மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

சசிகலா- திமுக ஆட்சி: மனம் திறந்த எடப்பாடி

சசிகலா- திமுக ஆட்சி:  மனம் திறந்த  எடப்பாடி

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 1) காலை 11 மணி வாக்கில் சென்னையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு சென்றார்.

ஏற்கனவே ஜூன் 5 ஆம் தேதி தலைமைக் கழகத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இல்லாமலேயே சென்னையிலுள்ள கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போது, ‘ஓபிஎஸ் புது வீடு செல்வதால் அவரால் இன்று வரமுடியவில்லை. நல்ல நாள் என்பதால் நான் வந்தேன்’ என்று விளக்கம் அளித்தார் எடப்பாடி.

அதேபோல இம்முறையும் ஓபிஎஸ் இல்லாமலேயே சென்னையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் கூப்பிட்டு ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னையில் இருக்கும் மாசெக்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு, ஆர்.கே.ராஜேஷ், , ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் உள்ளிட்டோருடன் நடப்பு நிலவரம் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார் எடப்பாடி.

நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம், “ திமுக ஆட்சியை பற்றி வெறும் அறிக்கைதான் நாம விட்டுக்கிட்டிருக்கோம். பாருங்க தேமுதிக கூட போராட்டம் அறிவிச்சுட்டாங்க. நாமளும் நிறைய ஆர்பாட்டம் போராட்டம் பண்ணனும்”என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு அவர், “நீங்க சொல்றது ரைட்டுதான். திமுக காரன் ஆட்சியில்லாமல் பத்து வருஷம் கூட பொறுமையா இருக்கான். ஆனா நம்மளால ஒரு மாசம் கூட பொறுமையா இருக்க முடியல. மொதல்ல ஒரு ஆறுமாசம் அமைதியா இருப்போம். இப்பவே திமுக அமைச்சர்கள் அங்கங்க தப்பு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு துறை அமைச்சரும் கப்பத்தை அதிகாரிகள் மூலமா வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கனு எனக்கு தகவல் வந்துக்கிட்டிருக்கு. கொரோனா ஊரடங்கெல்லாம் முடியட்டும். அதுக்கப்புறம் நாம திமுக அரசை எதிர்த்து வலிமையா போராட்டம் ஆர்பாட்டம்னு நடத்தலாம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க”என்றவரிடம், சசிகலா விவகாரம் பற்றியும் பல நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள்.

அப்போது, “சசிகலாவை கண்டுக்கவே கண்டுக்காதீங்க. நாம பதில் சொல்லப்போயிதான் அவங்க பெரிய ஆளா ஆயிட்டிருக்காங்க. பிரஸ்ல கேக்கும்போது என்னால பதில் சொல்லாம இருக்க முடியாது. மத்தபடி அவங்களை பத்தி தேவையில்லாம நாம பேசிக்கிட்டிருக்க வேணாம். எல்லாம் காரணமாதான் சொல்றேன். எம்ஜிஆர் இறந்த பிறகு அம்மாவுக்கு டெல்லி சப்போர்ட் இருந்துச்சு. ராஜீவ் காந்தி அம்மா பின்னாடி ஸ்ட்ராங்கா இருந்தாரு. அம்மா இங்க கட்சியை கைப்பத்தறதுக்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமா இருந்துச்சு. ஆனா இப்ப நிலைமை வேற. அம்மா மாதிரி சசிகலாவும் இல்ல. அம்மாவுக்கு கிடைச்ச டெல்லி சப்போர்ட் அவங்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பில்லை. அதனால அந்த அம்மா கெளப்புற சலசலப்பெல்லாம் கொஞ்ச நாள்ல காணாம போயிடும்.

ஏற்கனவே நம்ம கட்சியில சேர்ந்த அமமுக நிர்வாகிகள்கிட்ட, அங்க இருக்கிற மொத்த கட்சி கட்டமைப்பையும் காலி பண்ண சொல்லியிருக்கேன். எல்லா நிர்வாகிகளையும் அதிமுகவுல இணைக்கச் சொல்லியிருக்கேன். அதேபோல நீங்களும் உங்க மாவட்டத்துல இருக்குற அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எல்லாரையும் நம்ம கட்சியில சேருங்க. அவங்களுக்கு தேவையானதை பண்ணித் தருவோம். வர்ற உள்ளாட்சித் தேர்தலுக்குள்ள அமமுகன்னு ஒரு கட்சியே இருக்கக் கூடாது. அதுக்கான வேலைகளைப் பாருங்க. ஆறு மாசத்துல திமுக அரசுக்கு சட்டமன்றத்துலயும், மக்கள் மன்றத்துலையும் அதிமுக ரொம்ப வலிமையான எதிர்க்கட்சியா செயல்பட்டு திணறடிக்கும். அதை பாக்கத்தான் போறீங்க” என்று பூஸ்ட் ஏற்றிப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், “எடப்பாடி பேசியதையெல்லாம் வைத்து பார்க்கும்போது கட்சியைக் கைப்பற்றுவதற்கான மெகா திட்டத்தை அவர் மெல்ல மெல்ல செயல்படுத்தி வருகிறார் என்றே தோன்றுகிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 2 ஜூலை 2021