மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

நீட் குழு ஒரு ஏமாற்று வேலை: எதிர்க்கட்சியினர்!

நீட் குழு ஒரு ஏமாற்று வேலை: எதிர்க்கட்சியினர்!

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது ஏமாற்று வேலை என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு தமிழ்நாடு அரசால் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று(ஜூன் 30) செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம்,” தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என்பதுதான் அதிமுக, திமுக என்ற இரண்டு கழகங்களின் நிலைப்பாடு. ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசினால் இந்தியா முழுவதும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதனை எதிர்த்து அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நீட் தேர்விலிருந்து மாணவர்கள் காப்பாற்றப்படுவது எப்படி? இரண்டுவழிதான் இருக்கிறது. ஒன்று, பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மற்றொன்று, விருப்பப்படும் மாநிலங்கள் மட்டும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட திருத்தத்தை கொண்டு வரலாம். இது பாராளுமன்றத்தில்தான் கொண்டுவரப்பட வேண்டும். மாநில அரசுகளால் கொண்டுவர முடியாது. அப்படியே பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவந்தாலும், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். இதுதான் நடைமுறை. இது அனைவருக்குமே தெரிந்தது.

இதைத்தான் அன்று அதிமுக அரசும், நானும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினிடம் கூறினோம். அதற்கு ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் சட்டத்தை நீக்குவோம் என்றார். உங்கள் திட்டத்தைச் சொல்லுங்கள், நாங்கள் செயல்படுத்துகிறோம் என்றதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பதில் சொல்லவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அளிக்கும் பரிந்துரைகளால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லுபடியாகாமல் செய்ய முடியுமா என்பதை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

”தெரிந்தே தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் வேலையை இந்த அரசு செய்து கொண்டு வருகிறது. நீட் தேர்வு இல்லாத 2007 முதல் 10 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 74 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். நீட் தேர்வு வந்தபின்பு 2 ஆண்டுகளில் 9 பேர் சேர்ந்தனர். ஆனால், அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினோம். அதனால் அரசு பள்ளியில் படித்த 450 மாணவர்கள் வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது. நீட் வந்ததால்தான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். எங்கள் அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. இந்த ஆண்டும் 550 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நீட் இருந்தால்தான் இந்த இட ஒதுக்கீடு சாத்தியம். இல்லை என்றால் 7.5 சதவீதமும் அடிபட்டுவிடும். இங்கு மோடி வந்தால் 'Go Back' என்று சொல்வதை விட, உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீங்கள் டெல்லி சென்று போராடி சட்டத்தை பெற்று தந்தால் நல்லது.

குழு அமைத்து நீட் பாதிப்பு குறித்து ஆராய உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளீர்களா என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. தெரிந்தே மக்களை ஏமாற்றுகின்றனர். ஆட்சிக்கு வந்தபின்னரும் ஏன் மாணவர்களை குழப்புகிறீர்கள். சொன்ன வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மாணவர்களை குழப்ப வேண்டாம்” என்று பேசினார்.

சேலம், ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிவிட்டு, தற்போது முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் செயல்படுத்த முடியும் என தெரிந்தும், குழு அமைத்து கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனால், மாணவர்கள் நீட் தேர்வு நடைபெறுமா இல்லையா என குழப்பத்தில் உள்ளனர். இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என பேசினார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதன் 30 ஜுன் 2021