மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

இனிதான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதார செயலாளர்!

இனிதான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதார செயலாளர்!

தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. வரும் மாதங்களில்தான் மக்கள் இன்னும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறதையடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் மீண்டும் தொற்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவை இன்று (ஜூலை 3) சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், முதல்வரின் அறிவுரைப்படி தொடர்ந்து போர்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 25 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கு கீழ் பதிவாகியுள்ளது. 13 மாவட்டங்களில் 100லிருந்து 500 என்ற அளவில் பாதிப்பு உள்ளது. எந்த மாவட்டங்களிலும் 500க்கு மேல் பாதிப்பு இல்லை.

இந்த நேரத்தில்தான் மக்கள் பொறுப்புடனும், கவனமுடனும் செயல்பட வேண்டும். ஜூலை 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் நேற்று அறிவித்தார். இந்த தளர்வுகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்ததால்தான் நமக்கு இரண்டாம் அலையே வந்தது. இரண்டாவது அலை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்றைக்கு 133 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 43,745 கொரோனா படுக்கைகளில் 3,282 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. பரிசோதனை, சிகிச்சை, தொடர்பில் இருப்பவர்களை கண்டறிதல் ஆகியவற்றை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஆங்காங்கே தொற்று அதிகரித்துள்ளது. உத்திரமேரூரில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 40 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அதனால், காய்ச்சல் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி, தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையாக கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா சார்ந்த வழிமுறைகளை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது.

கோவிட் கட்டளை மையத்தில் தற்போது தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை. அதனால், அலட்சியமாக இருக்கக் கூடாது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கொரோனா இறப்பை மறைப்பதாக சொல்கிறார்கள் அப்படி எதுவும் நடைபெறவில்லை. கொரோனா இறப்புகளை மறைத்து விட்டதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு.

இறப்புச் சான்றிதழ் படிவம் 6-ல் இறப்புக் காரணமே இருக்காது. கொரோனா நேரடி மரணம், கொரோனா இணைநோய் மரணங்கள் ஆகியவை ஐசிஎம்ஆர் விதிகளின்படி பதிவு செய்யப்படுகிறது. கொரோனா இணை நோயால் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் இறந்தால், பொதுமக்கள் மீண்டும் இறப்புச் சான்றிதழைத் திருத்திக் கொள்ளலாம். பொது சுகாதாரத்துறை இயக்குநர் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளிலிருந்து வரும் தரவுகளை வைத்து இறப்புகளைப் பதிவு செய்கிறார்.

டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப் போல் கொரோனாவை ஒழிக்கவும் செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் தொற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து அங்கு ஆய்வு செய்தபோது, பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாதது தெரிய வந்தது. மக்கள்தான் பொறுப்புடன் இருக்க வேண்டும். டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 3 ஜூலை 2021