மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ரஃபேல்: விசாரணையைத் தொடங்கிய பிரான்ஸ்

ரஃபேல்:  விசாரணையைத் தொடங்கிய பிரான்ஸ்

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெற்றுள்ளதா என நீதி விசாரணையைத் தொடங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா, பிரான்ஸ் அரசுடன் 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் இந்த விமானங்களின் மொத்த விலை 59 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்திய அரசு தெரிவித்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிவந்தார். காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட ரஃபேல் விமானம் ஒன்று தற்போது 1670 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2019 மக்களவைத் தேர்தலின் போது ரஃபேல் ஊழல் விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பான வழக்கில், ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தற்போது பிரான்சில் பூதாகரமாகியுள்ளது. அதாவது ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் 8.8 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததாக பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு வலைத்தளமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் , ரபேல் ஊழல் விவகாரத்தில் விசாரணை நடத்த, ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் என்ற நீதிபதியை பிரான்ஸ் அரசு நியமித்துள்ளதாக பிரான்ஸ் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மீடியாபார்ட் வலைதளத்தில் வெளியான செய்திகள் மற்றும் பிரான்சை சேர்ந்த பொருளாதார குற்றங்களை விசாரித்து வரும் ஷேர்பா என்ற தொண்டு நிறுவனம் அளித்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸின் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சூரியன், நிலவு மற்றும் உண்மை ஆகிய மூன்றையும் மறைக்க முடியாது என்று புத்தர் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா இதுகுறித்து கூறுகையில், டசால்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் பகடைக்காயாக ராகுல்காந்தி செயல்படுகிறார். ரஃபேல் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே ராகுல்காந்தி இவ்வாறுதான் பொய்களைக் கூறி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 4 ஜூலை 2021