மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

கட்சி மாறும் நிர்வாகிகள்: ஜி.கே.வாசனின் திட்டம்!

கட்சி மாறும் நிர்வாகிகள்: ஜி.கே.வாசனின்  திட்டம்!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 6 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ‘மரியாதையான தொகுதிகளைக் கேட்டுப் பெற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தவறிவிட்டார். கட்சி நிர்வாகிகளுக்கே துரோகம் செய்துவிட்டார். கூட்டணி தொடர்பாகப் பேச தமாகா சார்பில் குழு ஒன்றை அமைத்தார். ஆனால் அவரே கூட்டணியைப் பேசி முடித்துவிட்டார்’ என தமாகா துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம் அதிருப்தி தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே, ஒருகட்டத்தில் தமாகாவிலிருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று திமுகவில் இணைந்தார் கோவை தங்கம். அவருடன் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு முன்னாள் தமாகா நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். இதனால் தமாகா மிகவும் பலவீனமாக உள்ளது என ஜி.கே.வாசனுக்கு நெருக்கமானவர்களே கூறி வந்தனர்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு இன்று (ஜூலை 3) சென்னையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் காமராஜர். வரும் 15ஆம் தேதி அன்று அவரது பிறந்தநாளை, மாவட்ட தலைநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினத்தை கொரோனா விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட இருக்கிறோம். 100 சதவிகிதம் தடுப்பூசி அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை தமாகவினர் எடுத்துரைப்பார்கள். அதிக கூட்டம் இல்லாமல் மக்களிடம் தமாகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

திமுக ஆட்சி தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும் . கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையூறாக தமாகா இருக்காது.

மத்திய அரசு என்பதைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். சொல் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் பலத்தை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது. அதை மாற்ற முடியாது.

வரும் 5ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது, மாவட்ட, மாநில நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளேன். தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இந்த நேரத்தில் சுயநலத்துக்காகச் சிலர் விலகிச் சென்று இருப்பதால் கட்சிக்கு எந்த தொய்வும் ஏற்படப் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத் திட்டம் என்பது, வேறு கட்சிக்குப் போகும் நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் என்கிறார்கள் தமாகா நிர்வாகிகள்.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 3 ஜூலை 2021