துள்ளார். பழனியப்பனின் எதிர்பார்ப்பான மாவட்டச் செயலாளர் பதவியோடு வாரியப் பொறுப்பையும் கொடுக்க முன்வந்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

அறிவாலய வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனியப்பன், “தமிழக முதல்வரின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அவரின் தலைமையில் பணி செய்வதை பாக்கியமாகக் கருதி திமுகவில் சேர்ந்துள்ளேன்” என்றார். தினகரன் பற்றி கேட்கப்பட்டதற்கு, “அவர் ஒரு நல்ல மனிதர்” என்பதோடு முடித்துக் கொண்டார்.

வெளியில் வந்த பழனியப்பன் மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அவர்கள் வரவேற்பு கொடுப்பது பற்றி கேட்டபோது, ’நீங்கள் அமைதியாக இருங்கள். திமுகவினர் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களைப் பார்த்துவிட்டு திங்கட்கிழமை ஊருக்கு வருகிறேன். தர்மபுரியில் இணைப்பு விழாவை பிரமாண்டமாகச் செய்து காட்டவேண்டும். நாம் பட்டகஷ்டங்கள் போதும். நமக்கு விடியல் வந்துவிட்டது” என்று உற்சாகமாகப் பேசியுள்ளார் பழனியப்பன்.

-வணங்காமுடி

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

ஞாயிறு 4 ஜூலை 2021