மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

தேர்தல் ஹனிமூன் முடிந்துவிட்டது: ஆறு மண்டலங்களாகும் காங்கிரஸ்: அழகிரி பரபரப்பு!

தேர்தல் ஹனிமூன் முடிந்துவிட்டது: ஆறு மண்டலங்களாகும் காங்கிரஸ்: அழகிரி பரபரப்பு!

பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு வரலாறு காணாத விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து ஜூலை 7ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அகில இந்திய அளவில் போராட்ட வாரமாக அறிவித்து ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அனைத்து மாநிலத் தலைமைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டத் தலைவர்களையும் மாநில நிர்வாகிகளையும் நேரில் சத்தியமூர்த்தி பவனுக்கே அழைத்து இது தொடர்பாக நேற்று (ஜூலை 2) ஆலோசனை நடத்தினார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் 8 ஆம் தேதியன்று தமிழகம் முழுதும் ஆர்பாட்டம்-கையெழுத்து இயக்கம், 12 ஆம் தேதியன்று மாவட்டங்களில் சைக்கிள் பேரணி, 15 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் தவறான கொள்கைகள், எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் பெரிய அளவில் பேரணி என முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நகர்வுகள் பற்றிய முக்கியமான கருத்துகளையும் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, “காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பலப்படுத்தினால்தான் நாம் நமக்கு இத்தனை இடங்கள் என்று பேரம் பேச சரியாக இருக்கும். அமைப்பைப் பலப்படுத்தும் வேலைதான் இப்போது முக்கியம். இதற்கு முன் இருந்த அமைப்பு பலத்தை விட இப்போதைய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பலம் அதிகரித்திருப்பதால்தான் நாம் போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

எந்தக் கட்சி ஜெயித்தாலும் பரவாயில்லை காங்கிரஸ் ஜெயிக்கக் கூடாது என்று மீடியாக்களும், அதிமுக பாஜகவும் எவ்வளவோ பிரயத்தனம் செய்தனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் கூட்டணி தோற்றுவிடுமென்றும் நம் கூட்டணிக் கட்சியினரிடமே பயமுறுத்தினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி இத்தனை இடங்கள் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு காங்கிரஸாரின் உழைப்பு, கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு இரண்டும்தான் காரணம்.

தேர்தல் காலத்தோடு ஹனிமூன் முடிந்துவிட்டது . பாராட்டுரை காலம் முடிந்து இனி நமக்கு போராட்டக் காலம். காங்கிரஸின் இன்றைய ஒற்றை இலக்கு மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு அங்கே ராகுல் காந்தியை பிரதமராக அமர வைப்பதுதான். அதை நோக்கியதாகத்தான் நமது எல்லா பயணமும் இருக்க வேண்டும். அதற்குண்டான வேலைகளைப் பாருங்கள். நமக்குள் அடித்துக்கொள்ளும் சித்து விளையாட்டுகளையெல்லாம் ஓரமாக வையுங்கள்.

யாருக்கும் எந்த பதவியும் நிரந்தரம் கிடையாது. அதெல்லாம் தெரிந்துதான் இந்த அரசியலிலேயே இருக்கிறோம். இப்போது ஒரு முக்கியமான தகவலை சொல்கிறேன். தமிழக காங்கிரசை ஆறு மண்டலங்களாகப் பிரித்து ஆறு மண்டலத் தலைவர்களை நியமித்து அதிகாரத்தை பரவலாக்கப் போகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கே போட்டியிடும். கட்சியை வளர்க்க மாட்டோம் சீட்டு மட்டும் வேண்டுமென்றால் அது சரியாக இருக்காது. தொகுதியளவில் கட்சியை வளர்த்தால் உள்ளாட்சித் தேர்தலில் நிறைய இடங்களில் போட்டியிட முடியும். எனவே அமைப்பை வளப்படுத்தும் வேலைகளில் இறங்குங்கள். உங்களுக்குத் தேவையானதை நான் செய்து தருகிறேன்

இப்போதே என்னிடம் 200 பேர் வாரியத் தலைவர்களுக்காக விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். (மேடையை கையை காட்டி) இங்கே இருக்கும் அனைவரும் என்னிடம் வாரியத் தலைவர் பதவி கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். என்னால முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் கிடையாது. நம்மால் முடிந்ததை நாம் கேட்டுப் பெறுவோம்” என்று பேசி முடித்திருக்கிறார்

தேர்தல் தேனிலவு மூடிலேயே இருக்க வேண்டாம், அது முடிந்துவிட்டது என்று பேசிய அழகிரியே, “திமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்திச் செல்கிறார். குறிப்பாக டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது ஸ்டாலினின் சமூகப் புரட்சி. ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், சித்தாள்கள் என்று சிறுசிறு வேலைகளுக்கு செல்லும் பெண்களின் பஸ் கட்டணம் மிச்சமாகிறது.அதை அவர்கள் தங்கள் குடும்பத்துக்கே பயன்படுத்துவார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்துவிட்டார் ஸ்டாலின்”என்றும் திமுக ஆட்சியை இக்கூட்டத்தில் பாராட்டியும் பேசியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் பேசுகையில், “அழகிரி தலைவராக வந்த பிறகுதான் தமிழ்நாடு காங்கிரசின் வலிமை அதிகரித்துள்ளது. ஒரு வரலாற்று ஆசிரியரைப் போல காங்கிரஸின் கடந்த காலத்தைச் சொல்லி எதிர்காலத்தை வலிமைப்படுத்திட உணர்வு ரீதியாக நம்மைத் தயார் செய்கிறார்.

சமூக நீதிக்கான உரிமை கோர காங்கிரசை விட வேறு எந்தக் கட்சிக்கும் உரிமை கிடையாது. அரசியல் அமைப்பு சட்டத்தை இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் திருத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் நாம். பெரியார் சொல்லி காமராஜர்தான் அதை செய்தார். முழுக்க முழுக்க அதற்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் நாம்தான். இதை நாம் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். நீட் பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தமிழக பாஜக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. இந்த ஒரு வழக்கின் மூலமாகவே பாஜகவின் சுய உருவம் தமிழகம் முழுமைக்கும் புரிந்திருக்கிறது. சமூக நீதிக்கு சொந்தம் கொண்டாட வேண்டிய காங்கிரஸ் கட்சி நீட்டை எதிர்த்து தமிழக காங்கிரஸ் முழுமையாக போராட வேண்டும்” என்று பேசினார்.

தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பேசும்போது, “ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் யாரை கை காட்டுகிறார்களோ அவர்தான் நமக்குத் தலைவர். அந்த அடிப்படையில் தலைவர் அழகிரிக்குக் கட்டுப்பட்டு அவர் சொல்படி நடப்போம். அதைவிடுத்து நமக்குள் தேவையில்லாத குத்துச் சண்டைகள் எதற்கு? தமிழக காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்கு இணங்க சட்டமன்றத்தில் காங்கிரஸின் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்போம்” என்று பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளரான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-ராகவேந்திரா ஆரா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 3 ஜூலை 2021