மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

தகுதி நீக்கம்: சபாநாயகருக்கு காலக்கெடு நிர்ணயிக்க சட்டம்!

தகுதி நீக்கம்: சபாநாயகருக்கு காலக்கெடு நிர்ணயிக்க சட்டம்!

சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த மனுக்கள் மீது சபாநாயகர் முடிவெடுப்பதற்கான கால வரம்பை நாடாளுமன்றம் தான் புதிய சட்டம் இயற்றி வரையறுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அல்லது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை அது தொடர்பான வழக்குகள் போன்ற செய்திகளை தமிழ்நாடு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன நிலையில்... 18 எம்எல்ஏக்கள் தினகரனை ஆதரித்து எடப்பாடிக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போதைய அரசு கொறடா அளித்த புகாரின் பேரில் 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.

அதேநேரம் 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற மனுக்கள் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டது. அப்போதைய திமுக கொறடா சக்கரபாணியால் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை முன் வைத்திருந்தது. இவ்வழக்கில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என்று நம்புவதாக சொல்லி 2020 பிப்ரவரி 14 ஆம் தேதி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். ஆனால், சபாநாயகர் தனபால் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் எந்த ஆட்சியை எதிர்த்து வாக்களித்தார்களோ அவர்கள் அந்த ஆட்சியிலேயே துணை முதல்வராகவும் (ஓ.பன்னீர்செல்வம்) அமைச்சராகவும் (மாஃபா பாண்டியராஜன்) ஆட்சி முடியும் வரை பதவி வகித்தனர்.

இப்படியாக கடந்த நான்கு வருட தமிழ்நாட்டு அரசியலில் தகுதி நீக்கம் என்ற வார்த்தை முக்கியத்துவம் பெற்ற நிலையில்... மேற்கு வங்காளத்தில் இருந்து தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ரனஜித் முகர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில்... "சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சபாநாயகர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில்தான் தலைமை நீதிபதி என். வி. ரமணா மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு... “சபாநாயகரை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் எப்படி கூறமுடியும்? இது நாடாளுமன்றம் கவனிக்க வேண்டிய விவகாரம்"என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரமணா,"கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் நான் என்னுடைய கருத்தை ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறேன். அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதே கோரிக்கையை தன் வாதமாக வைத்தார். ஆனால் அப்பொழுதே நாங்கள் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விட்டு விட்டோம். அந்த வழக்கின் தீர்ப்பை படித்தீர்களா இல்லையா?" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் அபிஷேக் ஜெபராஜ், “அந்த தீர்ப்பைமுழுமையாக வாசிக்கவில்லை என்று தெரிவித்தார், "அதை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள். இந்த வழக்கை இரண்டு வாரங்கள் கழித்து விசாரிக்கிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, சபாநாயகர்கள் தகுதி நீக்க புகார்கள் குறித்து முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்து சட்டம் கொண்டுவரப்பட்டால், சபாநாயகராக இருப்பவர் ஆளுங்கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டு, தங்களுக்கு ‘வேண்டிய’ தகுதி நீக்க புகார்கள் மீது மட்டும் முடிவெடுக்கும் அவலம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 1 ஜூலை 2021