மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

டிஜிபி சைலேந்திரபாபு: தமிழிசையின் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

டிஜிபி சைலேந்திரபாபு: தமிழிசையின் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் நேற்று (ஜூன் 30) பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுமென்றும் புதிய டிஜிபி தெரிவித்திருக்கிறார். சமீப காலமாக காவல்துறையினர் சர்ச்சைகளில் சிக்குவது தொடர்ந்து வருகிறது என்பதால் இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் டிஜிபி.

பொதுவாகவே ஓர் உயர் பதவி என்றால் அதற்காக திறமையுள்ள பலர் போட்டி போடுவார்கள், பலர் காய் நகர்த்துவார்கள். ஆனால் அப்பதவி ஒருவருக்கே சென்று சேரும். கட்சிப் பதவியாக இருந்தாலும் சரி, ஆட்சிப் பதவியாக இருந்தாலும் சரி, காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க பதவிகளாக இருந்தாலும் சரி... அந்த பதவியை பெற்றவர் மீது சர்ச்சை நிழல் படியாமல் போகாது.

இந்த வகையில் புதிய டிஜிபி நியமனத்திலும் ஒரு சர்ச்சை, சலசலப்பு அரசியல் வட்டாரங்களிலும் காவல்துறை வட்டாரங்களிலும் மெல்ல மெல்ல வீசிக்கொண்டிருக்கிறது. டிஜிபி என்ற பொறுப்புக்கு எல்லா வகையிலும் தகுதியானவர்தான் டாக்டர் சைலேந்திரபாபு. ஆனாலும் இந்த நியமனத்தில் ஒரு சாதிச் சர்ச்சை காவல்துறை வட்டாரங்களில் நேற்று முதல் பரபரத்து வருகிறது.

“பொதுவாகவே காவல்துறையில் அதிகாரம் மிக்க பதவி என்பது உளவுத்துறை ஏடிஜிபி பதவி. நினைத்தவுடன் முதல்வருடன் பேச முடிகிற, அரசின் கொள்கை முடிவுகளின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை, ஆலோசனை சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிற முக்கியமான பதவி உளவுத்துறை ஏடிஜிபி. அந்த பதவிக்கு இந்த ஆட்சியில் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவர் கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்,

இந்த நிலையில் சமுதாய பிரநிதித்துவத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் இந்து நாடார் சமுதாயமான சைலேந்திரபாபுவுக்கு டிஜிபி பதவி கிடைக்காது என்று காவல்துறையிலேயே சிலர் கணக்கு போட்டு அதற்கேற்ற மாதிரி முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால் டிஜிபி பதவிக்கு சைலேந்திரபாபுவே நியமிக்கப்பட்டார். இதனால் தமிழக காவல்துறையின் இரு மிக முக்கிய அதிகாரப் பதவிகள் கிறிஸ்துவ நாடார், இந்து நாடார் என்று நாடார் சமுதாயத்துக்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற புகை போலீஸ் வட்டாரத்திலேயே பரவ ஆரம்பித்தது.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் டிஜிபி பதவிக்காக ஷகில் அக்தரை நியமிக்க இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆலோசித்திருக்கிறார். தேர்தலில் தனக்கு பெருவாரியாக வாக்களித்த சிறுபான்மையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் டிஜிபி பதவியை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த அதிகாரியான ஷகில் அக்தருக்கு வழங்கலாம் என்றுதான் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனைகள் நடந்தன.

ஆனால் அந்த நிலையில்தான் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவரும், மோடி- அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் வீடு தேடிச் சென்று சந்தித்தார். முதல்வர் பதவியேற்று பல நாட்கள் ஆன பிறகு நடந்த இந்த சந்திப்பு ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்குப் பிறகு நடைபெற்றது. டெல்லி பயணத்தின் நீட்சியாக இந்த சந்திப்பு அமைந்தது என்று அரசியல் வட்டாரத்தில் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் டிஜிபி பற்றியும் பேசப்பட்டிருக்கிறது என்றும், அதன் அடிப்படையிலேயே சைலேந்திரபாபு நியமனம் நடைபெற்றிருக்கிறது என்றும் வெள்ளை மாளிகையலேயே பேசி வருகிறார்கள்” என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகளிலேயே சிலர்.

எந்த பதவியாக, எந்த நியமனமாக இருந்தாலும் அதில் சர்ச்சைகளும் சலசலப்பும் எழும். ஆனால் சைலேந்திரபாபு நியமனம் பலதரப்பாலும் வரவேற்கப்படும் நிலையில், டிஜிபியாக அவரது செயல்பாடுகள் மூலம்தான் இந்த சர்ச்சை மெய்யா பொய்யா என்று தெரியவரும்.

வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 1 ஜூலை 2021