மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

செந்தில்பாலாஜி வீட்டுக்குப் படையெடுக்கும் அமமுக புள்ளிகள்!

செந்தில்பாலாஜி வீட்டுக்குப் படையெடுக்கும்  அமமுக புள்ளிகள்!

கடந்த ஜூன் 25 ஆம் தேதி அமமுகவைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் செந்தில்பாலாஜியின் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தனர்.

அவர்கள் மட்டுமல்ல அமமுக புள்ளிகள் பலரையும் தற்போது திமுகவுக்குள் கொண்டுவரும் ஸ்பெஷல் அசைன்மென்ட்டை தனக்குத் தானே ஏற்றுக் கொண்டு அந்த வேலைகளை ஒருபக்கம் தீவிரமாக்கியிருக்கிறார் மின் சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அக்கட்சியில் பலரும் அவரால் பதவி பெற்றனர். ஒரு கட்டத்தில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜி இப்போது அமைச்சர் ஆகிவிட்டார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் ஒரு அங்கமாக இருந்து தற்போது அமமுகவில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் அதுவும் கடந்த ஆட்சியில் தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சக எம்.எல்.ஏ.க்களை தானே தொடர்புகொண்டு பேசுகிறார் செந்தில்பாலாஜி.

‘நீங்க அங்க இருந்து கஷ்டப்படுறது எனக்குத் தெரியும், இப்ப அதிமுகவுக்கு போறதும் நல்லதில்லை. அதனால திமுகவுக்கு வாங்க நான் பாத்துக்கறேன்’ என்ற செந்தில்பாலாஜியின் வார்த்தைகளை நம்பி அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவுக்கு அணி வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மானாமதுரை மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். அவர்கள் ஜூன் 25 ஆம் தேதி திமுகவில் இணைவதற்காக அறிவாலயம் செல்லும் முன் செந்தில்பாலாஜி வீட்டுக்குச் சென்றபோது அங்கே சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபனை பார்த்திருக்கிறார் மாரியப்பன் கென்னடி. இதுகுறித்து மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அந்த 18 பேரில் ஒருவரான திருப்பத்தூர் அமமுக மாவட்டச் செயலாளரும், ஆம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலசுப்பிரமணியை ஜூன் 28 ஆம் தேதி அழைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.

அவரது அழைப்பின் பேரில் அமமுகவின் வேலூர் ஒன்றிய செயலாளர் சக்திவேலின் காரில் சென்னை சென்றிருக்கிறார் ஆம்பூர் பாலசுப்பிரமணி. செந்தில்பாலாஜியை சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

ஏற்கனவே மாரியப்பன் கென்னடியும், ஜெயந்தியும் திமுகவுக்கு சென்றது சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் உடனே தற்போது தனது ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு போன் போட்டுப் பேசி வருகிறார். அந்த வகையில் ஆம்பூர் பாலசுப்பிரமணியிடமும் பேசியிருக்கிறார். செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் சசிகலாவிடமும் பேசியிருக்கிறார் பாலசுப்பிரமணி. சசிகலாவே அதிகம் பேசும் நிலையில், ‘ஆமாம்மா...ஆமாம்மா, சரிம்மா சரிம்மா என்று சொல்கிறாரே தவிர அவர் வேறு எதுவும் பேசவில்லை.

தினகரனுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பலர் இப்போது செந்தில்பாலாஜியின் நெருக்கத்தில் இருக்கிறார்கள். இதுகுறித்து அமமுகவின் மாவட்டச் செயலாளர் சிலரிடம் பேசினோம்.

“அவங்க வேறு என்ன செய்வாங்க...? அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதுவும் அம்மா இல்லாமல் எடப்பாடி முதல்வராக இருந்தபோது என்ன டிமாண்ட் வைத்தாலும் கிடைக்கும் என்ற சூழல் இருந்தபோது அவை எல்லாவற்றையும் மறுத்து தினகரனுக்காக எம்.எல்.ஏ.பதவியை இழந்தார்கள். அமமுகவுக்கு பயங்கரமாக செலவு செய்தார்கள். ஆனால் இன்று அவர்களை தினகரன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்கள் விரக்தியாக இருக்கிறார்கள் என்ற தகவல் தனக்குக் கிடைத்ததும் அவர்களைத் தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று கூட தினகரன் நினைக்கவில்லை.

இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி அவர்களை அழைத்து தன் வீட்டில் விருந்துகொடுக்கிறார். ‘உங்க நிலைமை எனக்குத் தெரியும்’என்று பேசுகிறார். அவரது ப்ராக்டிகல் அரசியலில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவர்கள் திமுக பக்கம் போகிறார்கள். கடந்த நான்கு வருடம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து செய்துகொள்ள முடியாததை இப்போது செந்தில்பாலாஜி மூலம் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். மேலும் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிற நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனத்தை இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்தி அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலில் காலி செய்யும் வியூகமும் இருக்கிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 1 ஜூலை 2021