மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன்: முதல்வர்!

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன்: முதல்வர்!

தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹூண்டாய் ஆலை உருவாக்கிய ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். ALCAZAR காரை அறிமுகம் செய்து வைத்து அந்த காரில் முதல்வர் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய அவர், 1996ஆம் ஆண்டு ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். கார் தயாரிப்பில் மட்டுமின்றி சேவை மனப்பான்மையிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை உலக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றியதில் இந்நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

ஹூண்டாய் நிறுவனத்தைப் போன்று மற்ற நிறுவனங்களும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு. தமிழகத்தின் மீது உலக நாடுகளின் கவனம் குவியும் வகையில் திட்டங்களை வகுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், பழைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தொழில் வளர்ச்சியில் இந்திய அளவில் 5 ஆவது மாநிலமாக இருந்த தமிழகத்தை மூன்றாவது இடத்துக்குக் கொண்டு வந்தார். அதுபோல இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக நான் மாற்றுவேன்” என்று உறுதி அளித்தார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 30 ஜுன் 2021