மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

‘தரமே தாரக மந்திரம்’: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

‘தரமே தாரக மந்திரம்’: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

சாலைகள் அமைப்பதில் தரமே நிரந்தரம் - அதுவே தாரக மந்திரம் என்பதை மனதில் வைத்துப் பணிகளைச் செய்திட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று (ஜூன் 30) சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள், பெருநகரம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - 2, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை எல்லைச் சாலை போன்ற பணிகளுக்கான மாநில அளவிலான ஒப்பந்ததாரர்களுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகள் தொடர்பாகவும், சாலைகள் தரமானதாகவும், விரைந்து முடித்திட அறிவுறுத்தியும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கி.மு.4ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மௌரியப் பேரரசு காலத்தில்தான் சாலைகளை 'ராஜபாட்டை' என்றும் 'பஞ்ச பாதை' என்றும் பிரித்து அழைத்தனர். இமயம் முதல் குமரி வரை உள்ள வழிபாட்டுத் தலங்கள் இணைக்கத்தான் அந்தக் காலத்தில் அரசர்கள் பாதையை அமைத்துள்ளனர்.

தென்னகத்தைப் பொறுத்தமட்டில், உஜ்ஜயினியிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஆன்மிக நகரங்களை இணைத்துப் பாதைகள் அமைத்தனர். அதற்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் 1785ஆம் ஆண்டுதான் இம்பீரியல் சாலைகள் என்றும் டிரங்ரோடு என்றும் பிரதான சாலைகளை அமைக்கத் தொடங்கினர். 1927ஆம் ஆண்டு நியமித்த எம்.ஆர்.ஜெய்கர் கமிட்டி பரிந்துரையில் ஐ.ஆர்.சி இந்திய சாலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

1933ஆம் ஆண்டு ஏ.விப்பன் கமிட்டி பரிந்துரைகளைப் பெற்று சாலைகளின் வகைப்பாடுகள் உருவாக்கப்பட்டன. 1943ஆம் ஆண்டு ஹெச்.ஆர்.டோக்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரை பெற்று இன்றைய நெடுஞ்சாலைத் துறை உருவாக்கப்பட்டது. 1845-ல் சென்னை ராஜதானியில், சென்னை - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் சாலையும், சென்னை - வேலூர் - தருமபுரி - சேலம் - கொச்சின் சாலையும் அமைக்கப்பட்டது.

இந்தியாவில் நிலத்தின் தரமும் தட்பவெட்ப நிலையும் மாறுபாடாக உள்ளதால், அந்தந்தப் பகுதிக்குத் தக்கவாறு ஆய்வகம் அமைக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு சென்னையில் பி.ராமசாமி ரெட்டியார் எடுத்துக்கொண்ட முயற்சியில் 'நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்' தொடங்கப்பட்டது. அதனால்தான் தற்பொழுது தரமான சாலைகள் அமைக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.

சாலைகள்: மனித நாகரிகத்தின் முக்கியப் பங்கு

தொடர்ந்து பேசிய அவர், “1752ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயிண்ட் தாமஸ் மலை வரை உள்ள மவுண்ட் ரோடு அமைக்கப்பட்டது. முதன் முதலாக கருங்கல் ஜல்லியுடன் கிராவல் சேர்த்து கப்பி சாலையாக அமைக்கப்பட்டது.

அரசாங்கத்தாலேயே துறை மூலமாகவே செய்யப்பட்டு வந்த வேலைகளை ஒப்பந்தக்காரர் மூலம் செயலாக்கலாம் என்ற அடிப்படையில் முதன் முதலாக 1860ஆம் ஆண்டு நெல்லையில் நம்பி ஆற்றின் மீது தளபதி சமுத்திரம் அருகில் பாலம் ஒன்று ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்டது. 1882-ல் எல்பின்ஸ்டன் என்ற கவர்னர் கோட்டையிலிருந்து அடையாறு வரை சாலை அமைத்து அடையாற்றின் குறுக்கே பாலம் கட்டினார். அது அவர் பெயரிலேயே எல்பின்ஸ்டன் பாலம் என்று அழைக்கப்பட்டது. 1918-ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு தென்னகத்திலேயே முதன்முதலாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்

01.04.1946-ல் நெடுஞ்சாலைத்துறை உருவாக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் 01.07.1973-ல் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 1973-ல் நெல்லையில் ரூ.47 லட்சத்தில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. கோவையில் 10.01.1974-ல் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. பாம்பன் கடல் மீது ரூ.18 கோடி மதிப்பில் பாம்பன் மேம்பாலத்தை கட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.

உலகத் தரம் வாய்ந்த சாலைகளை அடித்தளம் இட்டவர் கருணாநிதி. 09.05.1997-ல் கருணாநிதி, மத்திய சுடுகலவை இயந்திரம், அதிர்வு உருளை, மற்றும் பேவர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த சாலைகளை அமைக்கும் பணிகளைத் தமிழகத்தில் செயல்படுத்திட ஆணை பிறப்பித்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதி நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் ஒப்பந்தக்காரர்களையும், மற்றும் அனைத்து ஒப்பந்தக்காரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் 'தரமே நிரந்தரம் - இதுவே தாரக மந்திரம்' என்பதை நினைவில் வைத்துப் பணிகளைச் செய்திட வேண்டும்" என்று கூறினார்.

-பிரியா

புதிய 5 மேம்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 1 ஜூலை 2021