மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது: அமைச்சர் பேட்டி!

கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது: அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

யூனிசெப், உலக சுகாதார அமைப்பு, மற்றும் பொதுச் சுகாதாரத் துறை இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருவான்மியூரில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூலை 2) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” சென்னையில் கொரோனா நோய் தொற்று சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் 10 வாகனங்களை இன்று தொடங்கி வைத்தோம். இதன்மூலம் கொரோனா பாதிப்பு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள்,தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். விரைவில் கிராமங்களிலும் இதுபோன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.

கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு. குறைந்த மக்கள் தொகை உள்ள மாவட்டங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முன்மாதிரியாக நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியரை முதல்வர் பாராட்டினார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை முற்றுக்கு வருகிற நிலை இருந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவது அரசின் கடமை.

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசித் தொழிற்சாலை என அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, இன்று தடுப்பூசி இல்லை என்று திமுக கைவிரிக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எந்த ஆட்சி மக்களை வஞ்சித்தது என்பது தெரியும். தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதமே தொடங்கப்பட்டுவிட்டது. மே 7ஆம் தேதிவரை அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. தற்போதைய ஆட்சியில் நாளொன்றுக்கு 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கடந்த ஆட்சியில் நாளொன்றுக்கு 61 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் இரண்டு மடங்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிற வேளையில், ஓபிஎஸ் இவ்வாறு சொல்வது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

தடுப்பூசி தயாரிப்பதற்கு செங்கல்பட்டில் உள்ள ஹெச்எல்எல் நிறுவனம் தயாராக இருந்தபோதும், அதை பயன்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு வரவில்லை. செங்கல்பட்டில் ஹெச்எல்எல் நிறுவனம் எங்கே இருக்கிறது என்றாவது அவருக்கு தெரியுமா? அதுபோன்று குன்னூரில் பாஸ்டியர் என்ற தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் இருக்கிறது என்றும், அது தடுப்பூசிகளை உற்பத்தி செய்து கொடுக்க தயாராக இருந்ததும் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக, கடந்த பத்தாண்டு காலமாக எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. ஆனால்,அதற்குள்ளேயே ஹெச்எல்எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும். அதுவரை ஓபிஎஸ் காத்திருக்க வேண்டும். அதுதான் அவருக்கும் அவரை சார்ந்த இயக்கத்துக்கும் நல்லது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கைந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நாளை கடலூர், நாளை மறுநாள் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். எதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும், பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் தொற்று எண்ணிகை குறைந்தவுடன் பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தற்போதுவரை நாள்தோறும் 1.60 லட்சம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 1,56,26,550 தடுப்பூசிகள் வந்துள்ளன. 1,48,64,430 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 8,16,890 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த மாதத்துக்கான 71 லட்சம் தடுப்பூசி தொகுப்பு வர வேண்டியுள்ளது.

இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை விவரமும் செய்திக்குறிப்பில் வெளியிடப்படும். திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக் கூடிய அரசு. ஒப்பந்தங்களாக இருந்தாலும், இடமாற்றங்கள் ஆக இருந்தாலும் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கும்” என்று கூறினார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 2 ஜூலை 2021