மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

’நீட்’ டுக்கு விலக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

’நீட்’ டுக்கு விலக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் மற்றும் மாற்று வழி குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.

திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி., விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில துணை செயலாளர் மு. வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் சார்பில் பீமாராவ், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமூக நீதி பேரவை சார்பில் சற்குணம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட 32 கட்சி மற்றும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில்,

'2007ஆம் ஆண்டு தனிச் சட்டத்தின்மூலம் நுழைவுத் தேர்வை ஒழித்ததின் காரணமாக, பலன் அடைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின், ஏழை, எளிய, அடித்தட்டு மாணவர்களின் டாக்டர்களாகும் மருத்துவக் கனவு நிறைவேறி, பலரும் இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபல டாக்டர்களாக சிறப்பாக விளங்கி வருகிறார்கள்.

'நீட்' தேர்வு தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களுக்கு மாறாக, ஊழல், ஆள் மாறாட்டங்கள், கேள்வித்தாள் குளறுபடிகளும் காணப்பட்டன. பயிற்சி மய்யங்களில் ஏராள பணம் செலவழித்துப் படித்த, வாய்ப்பும் வசதியும் உள்ளோர்தான் 'நீட்'டில் பெரும் அளவு வெற்றி பெற்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு (CMET) பொது மருத்துவ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வைப் பரிந்துரைத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கை கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைக் கணக்கில் கொண்டு, CMET தேர்வுக்கு ''விலக்கு'' கேட்கும் மாநிலங்களுக்கு ''விலக்கு'' அளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

மேலும் கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, மார்டன் டெண்டல் கல்லூரி வழக்கில் 2016 இல் வழங்கிய தீர்ப்பில், மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைபற்றி மாநில அரசு சட்டம் இயற்றலாம் என்றும், குடியரசுத் தலைவரின் (ஒன்றிய அமைச்சரவை) ஒப்புதல் பெற்றதும் அச்சட்டம் அமுலுக்கு வரும் என்றும் கூறியது.

மேற்சொன்ன நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் தமிழ்நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்பதற்கு, தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இந்த உரிமையை ஒன்றிய அரசு ஏற்பதுதான் ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உகந்தது.

கிராமப்புற மக்களைக் கரை சேர்க்க ஒரே வழி - 'நீட்' தேர்வை ரத்து செய்வதே என்ற அடிப்படையில் நடந்து முடிந்த தேர்தலிலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு (Mandate) தந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், தி.மு.க. அரசு அதை ஒரு கொள்கை முடிவாக (Policy Decision) ஆளுநர் உரையிலேயே அறிவித்துள்ளது.

மக்கள் தீர்ப்பே ஜனநாயகத்தில் இறுதியானது என்பதால், அதனை செயல்படுத்த உள்ள வாய்ப்பு களை ஆராய்ந்து கருத்து உரைக்குமாறு, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. அக்குழு இன்னமும் அறிக்கை தராத நிலையில், பா.ஜ.க.வின் சார்பில் அப்படி ஒரு குழு அமைத்தது சட்டப்படி செல்லாது என வழக்காட முன்வந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

காரணம், இறையாண்மை (Sovereign) அதிகாரம் என்பது மக்களிடமிருந்து பெறப்படுகிறது என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் குறிப்பிடப்பட்டு இருப்பதோடு, அதில் வழங்கப்பட்டுள்ள மூன்று நீதிகளில் சமூகநீதியே முதலிடம், முன்னுரிமை பெற்றுள்ள நிலையில், 'நீட்' தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியைப் பாதிக்கும் காரணத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் தேடி, பாதுகாக்க வேண்டிய மகத்தான கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

அதன் காரணமாக, 'நீட்' தேர்வின் தாக்கம்பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கும் உரிமை - மாநில அரசின் மறுக்கப்பட முடியாத உரிமை அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையும், பொறுப்பும் ஆகிறது.

எனவே, பா.ஜ.க. போட்டுள்ள வழக்கு நியாயமற்றது மட்டுமல்ல, சட்ட விரோதமும், மக்கள் விரோதமும் ஆகும் என்று இக்கூட்டம் கருதுவதால், மக்கள் குறைதீர்க்கும் வகையில் 'நீட்' தொடர்பாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இக்கூட்டம் ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசின் நிலைப் பாட்டை உறுதியாக ஒவ்வொரு கட்சியும், இயக்கமும் தனித்தனியாக அதனை ஆதரிக்கும் வகையில், அவ்வழக்கில் தங்களை இணைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதியைப் பாதுகாக்கத் தக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் ஒருமனதாய் இக்கூட்டம் முடிவு செய்கிறது;

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியதையும் முக்கியமாகப் பரிசீலித்து - ஏற்கெனவே ஓராண்டு தமிழ்நாட்டுக்கு 'நீட்'டிலிருந்து விலக்கு அளித்ததை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு 'நீட்'டிலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் வகையில் முடிவெடுத்து அறிவிக்குமாறு ஒன்றிய அரசின் பிரதமரை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ் நாடு அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு செயல்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி, பா.ஜ.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், ''சாதாரண, அதற்கும் குறைவான அறிவுடையவர்கள்கூட 'நீட்' தேர்வு இல்லையெனில், மருத்துவர்கள் ஆகிவிடக் கூடும்'' என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்பு, வெகுமக்களை இழிவுபடுத்துவதாகவும், ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே கல்வி உரியதென்று மறைமுகமாகக் குறிப்பிடுவதாகவும் உள்ளது. இதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 1 ஜூலை 2021