மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ஜி7, நேட்டோ, பைடன் - புதின் சந்திப்பும் அதன் இந்திய எதிரொலிப்பும்!

ஜி7, நேட்டோ, பைடன் - புதின் சந்திப்பும் அதன் இந்திய எதிரொலிப்பும்!

இந்த வருடாந்திர அரசியல் நிகழ்வுகள் உலகம் எந்த திசையில் பயணிக்கிறது என்பதை ஓரளவுக்கு நமக்குச் சொல்லும். உலகத்துடன் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் பாதை இதற்கேற்ப மாறும் அல்லது திருத்தம் கொள்ளும். அது எந்தவிதமான மாற்றம் அல்லது திருத்தமாக இருக்கும் என்பதை அனுமானிப்பதன் மூலம் அதற்கேற்ப தமிழ்நாடு தனது அரசியல் பொருளாதார நகர்வுகளைச் செய்ய முடியும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கட்டி எழுப்பப்பட்ட அமெரிக்க பேரரசின் அரசியல் பொருளாதார ராணுவ வலிமையைக் கண்டும் அதன் அதிசயத்தக்க உறுப்புகளின் வடிவமைப்பைக் கண்டும் அதிசயிக்காதவர் இருக்க முடியாது. உலக உற்பத்திக்கு அடிப்படையான மூலதனம் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் இருக்கும் முற்றுருமை, அதன்மூலம் மறைமுகமாக மொத்த உலக உற்பத்தியையும் கட்டுப்படுத்தும் வலிமை, அந்தப் பொருளை மட்டுமல்ல; எல்லா பொருட்களையும் அமெரிக்க பணமான டாலரில்தான் விலை நிர்ணயிப்பதும் வர்த்தகம் செய்யவும் முடியும் என்ற சூழல், அவ்வாறான வர்த்தகமும் அமெரிக்க வங்கிகள் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயம்... மீறினால் பொருளாதார தடை, அந்தப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும் கடல்வழி வாணிபத்தின் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாடு, அதை நிலைநிறுத்த உலகிலேயே வலிமை வாய்ந்த கடற்படை, உலகம் முழுவதும் பாயும் அமெரிக்க நிதி மூலதனத்தையும், அதன் நிறுவனங்களின் நலனையும் காக்க 70 நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் 800 ராணுவத்தளங்கள் என அந்தக் கட்டமைப்பின் பிரமாண்டம் உலகம் இதுவரை கண்டிராதது.

இந்தப் பேரரசின் தலைமையகமான அமெரிக்கா மிக பிரமாண்டமாக கண்கவரும் நிதி மூலதன வர்த்தக மாளிகையாகக் காட்சியளித்து வந்தது. உலகமே இந்தப் பேரரசின் எல்லையாகவும் கோட்டையாகவும் விளங்கி வந்தது. கடந்த டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் பொருளாதார கொள்கைகளும் அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் இந்த பிரமிக்கவைக்கும் அழகான மாளிகையையும், கோட்டையையும் அலங்கோலம் ஆக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். இதைச் சரிசெய்ய அமெரிக்கப் பேரரசைக் கட்டி எழுப்பியதில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் கால அனுபவம் வாய்ந்த பைடன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் நிர்வாகம் இரு தலையாய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

1. உள்ளூரில் டிரம்ப்பின் அரசியலால் எழுச்சி கண்டிருக்கும் தேசியவாதம்

2. அவரின் தேசியவாத அரசியலால் உடைப்பு கண்டிருந்த அமெரிக்க உலக தலைமையை மீண்டும் நிலைநிறுத்துவது.

இந்த உலகப் பேரரசில் இறுதியாக கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி வர்த்தக மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் இன்னும் இறுக்கமாக இணைக்கப்பட்ட இந்தியாவில் இவரின் வருகை என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமது கேள்வியாக இருந்தது. ஏனெனில் இதே காலத்தில், இந்தியா காஷ்மீர் பிரச்சினை, மதவாதச் சட்டங்கள், தொழிலாளர் மற்றும் விவசாய திருத்தச் சட்டங்கள் என இந்திய அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்டு இந்தியா அதிர்ச்சியில் உறைந்து நின்றது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்புள்ள நிர்வாகம், நீதி, பத்திரிகை எல்லாம் அரசின் ஓர் அங்கமாக மாறி இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது. கூடவே சீனாவுடனான எல்லை பிரச்சினை, வர்த்தகப் பிரச்சினை, நிறுவனங்களும் முதலீடுகளும் வெளியேறுதல், சீனாவைக் கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் கொள்கை, அதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்த நாற்தரப்பு ஆசிய நேட்டோ ராணுவக் கூட்டணி என இந்திய அரசியல் பொருளாதார சூழல் இந்தியாவுக்குள்ளும் வெளியேயும் ஒரு பெரும் மாற்றம் கண்டு வந்தது.

எதிர்பார்ப்புக்கு மாறாக, பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட டிரம்ப் நிர்வாகத்தின் அனைத்து கொள்கைகளையும் சற்று மேம்படுத்தி அப்படியே தொடர்ந்தது. டிரம்ப் தொடுத்த வர்த்தகப் போரை மேலும் விரிவாக்காமல் அப்படியே தொடரும் அதேவேளை அவரின் தொழில்நுட்பப் போரை மேலும் வலுவாக்கியது. தென்கொரியா, ஜப்பான், தைவான், அமெரிக்க நாடுகளின் சில்லுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அழைத்து சீனாவுக்கு எதிரான சில்லுகளை (Chip) உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டை உருவாக்கியது. உள்நாட்டில் வலுவடைந்திருக்கும் தேசியவாதத்தை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்காவை மீளக்கட்டமைத்தல் (Build Back America) எனும் கொள்கையை அறிவித்தது. அமெரிக்காவில் சில்லுகளின் உற்பத்தி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க ஐம்பது பில்லியன் ஊக்கத்தொகை அறிவித்ததோடு, அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சில்லுகளின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டிஎஸ்எம்சி (TSMC), சாம்சங் நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தியைத் தொடங்க வைத்தது.

மேலும், அமெரிக்க உற்பத்தியைப் பெருக்கவும் அதன் தேவைக்கான தொழிலாளர்களை உருவாக்கவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ட்ரில்லியன் டாலர் முதலீட்டு திட்டங்களை அறிவித்தது. அமெரிக்காவின் நலனை முன்னிறுத்தும் (America first) டிரம்ப்பின் தடுப்பூசித் திட்டத்தை அப்படியே தொடர்ந்தது. இருக்கும் எல்லா தொழில்நுட்ப மூலப்பொருட்களையும் பயன்படுத்தி, தனது நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசியைச் செலுத்தி அமெரிக்காவின் பொருளாதார மீட்சியை முன்னெடுக்கும் சுயநலக் கொள்கையை மாற்றமின்றி தொடர்ந்தது. அதையே ஆயுதமாக்கி மற்ற நாடுகளை தனது அரசியல் முன்னெடுப்புக்கு அணிவகுக்க செய்யும் உத்தியைக் கையாண்டது. 2008 பொருளாதார வீழ்ச்சியில் தொடங்கி கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து பல மடங்காக பெருகிவரும் ட்ரில்லியன் கணக்கில் டாலரை அச்சடிக்கும் பணக்கொள்கையை மேலும் உக்கிரமாகத் தொடர்ந்தது.

வருங்கால இணையத் தொழில்நுட்ப பொருட்களை (Internet of things) அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் அச்சாணியான சில்லுகளின் உற்பத்தியையும், உற்பத்தி தொழில்நுட்பத்தையும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை முதலில் உறுதிசெய்து கொண்டது பைடன் நிர்வாகம். அடுத்து எந்த நாட்டிலும் இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள அத்தியாவசியமான தடுப்பூசி உற்பத்தியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நாற்தரப்பு கூட்டத்தைக் கூட்டி 100 கோடி தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து உலகம் முழுவதும் கொடுக்க ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. இதன்மூலம் இந்த ராணுவக் கூட்டணிக்கு ஒரு பொருளாதார முகத்தையும் சீனாவின் அண்டை நாடான இந்தியாவையும் மற்ற நாடுகளையும் அமெரிக்காவின் பக்கத்தில் நெருக்கமாகவும் நிறுத்திக்கொண்டது. இப்படி தன்னை வலுவான நிலையில் நிறுத்திக்கொண்டு சீனாவுடனான பேச்சுவார்த்தைக்குச் சென்றது.

அமெரிக்காவின் சொந்த பலமான நிதி மூலதனக் கோட்டையின் விரிசல்களை அறிந்திருந்த சீனா, இந்த நடவடிக்கைகளை அதன் பலகீனத்தின் வெளிப்பாடாகப் பார்த்தது. அதோடு, அமெரிக்க நலனை முன்னிறுத்தி செய்யப்பட்ட இந்த நகர்வுகள் அது எதிர்பார்க்காத பல விளைவுகளை ஏற்படுத்தியது. சில்லுகளின் உற்பத்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சீனாவை மண்டியிட வைக்க முனைந்த அமெரிக்காவின் முயற்சி அதன் அணி நாடுகளை விழிப்புற செய்தது. ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் சில்லுகளின் உற்பத்திக்குப் பெருமளவு நிதியை ஒதுக்கி, தங்களது மண்ணில் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கட்டும் வேலையில் இறங்கி இருக்கின்றன.

இந்தத் தொழில்நுட்பப் போரை எதிர்கொள்ள ஒரு ட்ரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கி இருக்கும் சீனா, தனது நாட்டில் இயங்கும் இந்தத் துறையைச் சேர்ந்த அனைவரையும் ஒருங்கிணைத்து அதில் தன்னிறைவு அடையும் வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சீன அதிபரின் உள்வட்டத்தைச் சேர்ந்த லியோ ஹவை இதை மேற்பார்வையிட நியமித்து இருக்கிறது. இருக்கும் தொழில்நுட்பத்தை மட்டுமல்ல; இன்னும் முதிர்ச்சி அடையாத மாற்று தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து முன்னோக்கி செல்வது என்ற திட்டத்துடன் சீனா இயங்கி வருகிறது. இப்போது சில்லுகளின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் டிஎஸ்எம்சி, சாம்சங், இன்டெல் நிறுவனங்களைத் தவிர்த்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல புதியவர்கள் சந்தைக்குள் வருவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இந்த நிறுவனங்களின் முற்றுருமை உடைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தடுப்பூசி தேசியத்தைக் கடைப்பிடித்து மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசி செலுத்தியும், அவர்களின் கையில் பணத்தைக் கொடுத்தும் வெற்றிகரமாக தனது முடங்கிக்கிடந்த பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதில் அமெரிக்கா வெற்றி கண்டிருக்கிறது. ஆனால், சீனாவைக் கட்டுப்படுத்த தொடங்கப்பட்ட சில்லுகளுக்கான தொழில்நுட்பப் போர், அதன் உற்பத்தி சங்கிலியை உடைத்தது. அதனால் பாதிக்கப்பட்ட உற்பத்தி தற்போது மகிழுந்துகள் உருவாக்க தேவையான சில்லுகள் இன்றி அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டு மகிழுந்து வர்த்தகம் விலையேற்றத்தைக் கண்டிருக்கிறது. இதனுடன் செயற்கையாக அமெரிக்க மக்களிடம் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட திடீர் தேவையும் இதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பணக்கொள்கையும் சேர்ந்து கொண்டு பணவீக்க பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கிறது.

முன்பு 2008 பொருளாதார வீழ்ச்சியின்போதும் இதேபோன்று பெருமளவு பணம் அச்சடிக்கப்பட்டது. அப்போது சீனா, தனது மின்னணு சாதனங்களுக்கான சந்தையைப் பெறும் முனைப்பில் இருந்தது. இருவருக்கும் இடையிலான கூட்டு, சீனப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிவிட்டு அமெரிக்க டாலரைச் சுற்றோட்டத்துக்குக் கொண்டு வந்தது. அதாவது சீனா, இந்த டாலரைப் பெற்றுக்கொண்டு பொருளை ஏற்றுமதி செய்யும். அந்த டாலரை வர்த்தகத்துக்கும், அமெரிக்க கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளும் இதுபோலவே செய்து வந்தன.

ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயு சந்தையைப் பிடிக்கும் நோக்கில் எரிவாயு குழாய் செல்லும் யுக்ரைனில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு குழப்பம், எரிவாயு குழாய் அமைக்க சிரியாவில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஆகியவை அமெரிக்க - ரஷ்ய மோதலை தோற்றுவித்தது. அது 2014இல் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிப்பதில் கொண்டுவந்து நிறுத்தியது. அதைத் தொடர்ந்த எரிபொருளுக்கான ரஷ்ய - சீன கூட்டும், டிரம்ப் நிர்வாகத்தின் சீனாவின் மீதான வர்த்தக மற்றும் தொழில்நுட்பப் போரும் இந்த டாலர் சுழற்சியை நிறுத்திவிட்டிருந்தது.

ரஷ்யா தனது டாலர் வர்த்தகத்தையும் அதன் கையிருப்பையும் முழுமையாகக் கைவிட்டு விட்டது. முன்பு சீனாவின் கையிருப்பில் கிட்டத்தட்ட பாதியாக இருந்த அமெரிக்க பத்திரங்கள் தற்போது மொத்த 3.4 ட்ரில்லியன் கையிருப்பில் ஒரு ட்ரில்லியனாகக் குறைந்து இருக்கிறது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மலிவான பொருட்கள் முன்பு பணவீக்கத்தைக் குறைக்கும் காரணியாக இருந்தது. அதாவது, அமெரிக்கா தனது பணவீக்கத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போது அமெரிக்காவின் தேவைக்குப் பெருமளவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீனா, தனது நாணய மதிப்பை உயர அனுமதித்து அதை மீண்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது என்கிறார் ஏசியா டைம்ஸ் இதழின் ஆசிரியர் டேவிட் கோல்ட்மேன். அதோடு முன்பு போலவே பணவீக்கம் வர இருக்கிறது. சீனாவின் 5ஜி இணையம் உள்ளிட்ட பொருள் உற்பத்திக்கும் சந்தைப்படுத்தவும் தடை இருக்கிறது. ஆதலால் முன்பு போலவே ஓர் உடன்பாடு ஏற்படுவது தவிர்க்க இயலாதது என வாதிடுகிறார். இதனிடையில் அமெரிக்க கருவூலத்துறை செயலர் எல்லன், வெளியுறவு செயலர் ப்ளிங்கன் சீன தரப்புடன் பேசியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

அதேபோல இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்து உலக நாடுகளுக்குக் கொடுப்பது, அதன்மூலம் அரசியல் பலன்களை பெறுவது என்ற திட்டமும் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையால் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதுவரையிலும் இந்தியாவை உலக அரங்கில் வைத்து ஆட உதவும் ஒரு காயாக பார்த்த அமெரிக்கா இந்த தோல்விக்குப் பிறகு இந்தியாவைத் தனது மருந்து நிறுவனங்களுக்கான சந்தையாகப் பார்க்க ஆரம்பித்தது.

இது அமெரிக்க அரசியல் நலனோடு தமது நண்பர்களின் நலனையும் இணைத்துக்கொண்டு செல்ல முயன்ற பாஜகவின் செயல்திட்டத்துடனான முரண்பாட்டில் கொண்டுபோய் நிறுத்தியது. அவர்கள் இந்தியச் சந்தைக்கும், இவர்கள் மூலப்பொருட்களுக்கும் பேரம் பேச இந்த இழுபறியை பிரிக்ஸ் கூட்டமைப்பைக் கொண்டு இந்தியா உடைக்க வேண்டி வந்தது.

இதில் மட்டுமல்ல இணைய வர்த்தகத்திலும் இந்த முரண் வெளிப்பட்டு வருகிறது. முந்தைய டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து அமேசான், வால்மார்ட், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமான சந்தையாக இந்தியாவை பாஜக அரசாங்கம் மாற்றியமைத்தது. அதற்குப் பிரதிபலனாக இவர்களின் நண்பர்களான அம்பானி அதானிக்கு எதிர்கால பொருளாதாரத்தின் இரு எரிபொருளாக விளங்கப்போகும் தரவுகளையும், சூரிய மின் உற்பத்தியையும் கேட்டு பெற்றார்கள். இது இணைய வர்த்தக சந்தையை பிடிப்பதில் அம்பானிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குமான போட்டியாக வளர்ந்து வருகிறது.

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 4 ஜூலை 2021