மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ஏன் இந்த புறக்கணிப்பு !?

ஏன் இந்த புறக்கணிப்பு !?

ஸ்ரீராம் சர்மா

பாராளுமன்றத்தின் கல்விக்கான நிலைக்குழு வெளியிட்ட கீழ்கண்ட அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு கண்டு மனம் கொதித்துப் போனது. கருத்துக்களுக்கான கடைசி நாளை இப்போது ஜூலை 15 வரை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வந்த போதிலும் மனவேதனையைத் தவிர்க்க முடியவில்லை.

இதை மத்திய அரசின் அறிவிப்பு என்பதா அல்லது ஒன்றியத்தின் அறிவிப்பு என்பதா என்னும் கேள்வி இயல்பாகவே மூண்டெழுகிறதே !

வேத காலத்தில் வாழ்ந்த பெண் ஞானி கார்கியைத் தெரியும், வேதகாலத்து ப்ரம்மச்சாரிணி மைத்ரேயியைத் தெரியும். வரலாற்று நாயகி ஜான்ஸி கி ராணியைத் தெரியும். வணக்கத்துக்குரிய ராணி சென்னம்மாவைத் தெரியும். பெண் போராளி சாந்த் பிபியைத் தெரியும். ஜான்ஸியின் படைத்தளபதி ஜல்கரிபாயை கூடத் தெரியும்.

ஆனால், உலகின் முதல் பெண்கள் இராணுவத்தை தோற்றுவித்த, உலகில் முதன் முதலில் கெரில்லா போர்முறையை கொண்டு வந்த, உலகின் முதல் மனித வெடிகுண்டை அறிமுகப்படுத்தி அன்னியருக்கு அதிர்ச்சி அளித்த, ஃப்ரெஞ்சு, ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளை அறிந்த…

18 ஆம் நூற்றாண்டில் அன்னியரை எதிர்த்து தன் மண்ணை மீட்டுக் கொண்ட உலகின் ஒரே வெற்றி வரலாற்றுக்கு சொந்தக்காரியாக - இன்னும் பற்பல சாதனைகளைப் படைத்து விருப்பாட்சி மண்ணில் இயற்கையாக உயிர் நீத்த வீரத்தாயை சிவகங்கை வேலுநாச்சியாரைப் பற்றி தெரியாது என்றால் இது என்ன இந்தியம் ? எங்கே வாழ்கிறது தேசியம் ?

இந்த மண்ணுக்காக தியாகம் செய்த எவரையும் இந்தத் தமிழ்மண் பணிந்து வணங்கத் தவறியதே இல்லை. போலவே, தமிழ்மண்ணின் தனித்துவம் உரியமுறையில் இன்னமும் உயர்த்திப் பிடிக்கப்படவில்லை என்பதே எமது ஆதங்கம் !

இதில் வேதகாலத்து நாயகிகளைத் தவிர வரலாற்று நாயகிகள் அத்துனை பேரும் அன்னியர்களின் சூது போருக்குச் சிக்கிப் பலியாகிப் போனார்கள். ஆனால், வேலுநாச்சியார் மட்டுமே உலக வரலாற்றில் பகை வென்று நின்ற ஒரே மகாராணியாக ஜொலிக்கிறார்.

ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியார் வரலாற்றினை எனது பல்லாண்டுக்கால ஆய்வின் வழியே மீட்டெடுத்து அதனை ஓர் ம்யூஸிக்கல் தியேட்டர் வடிவத்தில் எழுதினேன்.

தமிழுக்காக எந்த ஈகத்தையும் செய்யத் துணியும் பெருந்தகை வைகோ அவர்களின் பேராதரவோடு - 60 கலைஞர்கள் கூடிய பிரம்மாண்ட நிகழ்வாக இயக்கி அரங்கேற்றி, பெரும் பொருட் செலவொடு சென்னை முதல் கலிங்கப்பட்டி வரை தமிழகத்தில் பல இடங்களில் நிகழ்த்தினோமே... அப்படியும் கூட வேலு நாச்சியாரின் மேன்மை தெரியவில்லையா ?

வேலுநாச்சியார் குறித்த எனது 15 ஆண்டுகால ஆய்வின் முடிவைக் குறித்தும் – வேலுநாச்சியார் என்பவர் தேசிய அளவில் கொண்டாடத்தக்க நட்சத்திரம் என்பதை வலியுறுத்தியும் - போற்றுதலுக்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்கள் முதற்கொண்டு, மரியாதைக்குரிய நிர்மலா சீதாராமன் அவர்கள் வரை கடிதங்களை எழுதினேன்.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஓர் போர்க்கப்பலுக்கு - இராணுவத்தில் பெண்கள் ரெஜிமெண்ட் ஒன்றிற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டி இந்தியத் தமிழ் மண்ணின், பெண்மையின் உன்னத வரலாற்றை உயர்த்திப் பிடிக்கும்படி மன்றாடி எழுதினேன். எந்தக் கடிதங்களையும் பார்க்க நேரமில்லையா அல்லது தென்னகத்தின் மீது பரிவு இல்லையா !?

வேலுநாச்சியார் ம்யூஸிக்கல் நிகழ்வை அமேரிக்காவில் கொண்டு சென்று பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சியாக நிலைநிறுத்தினோமே. அன்றெழுந்த அமேரிக்கத் தமிழர்களின் கூச்செரிந்த ஆரவாரமும் கேட்கவில்லையா?

வேலுநாச்சியார் வரலாற்று நிகழ்வை தலைநகர் தில்லியில் - தமிழ்ச்சங்கத்தில் அரங்கம் நிறைய நிகழ்த்திக் காட்டினோமே… மும்பையில் புகழ்பெற்ற சண்முகானந்தா சபாவில் நிகழ்த்தினோமே… அப்படியும் கூட எட்டவில்லையா ?

புகழுடைய பத்திரிக்கைகள் நடுப்பக்கத்தில் எழுதி உச்சி முகர்ந்தும் உண்மை வரலாற்றை உணரமுடியவில்லையா ?

சென்னைப் பல்கலைக்கழகம் – வேல்ஸ் பல்கலைக்கழகம் – எஸ்.ஆர்.எம். பல்கலைகழக அரங்கங்களில் வேலுநாச்சியாரின் உண்மை வரலாற்றினை ஆர்ப்பரித்து சொன்னோமே… அதுவும் போதவில்லையா ?

வேலம்மாள் பள்ளி - குருநானக் கல்லூரி - கிறித்துவக் கல்லூரி - ஏ.எம் ஜெயின் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ம்யூஸிக்கல் தியேட்டர் பயிற்சியினை அளித்து வேலுநாச்சியார் வரலாற்றை மேடையேற்றிக் கடத்தியும் கூட கவன ஈர்ப்பு இல்லையா ?

குருநானக் கல்லூரி வாய்ப்பினை அளித்த மத்திய அரசாங்கத்துக்கு மிக நெருக்கமான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களுக்கும் கூக்குரல் கேட்கவில்லையா ?

வேலம்மாள் கல்லூரி நிகழ்வில் வேலுநாச்சியார் வரலாற்றுக் காட்சிகளை கண்டுக் கண்கலங்கி நின்றவர் இன்று இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருக்கும் பாசத்துக்குரிய அக்கா தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அல்லவா ? இந்த மண்ணின் மேன்மையை - பெண்மையின் உச்ச வரலாற்றை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா ?

உலகநாயகியாக மாண்புமிகு எம்.எல்.ஏ வாக சட்டசபையில் வீற்றிருக்கும் வானதி ஸ்ரீநிவாசன் அவர்களும் வேலு நாச்சியார் படைப்பைக் கண்டு மெய்சிலிர்த்தவர்தானே ? ‘மேனி சிலிர்க்க செய்து விட்டீர்கள். எங்கள் கொங்கு மண்ணில் இதனை நிகழ்த்திக் கொடுங்கள்...’ என்றாரே…. அவருமா விட்டுக் கொடுத்து நிற்கிறார் வேலுநாச்சியாரை ?

தந்தி டிவியில் இருந்தபோது எனது வேலுநாச்சியார் ஆய்வை ஓங்கிப் பிடித்த பேரன்பிற்கினிய நண்பர் ரங்கராஜ்பாண்டே தனியாவர்த்தனம் செய்யும் இந்த தருணத்தில் தாயை விட்டுக் கொடுக்கலாமா ? அவரது ஜனன பூமியான ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சிவகங்கைக்கும் வெறும் நூறு கிலோமீட்டர்தானே ? விடாமல் மன்றாடி விடை காண வேண்டாமா ?

வேலுநாச்சியார் வரலாற்றில் இடம்பெற்ற குயிலியைப் பற்றித் தெருகூத்து ஒன்றை எழுதி அதை சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையின் முற்றம் அமைப்போடு அரங்கேற்றிக் காட்டியும்… காற்றைக் கிழித்த அந்தப் பறையொலி காதில் விழவில்லையா ?

இன்றைய பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி - பதினெட்டாம் நூற்றாண்டின் உடையாள் படையை மீட்டெடுக்க - கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து - சிவகங்கை மண்ணிலேயே – அந்த உடையாள் சன்னதி வாசலிலேயே உறுதிமொழி எடுத்த மாணவிகளின் ஓங்காரக் குரலும் கேட்கவில்லையா ?

வேலுநாச்சியாரின் உண்மை வரலாற்றினை – எனது நீண்ட நெடிய ஆய்வினை நான்கு மொழிகளில் மொழி பெயர்த்து ( தமிழ் – ஆங்கிலம் – ஹிந்தி – ஃப்ரெஞ்ச் ) அந்தப் புத்தகம் இந்தியாவின் முதல் பன்மொழிப் புத்தகமாக அச்சேறக் காத்திருப்பதைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதுகுறித்து அக்கறை இன்றி இருப்பது ஆச்சரியத்தையும் வேதனையையும் ஒரு சேரக் கலந்தடிக்கின்றது !

அரசியல்வாதியாக இருந்தால் அரங்கம் கடந்து விடலாம். கலைஞனாக இருப்பதால் இப்படி எழுதித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு.

இதோ, காலக் கொடையாக தமிழ்நாட்டில் தமிழை - தமிழ் மண்ணை – தமிழ்மண்ணின் பெருமைகளை உயர்த்திப் பிடிக்கும் உன்னத வரலாறு கொண்ட ஆட்சி மலர்ந்திருக்கிறது.

நியாயமானவைகளை நிறைவேற்றித் தரும் நமது போற்றுதலுக்குரிய முதலமைச்சரிடம் மிகப் பணிவோடு சில வேண்டுகோள்களை நம்பிக்கையோடு முன்வைக்கிறேன்.

தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற வெற்றித்திலகமான வேலு நாச்சியார் குறித்து பள்ளி , கல்லூரிகளில் தனிப்பாடம் வையுங்கள்.

தாய்மண் பற்றை, வீரத்தை, விவேகத்தை ஊட்டும்படியாக பெண் சாதனையாளர்களுக்கு வேலுநாச்சியார் பெயரில் விருது வழங்குங்கள்.

சென்னை ஓட்டேரியில், ஆங்கிலேயத்தின் அவமானச்சின்னமாக - இந்த மண்ணின் விடுதலையை எள்ளிக் கொண்டிருக்கும் ‘ப்ரிஸ்ட்லி நகர் செட்டில்மெண்ட்’ பெயரை மாற்றி அதற்கு ‘வேலு நாச்சியார் நகர்’ எனப் பெயர் மாற்றுங்கள்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டுங்கள்.

டெல்லி - தமிழ்நாடு இல்லத்தில் வேலுநாச்சியாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பி தமிழ் மண்ணின் உயர்வை ஒன்றியத்துக்கு பறைசாற்றுங்கள்.

வாழிய வேலு நாச்சியார் !

வாழிய தமிழ் மண்ணின் உண்மை வரலாறு !!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 3 ஜூலை 2021