மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

விளம்பரத்துக்காக பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது: தமிழக அரசு!

விளம்பரத்துக்காக பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது: தமிழக அரசு!

நீட் விவகாரத்தில் விளம்பரத்துக்காக பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நந்தினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நீட் குழுவுக்கு எதிரான வழக்கில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ” நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டதன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது மனுவில் தெரிவிக்கவில்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்த அவர், இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடவில்லை.

மனுதாரர் ஒரு மாணவரும் இல்லை, பெற்றோரும் இல்லை. அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள் பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அதிகாரத்திலும் அரசியல் சாசன அடிப்படை பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும். கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சியாகும்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருந்து வந்தது. 2006ம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது” என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ”நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களால், தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்தன. மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர்.

மருத்துவ படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யவும் ஒரு ஆய்வு நடத்துவது அவசியம் என்பதால் இந்த குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வு அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூற முடியாது.

ஏ.கே.ராஜன் குழுவின் விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படாத நிலையில், மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 3 ஜூலை 2021