மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

தமிழகமே தாய்வீடு: திரிபாதி உருக்கம்!

தமிழகமே தாய்வீடு: திரிபாதி உருக்கம்!

தமிழகமே தாய்வீடு எனப் பணி நிறைவு நாளில் முன்னாள் டிஜிபி திரிபாதி உருக்கமாகப் பேசினார்.

தமிழகத்தின் 29ஆவது டிஜிபியாகப் பொறுப்பேற்ற திரிபாதியின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. புதிய டிஜிபியாக ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு நேற்று (ஜூன் 30) பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்குத் தமிழக காவல்துறை சார்பில் பணி நிறைவு விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் டிஜிபி திரிபாதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருக்குத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, திரிபாதிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்தப் பணி நிறைவு விழாவில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி திரிபாதி, “1985ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தேன். 36 ஆண்டுகளாகப் பல பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளேன். எனது காவல் பணியைச் சிறப்புற நிறைவு செய்ய வழிவகை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் வணக்கங்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த 36 ஆண்டுக்காலத்தில் எனது பணியினை பொது மக்கள் நலன் கருதியும் காவல்துறையின் நன்மதிப்பை மேம்படுத்துவதிலும் தமிழக அரசின் எண்ணங்களைச் செயல்படுத்துவதிலும் முழுமனதோடு செயலாற்றினேன். என்னால் முடிந்தவரை மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் பணியாற்றினேன்.

என்னுடைய பணி காலத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு என்னுடன் உறுதுணையாக இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

ஒடிசாவில் பிறந்து டெல்லியில் படிப்பை முடித்து 1985ஆம் ஆண்டு தமிழகத்துக்குப் பணி நிமித்தமாக வந்த எனக்கு இன்று தமிழகமே எனது தாய் வீடாக மாறியுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே இருந்து என்னால் முடிந்த பணிகளைக் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் செய்வேன் என்று தெரிவிக்க விரும்புகிறேன்” என உருக்கமாகப் பேசினார்.

புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, “காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பைக் கொடுத்துப் பெருமைப்படுத்திய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற்ற டிஜிபி, தனித் திறமை மற்றும் சிறந்த பண்புகளைக் கொண்டவராகத் திகழ்ந்தார். துணை ஆணையர், ஆணையர் என எந்த பதவியாக இருந்தாலும் அவரது கடமையைச் சிறப்பாகச் செய்து சிறந்த தலைவரானார். ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தப்பியோடிய கொள்ளையனை அவரே துரத்திப் பிடித்தார். முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு மகிழ்ச்சியான ஓய்வுக் காலம் அமைய மனமார வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

அதுபோன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “காவல்துறையினரின் சாணக்கியரான திரிபாதி, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று மாலை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் புதிதாகப் பொறுப்பேற்ற டிஜிபி சைலேந்திரபாபு இருவரும் சந்தித்தனர்.

முதலமைச்சரிடம் டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தான் எழுதிய ‘உங்களுக்கான 24 போர் விதிகள்’ என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். அது போன்று ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதியும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 1 ஜூலை 2021