மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் என்பவரின் மகன் முத்துமனோ. பணகுடியில் இளைஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் போலீசார் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு, சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி முத்துமனோ ஏப்ரல் 22ஆம் தேதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துமனோவின் உறவினர்கள், அவரின் உடலை வாங்க மறுத்து 70 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில், ஜூலை 2ஆம் தேதி மாலை 3 மணிக்குள் முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் 7 மணிக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூலை 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்தினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கானது குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 1 ஜூலை 2021